Wednesday, December 29, 2004

வாழ்த்துக்கள்எல்லோருக்கும் எனது னி கிறிஸ்துமஸ்(கொஞ்சம் லேட்டான) மற்றும் புத்தாண்டு(Advance) வாழ்த்துக்கள்.

Wednesday, December 22, 2004

காமன் ஸென்ஸா? அப்படின்னா?!?!

போன வாரம் கேட்ட கேள்விகள் அறிவியலோட சம்பந்தப்பட்டதுன்னுதான் நினைச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா ரோஸா வசந்த் இதுக்கெல்லாம் காமன் ஸென்ஸ் வேணும் அப்படின்னுட்டார். அதுலேருந்து எனக்கு காமன் ஸென்ஸ்னா என்னன்னு ஒரே குழப்பமா போச்சு. அடுத்த பின்னூட்டதிலேயே, முதல் கேள்வி மட்டும் அறிவியல், இரண்டாவது கேள்வி காமன் ஸென்ஸ்னு போட்டு கூடகொஞ்சம் குழப்பிட்டார். நான் இதை ஒரு அறிவியல் புத்தகத்தில்தான் படித்தேன். அதனால் இவை அறிவியல் கேள்விகள் என்று நினைத்து விட்டேன்.

இரண்டுக்குமே ஆர்க்கிமீடிஸ் விதிதான் ஆதாரம். அப்படியிருக்கும்போது முதல் கேள்வி மட்டும் அறிவியலாகவும், இரண்டாவது காமன் ஸென்ஸாகவும் எப்படியிருக்கும் என்று எனக்குப் புரியவில்லை. அவர் விடை அளித்திருந்தாலாவது, அவருடைய Point of View எனக்குப் புரிந்திருக்கும்.

முதல் கேள்விக்கான விடை : இரண்டு வாளிகளின் எடையும் சமமாகத்தான் இருக்கும். மரத்துண்டு சிறிதளவு நீரை இடம் பெயர்த்துவிடுவதால், முதல் வாளியைவிட இரண்டாவது வாளியில் நீர் குறைவாயிருக்கும் என்பது உண்மையே. ஆனால் மேற்சொன்ன விதிப்படி, மிதக்கும் பொருள் ஒவ்வொன்றும், தான் மூழ்கியிருக்கும் பகுதியினால் இப்பொருள் முழுவதன் எடைக்குச் சமமான அளவு திரவத்தை இடம் பெயரச் செய்கிறது. எனவேதான், தராசின் தட்டுகள் சமநிலையில் இருக்கின்றன.

இரண்டாவது கேள்விக்கான விடை : ஒரு டன் மரம்தான் அதிக கனமுள்ளது. இங்கேயும் மேற்சொன்ன ஆர்க்கிமிடிஸ் விதிதான் Apply ஆகிறது. ஆர்க்கிமிடிஸ் விதி வாயுக்களுக்கும்(Gases) பொருந்தும் என்பதால், காற்றில் ஒவ்வொரு பொருளும் தனது எடையில் ஒரு பங்கை இழக்கிறது. இந்த எடையிழப்பு அந்தப் பொருளினால் இடம் பெயர்க்கப்பட்ட காற்றின் எடைக்குச் சமம். மரமும், இரும்பும்கூடத் தத்தம் எடையில் ஒரு பங்கை இழக்கின்றன. அப்படி பார்க்கும்போது ஒரு டன் இரும்பால் இடம் பெயர்க்கப்பட்ட காற்றின் எடையை விட, ஒரு டன் மரத்தினால் இடம்பெயர்க்கப்பட்ட காற்றின் எடை அதிகமாகவே இருக்கும். அதை ஒரு டன்னோடு கூட்டி வருவதுதான் ஒரு டன் மரத்தின் உண்மை எடை. அதனால் ஒரு டன் மரமே அதிக கனமுள்ளது.

ஒருவேளை ஆர்க்கிமிடிஸ் விதி, எடை போன்ற பௌதிக சமாசாரங்கள் அறிவியல் இல்லை என்று ரோஸாவசந்த் நினைக்கிறாரோ? அப்புறம் இந்த காமன் ஸென்ஸ்னா என்னன்னு எனக்கு சத்தியமா மறந்து போச்சு. யாராவது அதைப் பத்தி சொல்லுங்களேன்.

Friday, December 17, 2004

புதிரில்லை, அறிவியல்

வாரா வாரம் புதிரா கொடுத்து போரடிச்சுப் போச்சு. மாறுதலுக்காக இந்த வாரம் இரண்டு அறிவியல் கேள்விகள். அறிவியல்னதும் யாரும் பயப்பட வேண்டாம். அடிப்படையான அறிவியல்தான்(எனக்கு தெரிந்த அளவுக்குத்தானே நான் கேட்க முடியும்!!).

1. தராசின் ஒரு தட்டின் மீது விளிம்பு வரை நீர் நிரம்பிய வாளி ஒன்றை வைக்கவும். மற்றொரு தட்டின் மீதும் விளிம்புவரை நீர் நிரம்பியதும், ஆனால் அதனுள் மிதக்கும் ஒரு மரத்துண்டுடன் கூடியதுமான வாளியை வைக்கவும். இவை இரண்டில் எது அதிக கனமுள்ளதாயிருக்கும்?

2. எது அதிக கனமானது - ஒரு டன் இரும்பா? ஒரு டன் மரமா?

மேலேயுள்ள கேள்விகளுக்கு, விளக்கத்துடன் கூடியதான விடைகள் வேண்டும். தொடர்ந்து அறிவியல் கேள்விகள் கேட்கலாமா, வேண்டாமான்னும் ஒரு வரி சொல்லிப்போட்டிங்கன்னா நல்லாருக்கும்.

Tuesday, December 14, 2004

சும்மா ஜாலிக்குSaturday, December 11, 2004

பிளக்கர் கமென்ட்

வழக்கம் போல் டைனோ! ஆனா தமிழில்!!

இதோ அவருடைய பதில்.

யோசிப்பவரே... உங்களுக்காக தமிழில்.இது வெறும் ஆப்டிகல் இல்லூஷன்... தமிழில் தெரியவில்லை... காட்சி(ப்)பிழை? ('ப்'பனுமா கூடாதா?) ஆங்கிலத்துல யோசிச்சு தமிழுல தட்டச்சுனா இப்படித்தேன்... அதுக்குதான் இந்த புதிருக்கெல்லால் அங்ரேசிலேயே பதில் போடறது! நீங்க நிஜமாகவே இப்படி ஒரு சதுரம் செய்து அதை வெட்டி-ஒட்டிப் பாருங்க... மேலே இருக்கும் 'மஞ்ச-சிவப்பு' முக்கோணத்துக்கும்... கிழேயுள்ள 'நீல-பச்சை' முக்கோணமும் ஒன்றாக இணையாது. ஒரு சிறிய இடைவெளி கிடைக்கும். அந்த இடைவெளியின் பரப்பளவு ஒரு சிறிய சதுரத்திற்கு சமமானதாக இருக்கும்.-டைனோபி.கு.ஈ-தமிழ் பால சுப்ரா இதை முன்னாலயே பதிச்சிருக்கார்!

பால சுப்ரா பதிச்சதை நான் பார்க்கவில்லை டைனோ. இருந்தாலும் இது வலைப் பதிவுகளுக்குள் மறுபதிப்பானதற்க்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

பாலாஜியும் சரியான பதிலையே அளித்துள்ளார். அவருக்கும் நமது பாராட்டுக்கள்.

அப்புறம், பெருவாரியான(பெருவாரியான அப்படின்னா ஒரே ஒருத்தர்) வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க பிளாக்கர் கமென்டையும் சேர்த்துள்ளேன்.(இனியாவது கமென்ட் அடிங்கப்பா!).

Tuesday, December 07, 2004

எப்படிங்க இது?


கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்களேன்.

Saturday, December 04, 2004

டைனோவின் கெட்டப்பழக்கம்

நம்ம டைனோவுக்கு ஒரு கெட்டப்பழக்கங்க. எப்பவுமே சரியா விடை சொல்லிடறார். ஆனா அதை ஆங்கிலத்தில்தான் பின்னூட்டமிடறார். சரி அவர் வலைமேயும் கணினியில் தமிழ் தட்டச்சு வசதி இல்லயோ அப்படின்னு நினைச்சேன். ஆனா மத்த வலப்பதிவுகளில் தமிழில் பின்னூட்டமிடறார். நம்ம வலைத்துணுக்கில் மட்டும் ஆங்கிலம்! ஏன் இந்த ஓரவஞ்சனை டைனோ? வேற ஒன்னும் இல்லை, பதிலை நான் ஒரு தடவை தமிழில் அடிக்க வேன்டியிருக்குது பாருங்க. நான் அதை தமிழில் மொழிபெயர்த்து சொல்லலைன்னா, பாதி பேருக்கு வேற ஆங்கிலம் புரியாது பாருங்க(டேய்! இதெல்லாம் உனக்கே ஒவராத் தெரியல?).

சரி! சரி! பதிலைப் பார்ப்போம்.

மொத்தம் 24 பேருந்துகளை பார்ப்பீர்கள். ஏன்னா, நீங்க கிளம்பறதுக்கு முன்னால(அதாவது சாயங்காலம் 6 மணிக்கு முன்னால) சென்னையிலிருந்து கிளம்பின 12 பேருந்துகளும் அப்ப வழியில வந்துகிட்டுதான் இருக்கும். அதனால அந்த 12ஐயும் சேர்த்து மொத்தம் 24 பேருந்துகள்.

Monday, November 29, 2004

ஒரு வண்டியா, ரெண்டு வண்டியா?தூத்துக்குடி To சென்னை

தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு ஒவ்வொரு ஒரு மணி நேரத்துக்கும், ஒரு பேருந்து கிளம்புதுன்னு வைச்சுக்குங்க(உண்மையில் சாயங்காலம் 5 மணியிலிருந்து, 10 மணிவரை ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கும் ஒரு பேருந்து). அதே மாதிரி சென்னையிலிருந்தும், தூத்துக்குடிக்கு, ஒவ்வொரு ஒரு மணி நேரத்துக்கும் ஒரு பேருந்து கிளம்புது. தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு 12 மணி நேரப் பயணம். இப்ப நீங்க தூத்துக்குடியிலிருந்து, சாயங்காலம் 6 மணிக்கு கிளம்பற சென்னைப் பேருந்துல ஏறுறீங்க. சென்னை வந்து சேரும்பொழுது மொத்தம் எத்தனை சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு கிளம்பிய பேருந்துகளை பார்ப்பீங்க(நான் தூங்கிருவேன்னு பதில் சொல்லாதீங்க!!).

Friday, November 26, 2004

லெட்டர் டூ காசி

'கோவிச்சுக்காம' உங்களுக்கு எழுத சொல்லியிருக்கீங்க, சரி! என்ன எழுதனும்னு சொல்லவேயில்லையே. அப்புறம் ஒரு சின்ன விஷயம்(நீங்களும் இதைத்தான் சொல்றீங்கன்னு நினைக்கிறேன்). என்னோட அந்த பிளாக் ஏன் தமிழ்மணத்தால் திரட்டப்பட மாட்டேங்குதுன்னு யாராவது சொன்னா கொஞ்சம் என்னோட சின்ன மூளையிலே போட்டு அதைப் பத்தி யோசிப்பேன்.

ஐ! நல்லாருக்கு!!தம்மடித்தவர்கள்

டைனோ 'Back To Form' வந்திருக்கிறார். வழக்கம் போல் சரியான விடை, ஆங்கிலத்தில்(!). NagaS ஒன்றும் குறைவில்லை. முதல் விடை அவருடையதுதான். இவர்களுக்கு வழக்கம் போல(?!?!) பரிசு( ஒரு பை தங்கராஜா வடிகட்டிப் புகையிலைச் சுருட்டுகள்) e-mail மூலம் அனுப்பி வைக்கப்படும்(:-)).

அனைவருக்கும் எனது கார்த்திகைத் திருநாள் வாழ்த்துக்கள்.

Tuesday, November 23, 2004

தம்மோ தம்மு

'தம்'முன்ன உடனே சிம்புவைப் பத்திய மேட்டர்னு நினைக்காதீங்க. இது நிஜமாவே தம் பத்தின மேட்டர்.

இப்ப, இந்த தம் அடிச்சுட்டு கடைசில சிகரெட் துண்டைக் கீழே போடுறோம்ல, அந்த மாதிரி ஒரு ஆறு துண்டுங்களை வைச்சுக்கிட்டு ஒரு முழு சிகரெட் தயாரிக்கலாம். இப்ப உங்ககிட்ட முப்பத்தாறு சிகரெட் இருக்கு. அப்ப மொத்தமா எத்தனை சிகரெட் நீங்கள் பிடிக்க முடியும்? சரியா சொன்னவங்களுக்கு ஒரு பை தங்கராஜா வடிகட்டிப் புகையிலை சுருட்டு(அதாங்க, Gold Flake KINGS) பரிசு.(விடை கண்டுபிடிக்கிறேன் பேர்வழின்னு ஓவரா தம் அடிக்காதீங்க!)

Saturday, November 20, 2004

ச்ச்ச்சும்மாஆஆ!!!Thursday, November 18, 2004

தேங்காய் வியாபாரி பொழைச்சார்!!!

ஒரு தேங்காய் கூட மிச்சமில்லைன்னா, தேங்காய் வியாபாரி என்னத்துக்கு ஆவார். அதனால லாரி டிரைவர்(அல்லது கிளீனர்) கொஞ்சம் அறிவாளித்தனமா என்ன பன்னினார்னா, ஒரு மூடையை பிரித்து இரண்டுரண்டு தேங்காவா ஒவ்வொரு செக்போஸ்டிலும் கொடுத்துக்கிட்டு வந்தார். பன்னிரண்டாவது செக்போஸ்டில் கொடுத்து முடிஞ்சதும் ஒரு மூடையில் 1 தேங்காயும், இன்னோரு மூடை முழுசாவும் இருந்தது. பதிமூனாவது செக்போஸ்டில், மீதமிருந்த ஒரு மூடைக்கு மீதமிருந்த ஒரு தேங்காயை கொடுத்து விட்டார். மீதி பன்னிரண்டு செக்போஸ்டிலும் இரண்டாவது மூடையைப் பிரித்து, ஒவ்வொன்றிலும் ஒரு தேங்காய் கொடுத்தார். மீதி 13 தேங்காயை திருச்சி கொண்டு போய் சேர்த்து, தேங்காய் வியாபாரியை காப்பாத்திட்டார்.

இந்த தடவை நம்ம வழக்கமான வாசகர்கள் யாரும் பதில் சொல்லவில்லை. அவர்களுக்கு என்ன வேலையோ தெரியவில்லை. புதுசா சரவணன் ,Srini இரண்டு பேரும், விடை சொல்லி இருக்கிறார்கள். இதில் Srini சொன்னது மிகச் சரியானது. சரவணன் , பிரச்சனையை சரியாக அணுகியிருந்தாலும், சின்ன சறுக்கல் சறுக்கி விட்டார். விடை சொன்ன இரண்டு பேருக்கும், வலைத்துணுக்குவாசிகள் சார்பாக எனது பாராட்டுக்கள்.

Sunday, November 14, 2004

சென்னை To திருச்சி

பிளாக்களில் இப்பொழுது நிறைய பேர் கேள்வி கேட்கிறார்கள். இது ஆரோக்கியமான விஷயம்தான். கேள்வி கேட்கும் பதிவிற்குதான் பின்னூட்டங்களும் அதிகமாக வருகின்றன. நம்ம வலைத் துணுக்கிலேயேகூட புதிர் கேள்வி துணுக்குகளுக்குதான்(பல தடவை அதற்கு மட்டும்தான்) அதிகமான பின்னூட்டங்கள் வருகின்றன. அதனால்தான் நானும் வாரம் ஒரு புதிராவது போட்டுக் கொண்டிருக்கிறேன்.

சென்னைக்கும் திருச்சிக்கும் இடையே 25 செக்போஸ்ட்கள்(சும்மா வச்சுக்கங்க) இருக்கின்றன. ஒரு தேங்காய் மூடை லாரி இந்த வழியாப் போனா, மூடை ஒன்றுக்கு(மூடையில் எத்தனை தேங்காய் இருந்தாலும் கவலை இல்லை) ஒரு தேங்காய் வீதம் ஒவ்வொரு செக்போஸ்டிலும் கொடுக்க வேண்டும். இப்ப, ஒரு லாரி இரண்டு மூடை தேங்காய் ஏற்றிக் கொண்டு சென்னையிலிருந்து, திருச்சிக்கு போகிறது. ஒவ்வொரு மூடையிலும் 25 தேங்காய்கள் இருக்கின்றன. திருச்சிக்குப் போய் சேரும்போது கொஞ்சமாவது தேங்காய்கள் மிச்சமிருக்குமா? மிச்சமிருந்தால் அது எப்படின்னு சொல்லுங்க.

இந்த வார பொன்மொழி

ஒரே சமயத்தில் இரண்டு வேலை செய்ய நம்மில் பலருக்குத் தெரியும். ஒரு சமயத்தில் ஒரே ஒரு வேலை செய்வதுதான் கடினமானது.
- மெக்லாலின்.

ஒரு சமயத்தில் ஒரு வேலையும் செய்யாமல் இருப்பதுதான் மிகவும் கடினமானது.
- யோசிப்பவர்.

பைப் புகை

கணவன் எப்பொழுதும் 'பைப்'பில் புகை பிடித்துக் கொண்டிருக்கிறார் என்று கூறி விவாகரத்துக் கோரினாள் ஒரு மனைவி. "புகை உங்களுக்கு தொல்லையாக இருக்கிறதா?" என்று கேட்டார் நீதிபதி.

"அதையாவது பொறுத்துக் கொள்வேன். ஆனால் என்னை முத்தமிடும்போதுகூட பைப்பை வாயிலிருந்து அவர் எடுப்பதில்லை.", என்றாள் மனைவி.

இந்த வாரக் கவிதை

இருந்து என்ன
ஆகப் போகிறது
செத்துத் தொலைக்கலாம்
செத்து என்ன
ஆகப் போகிறது
இருந்து தொலைக்கலாம்.


- கல்யாண்ஜி (கல்யாண்ஜி கவிதைகள்)

கதைப் போட்டி அறிவிப்பு

"உண்மைக் கதை எழுதி அனுப்புங்கள். சிறந்த உண்மைக் கதைக்கு முதல் பரிசு - பத்து வருடம்."

ஒரு சர்வாதிகார நாட்டுப் பத்திரிக்கையில் வெளி வந்த அறிவிப்பு இது.

Friday, November 12, 2004

ராவணனையும் யாருக்குமே தெரியவில்லை

ராவணன் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும் என்பதையே நான் மறந்து விட்டேன்(தீபாவளி பரபரப்பில்). நேற்று bsubra தான் ஞாபகப்படுத்தினார்.

ராவணனுடைய இயற்பெயர் தசக்ரீவன். கைலாசத்தைப் பெயர்க்க முயன்றபோது சிவபெருமான் காலால் அழுத்த, மலையின் கீழ் மாட்டிக்கொண்டு வலி தாங்காமல் தசக்ரீவன் அலறினான். அன்று முதல் அவன் பெயர் ராவணன் ஆயிற்று. ராவணன் என்றால் 'அலறல்' என்று பொருள்- ஆதாரம் : ரா.கி.ரங்கராஜனின் "அறிவுக்கு ஆயிரம் வாசல்"

Wednesday, November 10, 2004

யாருக்கும் வேலை இல்லை

நல்ல வேலை! Micro Soft வேலைக்கு யாரையும் சிபாரிசு செய்யத் தேவையில்லாமல் போய்விட்டது. மைக்ரோசாப்ட் புதிருக்கு விடையை ganesh கொஞ்சம் நெருங்கியிருந்தார்.

விடை இதோ: முதலில் நவனும்(2), டைனோவும்(1) அக்கரைக்கு சென்றுவிட வேண்டும்(2). பின்பு நவன்(2) மட்டும் டார்ச்சுடன் அங்கிருந்த திரும்ப வேண்டும்(2+2=4). பின் இங்கிருந்து கோபியும்(10), KVRஉம்(5) அக்கரை செல்ல வேண்டும்(4+10=14). பின்னர் அந்த முனையில் இருக்கும் டைனோ(1) டார்ச்சுடன் திரும்பி(14+1=15) வந்து நவனை(2) அழைத்து செல்லவேண்டும்(15+2=17). சரியா பதினேழு நிமிடம் ஆச்சா.

சரி யாருக்கும் வேலைதான் தர முடியவில்லை. தீபாவளி நல்வாழ்த்துக்களாவது சொல்லிவிடுகிறேன். தீபாவளிக்கு இன்னும் சரியாக 17 நிமிடங்கள்(என்ன ஒரு பொருத்தம்) இருப்பதால், Advanced தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

Sunday, November 07, 2004

மைக்ரோசாப்டில் வேலை

'ஆடு, புலி, புல்லுக்கட்டு' புதிர் நமக்கெல்லாம் தெரியும். இதுவும் கிட்டத்தட்ட அதே வகைதான்.

ஒரு வாத்தியக் குழுவில் நாலு பேர். அவுங்களுக்கு ஆளுக்கு ஒரு பேர் வைச்சுக்கிடுவோமே, கோபி, KVR, நவன், டைனோன்னு(ஏன் எப்பம்பார்த்தாலும் இவங்களையே வம்புக்கு இழுக்குறே?!). இப்ப அவங்க நாலு பேரும் ஆத்துக்கு அக்கரையில் உள்ள ஊருக்கு வாசிக்கப் போக வேண்டியிருக்கு. ஆத்தைக் கடக்க ஒரு மரப்பாலம் இருக்கு(தமிழ் சினிமால வர்ர மாதிரி!).

ஒரு நேரத்தில் இரண்டு பேரை மட்டுமே அந்தப் பாலம் தாங்கும்.(பைக்ல போலாமா?)

அந்த பாலத்தை தாண்ட கோபிக்கு 10 நிமிடம் ஆகும். அதுவே KVRக்கு 5 நிமிடமும், நவனுக்கு 2 நிமிடமும், டைனோவுக்கு 1 நிமிடமும் ஆகும். ஆனா இப்ப ரெண்டு பேர் சேர்ந்து போனால், இருவரில் யாருக்கு பாலத்தைக் கடக்க அதிக நேரம் ஆகுமோ, அவருடைய வேகத்துக்குதான் இருவரும் போவார்கள். உதாரணத்துக்கு, நவனும், KVRம் சேர்ந்து பாலத்தைக் கடக்க 5 நிமிடமாகும்(அட, புரிஞ்சிருச்சு! உட்ருப்பா!!).

அவங்க கிட்டே ஒரே ஒரு டார்ச் லைட் இருக்கு. பாலத்தைக் கடக்கும் போது, கண்டிப்பாக கடப்பவர்களின் கையில் அந்த டார்ச் லைட் இருக்க வேண்டும்.

இன்னோரு முக்கியமான விஷயத்தை சொல்ல மறந்துட்டேன். உங்களுக்கு இந்தப் புதிரை விளக்கிகிட்டு(பாத்திரமா விளக்கினே?) இருந்ததுல நேரம் ஆயிருச்சு. அவங்க நாலு பேரும் இன்னும் 17 நிமிடத்துல அக்கரைக்குப் போகனும். எப்படி போவாங்கன்னு யோசிச்சு 5 நிமிடத்துக்குள் விடை கண்டுபிடித்து, 'யோசனைகள்'(Commentஐ சொல்றியாக்கும்) சொல்பவர்களை Micro Softல் வேலைக்கு யோசிப்பவர் சிபாரிசு செய்வார்(நீ செய்வப்பா. Micro Soft ஒத்துப்பாங்களா?).

திருடர்கள் ஜாக்கிரதை

"இந்த இடத்தில்தான் அடிக்கடி திருட்டுப் நடக்கிறதே. 'திருடர்கள் ஜாக்கிரதை'ன்னு போர்டு வைக்கிறதுக்கென்ன?"

"எத்தனை தடவைதான் வைக்கிறது?"

கர்ணனைத் தெரியும்; ராவணனை?

முன்பு கர்ணனைப் பற்றிப் பார்த்தோம். இப்போ ராவணன். ராவணனின் இயற்பெயர் என்ன?

Monday, November 01, 2004

வித்தியாசம் என்ன?

'இந்தப் படத்த எதுக்கு இங்கே போட்டிருக்கான்'னு யோசிக்கிறீங்களா? நம்ம வலைத்துணுக்கில் வெளிவந்தாலே இதுல எதோ புதுசா இருக்குன்னுதானே அர்த்தம். எங்கே இந்தப் படத்துல உள்ள வித்தியாசமான அம்சம் என்னன்னு யோசிங்க பார்ப்போம். அது என்னன்னு கண்டுபிடிக்க முடியாதவங்க கவலைப்படாம, Scroll Barஐ கொஞ்சம் கீழே நகர்த்துங்க.
.
.
.
.
'Ctrl'ஐயும் 'A'ஐயும் சேர்ந்தாப்புல அமுக்குங்க. சூப்பரா இருக்கா?

Sunday, October 31, 2004

ஒரே ஒரு ஊர்ல யோசித்தவர்

வழக்கம்போல டைனோ சரியான விடையளித்திருந்தார். உபரியாக ஏற்கெனவே இது குமுத்தில் வந்தது என்று தகவல் அளித்திருக்கிறார். இருக்கலாம், ஆனால் இந்தப் புதிர் எனக்கு சின்ன வயதிலேயே தெரியும்(அப்ப இருந்தே லூஸா?) என்று தெரியப்படுத்திக் கொள்கிறேன். மேலும் இந்த வலைத்துணுக்கில் வெளிவருபவை எதுவுமே எனது சொந்தப் படைப்பு அல்ல(சொந்தப் படைப்புகளுக்கு தனியாக ஒரு வலைப்பதிவு ஆரம்பிக்கலாம் என்றிருக்கிறேன்) என்பதையும் முதலிலேயே ஒப்புக்கொண்டுள்ளேன். அதை மறுபடியும் உறுதிப்படுத்துகிறேன்.

இப்பொழுது விடை(மன்னிக்கவும் கேள்வி?!?!):

"'தப்பிச்சு போற சரியான வழி எது'ன்னு அந்த இன்னொரு காவலாளிக்கிட்டே கேட்டா அவன் எந்த வாசலைக் காட்டுவான்னு?" ஒரு காவலாளிக்கிட்ட கேக்கனும். அவன் காட்டுகிற வாசலை விட்டுவிட்டு இன்னொரு வாசல் வழியா போனா தப்பிச்சுரலாம். ஏன்னா, இந்தக் கேள்விக்கு இரண்டு பேருமே தவறான வாசலைத்தான் காட்டுவார்கள்.

Friday, October 29, 2004

மூளையின் பலம்

எனக்கு சமீபத்தில் வந்த மெய்ல் இது. இதில் நமது மூளை செய்யும் Pattern Reconization என்னை வியக்க வைத்தது. கொஞ்சம் கூடத் தடுமாறாமல் என்னால் இதைப் படிக்க முடிந்தது. நீங்களும் படித்து வியப்படையுங்கள்!!!

கீழே உள்ளதை முடிந்த வரை வேகமாக வாசிக்க முயற்சி செய்யுங்கள்.

I cdnuolt blveiee taht I cluod aulaclty uesdnatnrd waht I was rdgnieg The phaonmneal pweor of the hmuan mnid Aoccdrnig to a rscheearch at Cmabrigde Uinervtisy, it deosn't mttaer in waht oredr the ltteers in a wrod are, the olny iprmoatnt tihng is taht the frist and lsat ltteer be in the rghit pclae. The rset can be a taotl mses and you can sitll raed it wouthit a porbelm. Tihs is bcuseae the huamn mnid deos not raed ervey lteter by istlef, but the wrod as a wlohe. Amzanig huh? yaeh and I awlyas thought slpeling was ipmorantt!

என்ன உங்கள் மூளையின் பலம் எவ்வளவுன்னு இப்ப புரிஞ்சிருச்சா?

Wednesday, October 27, 2004

ஒரே ஒரு ஊர்ல

ஒரே ஒரு அறிவாளி இருந்தானாம்(உம்). அவன் பெரிய அறிவாளின்னு ராஜா வரைக்கும் தெரிஞ்சு போச்சாம்(உம்). உடனே ராஜா 'என்னை விட பெரிய அறிவாளியா? அதையும் பாத்துடலாம்' னு நினைச்சி, அந்த அறிவாளியை கைது பண்ணிட்டான்(உம்). அவனை அடைச்சு வச்ச சிறைக்கு ரெண்டு வாசல். ஒவ்வொரு வாசலிலேயும் ஒரு காவலாளி(உம் போட்டுகிட்டு இருக்கீங்களா?).

ராஜா அந்த அறிவாளியைப் பார்த்து, "இந்த ரெண்டு காவலாளிங்கள்ள ஒருத்தன் எப்பவும் பொய்தான் பேசுவான். இன்னொருத்தன் எப்பவும் உண்மைதான் பேசுவான். ஆனா யார் உண்மை பேசுவா; யார் பொய் பேசுவான்னு உங்கிட்ட சொல்ல மாட்டேன். இந்த ரெண்டு வாசல்ல, ஒரு வாசல் வழியா போனா நீ தப்பிச்சுரலாம். இன்னொரு வாசல் வழியா போனா பாதாளச் சிறைல மாட்டிப்பே. எந்த வாசல் எங்கே போகும்னும் சொல்ல மாட்டேன். நீ இந்த ரெண்டு பேர்ல ஒரே ஒருத்தன்ட, ஒரே ஒரு கேள்வி மட்டும் கேக்கலாம். அத வச்சுக்கிட்டு உன்னால முடிஞ்சா இங்கேருந்து தப்பிச்சுப்போ. இல்லேன்னா பாதாளச்சிறைல மாட்டிக்கிட்டு சாகு"ன்னு சொல்லிட்டு போய்ட்டான்.

அந்த அறிவாளியும் ஒரே ஒரு காவலாளிட்ட ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்டு, அவன் சொன்ன பதில வச்சி சரியான வாசலைக் கண்டுபிடிச்சு தப்பிச்சுட்டான்.

ஆமா அவன் அப்பிடி என்ன கேள்விய கேட்டிருப்பான்? கேள்வி என்னன்னு யோசிச்சு, அதை Post Cardஇல் எழுதி, http:\\www.yosinga.blogspot.com அப்படிங்கர முகவரிக்கு அனுப்பினீங்கன்னா, எனக்கு வந்து சேராது. அதனால ஒழுங்கா commentலயே உங்களோட பதிலை, ஸாரி, கேள்வியைக் கேட்டுருங்க.

Tuesday, October 26, 2004

கல்லூரி ஆத்திச்சூடி

முந்தினப் பதிவுக்கு ஒரு பரிகாரம் தேடலாம்ன்னு மேட்டர் தேடுனப்பொ இது கிடைச்சுது. ஆனாலும் இது மேல்கைன்டுக்கு ஒத்துவராது(இன்னைக்கே ரெண்டு தடவை மேல்கைன்டை வம்புக்கு இழுத்துட்டேன்ல!). ஏன்னா இது கல்லூரி ஆத்திச்சூடி. ஆத்திச்சூடி படிக்கிற ரிதத்தோட இதப் படிங்க.


அரியர்ஸ் மற
இரு பெண் காதலி
உடையில் கவனங்கொள்
ஊர் சுற்று
கசப்பது படிப்பு
கைக்கொள் பிட்டை
சாடை புரிந்து கொள்
சினிமா தினம் பார்
சைட்டை மறவேல்
தினம் ஃபிகர் மாற்று
தேர்வு பயமகற்று
பயிர் செய் கடலை
பாஸ் மார்க் போதுமே
ஃபிகர் பின் சுற்று
புகைப்பதை கைவிடேல்
பைக்கோடு செல்
நைட் ஷோ தவறேல்
- ஆர்.லோகனாதன்

தாயா? தாரமா?

தாய்க்குப் பின் தாரம்
தாரம் வந்ததும் -
தாய் ஓரம்!
- ஏ.கோவிந்தன்.

சத்தியமா மேல்கைன்டுக் காரங்களை கடுப்பேத்தனும்லாம் இதைப் போடலை. சும்மா, நல்லா இருந்ததால் போட்டேன். வேற ஒன்னுமில்லை!

சிறந்தப் புத்தகம்

கணவனிடம் மனைவி சொன்னாள், "அதென்னமோ தெரியல! இந்தப் புத்தகத்தை கையில் எடுத்தால் கடைசித் தாள் வரை கீழே வைக்க மனம் வரவில்லை."

அவள் குறிப்பிட்டது கணவனின் செக் புத்தகத்தை.

Saturday, October 23, 2004

இத விட அது பெட்டர்

ஒரு பிரபல நாவல் திரைப்படமாக வந்தது. "படம் எப்படி இருந்தது?" கேட்டது நம்பர் ஒன்று. "பரவாயில்லை. ஆனால் புத்தகம் இதைவிட நன்றாயிருந்தது!" சொன்னது நம்பர் இரண்டு.

பேசிய நம்பர் 'ஒன்று'ம், 'இரண்டு'ம் கழுதைகள்.

அருவா சோமசேகர்

Friday, October 22, 2004

கவித! கவித!!

கவிதைப் புத்தகம் வெளியிடுவது என்பது, மிக உயரமான மலை உச்சியில் நின்று கொண்டு, ஒரு ரோஜா இதழைக் கீழே போட்டுவிட்டு, அதற்கு எதிரொலி கேட்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டு நிற்பது போல.

- டான் மார்க்கிஸ்.

கவிதை ஒன்றை வலைத் துணுக்கில் வெளியிடுவது என்பது, மிக உயரமான மலை உச்சியில் நின்று கொண்டு, ஒரு சிலந்தி வலையின் இழையைக் கீழே போட்டுவிட்டு, அதற்கு எதிரொலி கேட்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டு நிற்பது போல.

- யோசிப்பவர்.

ஒன்னுமில்லே! சும்மா நாமும் பொன்மொழி(?!?!) சொன்னா என்னன்னு தோனிச்சு; அதான். சரி இப்ப கவிதை.

எந்த....

ராமச்சந்திரனா
என்று கேட்டேன்
ராமச்சந்திரன்
என்றார்.
எந்த ராமச்சந்திரன்
என்று நான்
கேட்கவுமில்லை, அவர்
சொல்லவுமில்லை

- நகுலன்(கோட் ஸ்டாண்ட் கவிதைகள்)

ஆதி காலத்து TITAN

ஆதி காலத்துக் கடிகாரம் புதிருக்கு, டைனோ, ஜாஃபர் இருவரும் சரியான பதிலை சொல்லியிருந்தார்கள். ஜாஃபர் இன்னமும் விளக்கமாக தன் பதிலைக் கூறியிருக்கலாம்(முதலில் எனக்கு புரியவில்லை).

நமது வாசகர்கள் தமிழில் எளிதாக Comment அடிக்க ஒரு வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். விரைவில் செய்வேன். அதற்கு வலைப் பதிவு நண்பர்கள் கொஞ்சம் உதவினால் நன்றாயிருக்கும். இப்பொழுது விடை தமிழில்.

இரண்டு கடிகாரத்தையும் ஒரே நேரத்தில் Start செய்ய வேண்டும். நான்காவது நிமிட முடிவில் இரண்டாவது கடிகாரத்தை திருப்பி வைக்க வேண்டும்.

அப்புறம் ஏழாவது(ஆரம்பத்திலிருந்து) நிமிட முடிவில் முதல் கடிகாரம் காலியாகியிருக்கும். இந்த நேரத்தில் இரண்டாவது கடிகாரத்தில் ஒரு நிமிடத்துக்கான மண் பாக்கியிருக்கும்.இப்பொழுது முதல் கடிகாரத்தை திருப்பி வைக்கவும்.

எட்டாவது நிமிட முடிவில், மறுபடியும் இரண்டாவது கடிகாரம் காலி. முதல் கடிகாரத்தில் ஒரு நிமிடத்துக்கான மண் இறங்கியிருக்கும். இப்பொழுது முதல் கடிகாரத்தை திருப்பி வைக்க வேண்டும். அதில் மண் காலியாகும்பொழுது ஒன்பது நிமிடம் ஆகியிருக்கும்.

பிருஷகேது = விருஷகேது

கர்ணனின் மகன் பெயர் "பிருஷகேது" என்று நான் படித்தேன். டைனோ "விருஷகேது" என்கிறார். இரண்டுமே சரிதான் என்று எண்ணுகிறேன். 'ப' வரிசை சில சமயம் தமிழ்ப்படுத்தும்பொழுது 'வ' வரிசை ஆவது உண்டு. உதாரணம்: பீமன் என்பதை தமிழில் சிலர் வீமன் என்பர். அதனால் பிருஷகேது = விருஷகேது என்று முதல் கேள்விக்கு தீர்ப்பளிக்கப்படுகிறது. எனது விளக்கம் தவறாயிருந்தால், தமிழறிஞர்கள் சரியான விளக்கமளிக்குமாறு வேண்டுகிறேன்.

அடுத்தக் கேள்விக்கு ரா.சுப்புலட்சுமி "ராதேயன்" என்று பதில் சொன்னார். ராதேயன் என்பது கர்ணனின் பட்டப்பெயரே அன்றி, இயற்பெயர் அல்ல. அவனது இயற்பெயர் "வசுசேனன்".

Wednesday, October 20, 2004

ஆதி காலத்துக் கடிகாரம்

பழங்காலத்துக் கடிகாரமான மணற்கடிகாரத்தை உங்களுக்கு தெரியுமென்று நினைக்கிறேன்(இதெல்லாம் ரொம்ப ஓவர்!!). அப்படிப்பட்டக் கடிகாரம் இரண்டு இருக்கிறது. ஒரு கடிகாரத்தில் உள்ள மண் முழுவதும் கீழே இறங்க ஏழு நிமிடங்களாகும். இதே போல் இரண்டாவது கடிகாரத்தைக் கொண்டு நான்கு நிமிடங்கள் கணக்கிட முடியும்.

இப்பொழுது இந்த இரண்டு கடிகாரங்களைக் கொண்டு சரியாக ஒன்பது நிமிடங்கள் கணக்கிட வேண்டும்.

சுலபமான கணக்குதான், மணிக்கணக்கா யோசிக்காதீங்க. சீக்கிரம் யோசிங்க.

Tuesday, October 19, 2004

கர்ணனைத் தெரியுமா?

கர்ணன் என்றதும் என் நினைவுக்கு வருவது சிவாஜிதான். எங்கள் வீட்டில் வீ.சி.ஆர் வாங்கிய புதிதில், சிறுவயதில் கர்ணன் படத்தை பலமுறை பார்ப்பேன்(நானும் மத்தவங்க கணக்கா டைரிக்குறிப்பு மாதிரி எழுத ஆரம்பிச்சுட்டேன்ல!). சரி! இப்ப அதையெல்லாம் விட்டு விடுவோம்.

கர்ணனைப் பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும்? கீழே உள்ள கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் பார்ப்போம்.

1. கர்ணனின் மகன் பெயர் என்ன?
2. குழந்தை கர்ணனுக்கு, தேரோட்டி வைத்தப் பெயரென்ன?(அதாவது இயற்பெயர்)

வைகுண்டம்

ஒரு மயானத்தின் கேட்டில் கீழ்கண்ட அறிவிப்பு ஒட்டப்பட்டிருந்தது.
'திரு.ராமனாதன் இன்று காலை ஒன்பது மணிக்கு வைகுண்டம் ஏகினார்.'

மறுநாள் அதன் கீழே யாரோ இன்னொரு காகிதம் ஒட்டியிருந்தார்கள்.
'வைகுண்டம். காலை மணி பத்து. இதுவரை திரு.ராமனாதன் இங்கு வந்து சேரவில்லை. கவலையாக இருக்கிறது!'

வந்துட்டேன்யா! வந்துட்டேன்!!

இன்னும் எனக்கு கணிணி கிடைக்கவில்லை. இருந்தாலும் என் வாசகர்கள் என்னை தேடுவதை வெப் கௌண்டெர்(புதுசு) மூலம் தெரிந்து கொண்டதால், மறுபடியும் வந்துவிட்டேன். டைப் பண்ணக் கூட வலைப்பூவின் பொங்கு தமிழைத்தான் கடன் வாங்கினேன்.

இந்த வாரம் ரா.கி.யின் "அறிவுக்கு ஆயிரம் வாசல்" புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறேன். அதில் பல விஷயங்கள் நம் வலைத் துணுக்கிற்கு தோதாக இருப்பதால், இனிமேல் அதிலிருந்தும் கொஞ்சம் தட்டி விடப் போகிறேன்(அதான வேலையே!). சில கவிதைகளைக் கூட நான் ரசித்ததால், கவிதைகளுக்கும் நம் வலைத் துணுக்கில் இடம் தரப் போகிறேன்.

இப்போ ஒரு கவிதை...

நிஜம் நிஜத்தை நிஜமாக
நிஜமாக நிஜம் நிஜத்தை
நிஜத்தை நிஜமாக நிஜம்
நிஜமும் நிஜமும் நிஜமுமாக
நிஜமோ நிஜமே நிஜம்
நிஜம் நிஜம் நிஜம்

..................- ஆத்மாநாம்('காகிதத்தில் ஒரு கோடு')

புரிஞ்சிருச்சா? புரியலைனா(எனக்கு புரியலை!), கொஞ்சம் யோசிச்சு புரிஞ்சுக்கோங்க.

Thursday, October 14, 2004

இனிய செய்தி!!!

என் அன்பார்ந்த ஆயிரக்கணக்கான, சரி! நூற்றுக்கணக்கான, சரி! சரி! சில பத்து வாசகர்களுக்கு ஒரு இனிய செய்தி!!

இன்னும் ஒரு வாரத்துக்கு உங்களை நான் தொல்லைப்படுத்த போவதில்லை. அது, கொஞ்சம் கணிணி பற்றாக்குறை ஆகிவிட்டது. அதனால் ஒரு வாரம் விடுமுறை(ஆமா! நீ இல்லைன்னு இங்கே யார் அழுதா?)

ஒரு சோக செய்தி:

கண்டிப்பாக ஒரு வாரத்தில் மறுபடியும் தொல்லை கொடுப்பேன்.(மறுபடியுமா?!?!)

Sunday, October 10, 2004

பார்த்து ரசிக்க(முடிந்தால் சிரிக்க)

Thursday, October 07, 2004

ரோமன் நம்பர்கள்

MID, MIC, MIL, MIX. இந்த நான்கு ரோமன் நம்பர்களின் மதிப்புகள்(Values) என்னென்னவென்று புத்தகம் எதையும் புரட்டாமல் உங்களில் எத்தனை பேரால் சொல்ல முடியும்(கையத் தூக்குங்க). எனக்கு ஆயிரம் வரைதான் தெரியும்(இதுக்கே இவ்வளவு அல்டாப்பா?!?). அதற்கு மேல் தெரிந்தவர்கள் எனக்கு சொல்லுங்களேன்.


I --- 1
II -- 2
V --- 5
X --- 10
L --- 50
C --- 100
D --- 500
M --- 1000
இப்பொழுது உங்களுக்கே நான்கு எண்களின் மதிப்பும் தெரிந்திருக்கும்.

MID = 1499
MIC = 1099
MIL = 1049
MIX = 1009
சரி! ஒரே ஒரு சின்னக்கேள்வி! MIDD, MICC, MILL, MIXX, MICD, MIDC, MILD, MIDL இந்த எட்டில் எவை எவை சரியான(Valid) ரோமன் எண்கள். பேப்பர் பேனா இல்லாமயே யோசிங்க.


பி.கு.(வர வர, இது ஒன்னு கண்டுபிடிச்சிருக்காம்பா!)
இது இந்த வாரப் புதிரில்லை. அதனால நான் பதிலெல்லாம் சொல்ல மாட்டேன்(தெரியாதா?). நீங்களே உங்க சொந்த முயற்சில கண்டுபிடிச்சி கமெண்ட் அடிச்சிருங்க.

CODE எழுதியவர்

MK Codingஇல் பெரிய ஆளா இருப்பார் போல. முதலில் பிட் ஆப்பரேட்டர்கள் எல்லாம் உபயோகித்து இரு சவால்களுக்கும் பதில் தந்திருந்தார். அவை நெகட்டிவ் எண்களுக்கும் கூட வேலை செய்தன. ஆனால் அவை C/C++ போன்ற பிட் ஆப்பரேட்டர்கள் உள்ள மொழியில் மட்டும்தான் வேலை செய்யும் என்று நான் சொன்னவுடன்(ஒத்துக்க மாட்டியே!!), இந்தா வச்சுக்கோ! என்று வேறு விடைகள் தந்தார். அதில் இரண்டாவது சவாலுக்கான விடை மட்டும் எனது விடையோடு(உனக்கு மட்டும்தான் தெரியுமாக்கும்!) ஒத்துப்போனது. அதற்காக முதல் விடை தவறில்லை. அதுவும் சரிதான். இப்பொழுது MKயின் விடைகள்.

சவால் 1
c = (a - b) / abs(a - b)
c = ((a + ca) + (b - cb)) / 2

சவால் 2
c = a - 1
c = c + (a mod 2) * 2

MKயின் பிட் ஆப்பரேட்டர்கள் விடை
சவால் 1
c = (sizeof(int) * 8) - 1
c = (((a - b) & (2^c)) >> c) * b + (((b - a) & (2^c)) >> c) * a

சவால் 2
c = a - 1
c = c + ((a & 1) * 2)

முதல் சவாலுக்கான எனது விடை
c = (a * (a div b) + b * (b div a)) / ((a div b) + (b div a))

Sunday, October 03, 2004

CODE எழுதுங்க

இன்னைக்கு புதிர் இல்லை. ஒரு சவால்; இல்லை! அறிவுபூ....; வேண்டாம்! சரியா வரலை. 'சவால்'னே வைச்சுக்குவும். இந்த சவால் சாப்ட்வேர் ப்ரோக்ரமர்களுக்கானது(அதுக்காக மத்தவங்க கலந்துக்காதீங்கன்னு சொல்லலை). பல ப்ரொக்ரமர்களுக்கு இந்தக் கேள்வி தெரிந்திருக்கும். Interviewக்களில் கூட பார்த்திருப்பார்கள்.

அதாவது a,b ன்னு இரண்டு variables. இந்த இரண்டே இரண்டு variablesஐ மட்டும் வைத்துக்கொண்டு(வேறு variable எதுவும் பயன்படுத்தக்கூடாது), இவைகளின் மதிப்புகளை(Values) பண்டமாற்றிக்(swap) கொள்ள வேண்டும்(சே! தமிழில் எவ்வளவு வீக்காய் இருக்கிறேன்!!). இதற்கு பதிலும் பலருக்குத் தெரிந்திருக்கும். கீழேயுள்ள CODEதான் பதில்.

a = a + b
b = a - b
a = a - b


பொறுங்க! பொறுங்க!! இது சவால் இல்லை. அது இனிமேதான் வருது(இன்னைக்கு ரொம்ப இழுக்கிறேனில்ல).


சவால் - 1

a,b ன்னு இரண்டு variables. இந்த இரண்டில் நீங்க பெரிய நம்பர் எதுன்னு கண்டுபிடிக்கனும். ஆனா ரெண்டு கண்டிசன். 'கண்டிசன்' மற்றும் 'கண்ட்ரோல் ஸ்டரக்சர்'(அதாங்க! if.,for.,while., etc.,.) எதுவும் உபயோகிக்கக்கூடாது. ஆனா +,- மாதிரி கணித குறீயீடுகள், மற்றும் log, sqrt மாதிரி கணித functions ஆகியவைகளை பயன்படுத்தலாம். முடிவில் எனக்கு c என்கிற variableஇல் பெரிய நம்பர் இருக்கனும்.


சவால் - 2

aன்னு ஒரே ஒரு variable. இப்ப அதில் ஒற்றைப்படை(ODD) எண்ணிருந்தால், அதற்கு அடுத்த இரட்டைப்படை(EVEN) எண் வேண்டும். அப்படியில்லாமல் இரட்டைப்படை(Odd) எண்ணிருந்தால், அதற்கு முந்தைய ஒற்றைப்படை(Even) எண் வேண்டும். ஆதாவது 1 இருந்தா 2 வரணும்; 2 இருந்தா 1 வரணும். 15 இருந்தா 16 வரணும்; 16 இருந்தா 15 வரணும்.
கண்டிசன்ஸ் வழக்கம்போல்தான்(சவால் 1இல் உள்ளவை).

பின்குறிப்பு(விட மாட்டியா?):

மேலுள்ள இரண்டு சவால்களும் பாஸிட்டிவ் எண்களுக்கு மட்டுமே பொருந்தும்.

பஞ்ச பாண்டவர்களின் ஆயுள்

பாண்டு மறைந்து பாண்டவர்கள்
அஸ்தினாபுரம் சென்றபோது
தருமர் வயது ........................................... 16 வருடம்
அஸ்தினாபுரத்தில் வசித்ததும்,
குருகுலவாசமும் ...................................... 13 வருடம்
சாலி கோத்தரர் ஆசிரமத்தில் ...................... 1/2 வருடம்
வேத்ரகியத்தில் ......................................... 1/2 வருடம்
பாஞ்சாலன் மனையில் .............................. 1 வருடம்
அஸ்தினாபுரத்தில் ..................................... 5 வருடம்
இந்திரபிரஸ்தம் ........................................ 23 வருடம்
வனவாசம் ............................................... 12 வருடம்
அக்ஞாதவாசம் ......................................... 1 வருடம்
துரியோதன வதத்திற்கு
பின் அரசு புரிந்தது ................................... 36 வருடம்
பரிட்சத்துக்கு முடி சூட்டியபின்
தவ வனத்தில் ......................................... 1/2 வருடம்
-------------------------------------------------------------------------------
.......................................................... 108 1/2 வருடம்
-------------------------------------------------------------------------------

- கிருபானந்த வாரியார்.

"எனி" கீஇந்தப் படத்துக்கு விளக்கம் தேவையில்லை.

Thursday, September 30, 2004

ஈஈயடிச்சான் காப்பி

பாதிப்பு: வலைப்பூ-The Dullest Blog in the World

சுந்தரவடிவேல் ஈயடிச்சான் காப்பியடித்ததால், நான் ஈஈயடிச்சான் காப்பியடிக்க முயற்சிக்கிறேன்.

வழக்கம்போல் என் அறைக்குத் திரும்பினேன். பொழுதுபோகவில்லை. 12வது முறையாக "பொன்னியின் செல்வன்" முதல் பாகத்தைப் பிரித்து படிக்க ஆரம்பித்தேன்.

இப்படித்தான் குல்லா போடனும


MK பதிலை தமிழில் பதிந்திருந்தால் எனக்கு வேலை(டைப் பண்றதுதான்) குறைந்திருக்கும். KVRஆவது தமிழில் பதில் சொல்வார்ன்னு பார்த்தா நைஸா ஜகா வாங்கிட்டார்.
பரியின் தலையில் சிகப்பு நிறத் தொப்பிதான் இருந்திருக்கும். பரி இப்படி யோசித்திருப்பார். முன்னால் உள்ள இருவரின் தலையிலும் பச்சை நிறத் தொப்பி இருந்திருந்தால், ரமணி தன் தலையில் சிகப்பு நிறத் தொப்பி என்று கூறியிருப்பார். ஆனால் "தெரியாது" என்று கூறுவதால், ஒன்று முன்னால் இருப்பவர்களின் தலைகளில் இரண்டுமே சிகப்பு, அல்லது ஒன்று பச்சை, ஒன்று சிகப்பு.
இது டைனோவுக்கும் தெரியும். இப்பொழுது பரியின் தலையில் பச்சை நிறத் தொப்பி இருந்திருந்தால், தன் தலையில் சிகப்பு நிறத் தொப்பி என்று டைனோ சொல்லியிருப்பார். அவரும் "தெரியாது" என்று சொல்வதால், பரி தன் தலையில் சிகப்பு நிறத் தொப்பிதான் என்று முடிவு செய்கிறார்.
இன்னொரு முக்கியமான விஷயம்! இதில் மூவருமே புத்திசாலியாய் இருந்தால்தான், இந்த derivation சரியாய் வரும்.

Monday, September 27, 2004

குல்லா போடுங்க

விகடனில் மதனின் சமீபத்திய கார்டூனையும், அதற்கு இட்லிவடையில் வெளியான Commentகளையும் படித்ததும் எனக்கு இந்த புதிர் ஞாபகத்துக்கு வந்து விட்டது(கண்டமேனிக்கு ஞாபகத்துக்கு வருது).

மூன்று பேர் (வசதிக்காக டைனோ, ரமணி, பரி என்று அழைப்போமே!?!) வரிசையாக நிற்கின்றனர். முதலில் பரி, அவருக்கு பின்னே டைனோ, அவருக்குப் பின்னே ரமணி என்ற வரிசையில் நிற்கின்றனர். ரமணியால் பரி, டைனோ இருவர் தலையையும் பார்க்க முடியும்(அதிர்ஷ்டசாலி!). டைனோவால் பரி தலையை மட்டுமே பார்க்க முடியும். பரி யார் தலையையும் பார்க்க முடியாது(ஐயோ பாவம்!!). இப்பொழுது யோசிப்பவர்(அட! நாந்தாங்க) அவர்கள் முன்னால் வந்து ஐந்து தொப்பிகளைக் காட்டுகிறார். அவற்றில் மூன்று சிகப்பு நிறத்தொப்பிகள், இரண்டு பச்சை நிறத்தொப்பிகள்(கலர் காட்டுறார்). தொப்பிகளை காட்டிவிட்டு மூவர் கண்களையும் யோசிப்பவர் துணியால் கட்டிவிட்டார்(இதுக்குபேர்தான் கண்கட்டு வித்தையோ?). கட்டியபின் மூவர் தலையிலும் ஆளுக்கு ஒரு தொப்பியாக வைத்துவிட்டு, மீதி இரண்டு தொப்பிகளை ஒளித்து வைத்து விடுகிறார்(இதாம்பா இந்த ஆள்ட்ட பிடிக்க மாட்டேங்குது!?). பின்னர், மூவர் கண் கட்டுகளையும் அவிழ்த்துவிட்டு, முதலில் ரமணியிடம் கேட்கிறார்,
"உங்கள் தலையில் எந்த நிறத் தொப்பி உள்ளது?"
ரமணி சிறிது யோசித்துவிட்டு, "தெரியாது" என்கிறார்.

பிறகு டைனோவிடமும் அதே கேள்வியைக் கேட்டார்.
டைனோவும் சிறிது யோசித்துவிட்டு, "தெரியாது" என்கிறார்.

பிறகு பரியிடம் அதே கேள்வியைக் கேட்க,
அவர் சிறிது யோசித்துவிட்டு, "என் தலையில் ____ நிறத் தொப்பி இருக்கிறது." என்கிறார். அதைக்கேட்ட யோசிப்பவர், "அட! சரியா சொல்லிட்டீங்களே!! சபாஷ்." என்கிறார்.

அப்படின்னா பரி தலையில் எந்த நிறத் தொப்பி இருந்தது? அதை அவர் எப்படி கண்டுபிடித்தார்(இது முக்கியம்)? யோசிச்சு சொல்லுங்க.

உன் கண் உன்னை ஏமாற்றினால்

கீழே உள்ள படத்தை பாருங்கள். இதில் A என்று குறிக்கப்பட்டிருக்கும் கட்டத்தையும், B என்று குறிக்கப்பட்டிருக்கும் கட்டத்தையும் நன்றாக பாருங்கள். இரண்டும் ஒரே சாம்பல் வண்ணத்தால் வரையப்பட்டவை. நம்பமுடியவில்லையா? நானும் முதலில் நம்பவில்லை. ஆனால் FLASHஇன் உதவியால் அனிமேஷனெல்லாம் போட்டு விளக்கியிருந்தார்கள். அதைப் பார்த்தபின்தான் நம்பினேன். அந்த urlஐ தொலைத்துவிட்டேன். அதனால் நீங்களும் நம்பிவிடுங்கள்.
இப்பொழுதாவது உங்கள் கண் எவ்வளவு குறைபாடுள்ளது என்று தெரிகிறதா, மன்னிக்கவும்! புரிகிறதா?

Thursday, September 23, 2004

வட்டமேஜை கொள்ளையர்கள் விடை

நால்வரும் படத்தில் உள்ளது போன்ற வரிசையில்(திசை முக்கியமில்லை) அமர்ந்திருக்கின்றனர். ரமணியின் பதில் சரிதான். ஆனால் GRE எல்லாம் யான் அறியேன் பராபரமே.


Wednesday, September 22, 2004

அது என்ன 14 ஆண்டுகள்?

14 ஆண்டுகள் ராமன் வனவாசம் செய்ய வேண்டும் என்று கைகேயி வரம் கேட்டாள்.அது என்ன 14 ஆண்டுகள் கணக்கு? முன் காலத்தில் ஆண்களுக்கு 16 வயதிலும் பெண்களுக்கு 12 வயதிலும் திருமணம் செய்வர்.இவர்களின் சராசரி வயது பதினாலு.அந்த பதினான்கு ஆண்டுக்குள் ஒரு புதிய தலைமுறை தோன்றி, புதிய சகாப்தமே மலர்ந்து விடும்.

தன் மகன் பரதன் மூலம் ஒரு புதிய தலைமுறை உருவாகி, ராமன் வனவாசம் முடிந்து வரும்போது, நிலைமையே அயோத்தியில் தலைகீழாக வேண்டும் என்பதற்காகத்தான் 14 ஆண்டுகள் ராமனை காட்டுக்கு அனுப்புகிறாள் கைகேயி. இது ஒரு பழைய கல்கியில் படித்த துணுக்கு(அதனாலே கம்பராமாயண ஆளுங்க என்கூட சண்டைக்கு வராதீங்க.)

Sunday, September 19, 2004

20+1=19

என்னடா இவன்!... அன்றைக்கு 1=2ன்னான். இன்றைக்கு 20+1=19ங்குறான்(நட்டு லூஸோ)
இருபதுடன் ஒன்றைச் சேர்த்து பத்தொன்பது ஆக்குறது எப்படி? இதுதான் இந்த வார SMS கேள்வி(சே! விஜய் டீவி ஓவரா பார்த்துட்டம்பா!!)
ரொம்ப யோசிக்காதீங்க. விடை கீழேயே இருக்கு.
.
.
.
.
.

விடை:ரோமன் லெட்டரில் XX என்பது 20ஐக் குறிக்கும். இதனுடன் ஒன்றைச் சேர்த்தால்(XIX) 19 ஆகி விடும்(ஹி!ஹி!!ஹி!!!).

Thursday, September 16, 2004

பழமொழி விளக்கம

1. "திருநீறிட்டார் கெட்டார் ; இடாதார் வாழ்ந்தார்" என்பது பழமொழி. இதன் உண்மை பொருள் "திருநீறிட்டு யார் கெட்டார் ; இடாது யார் வாழ்ந்தார்" என்பதாகும்.
-வாரியார்.

2. "குட்டுப்பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப்பட வேண்டும்" என்பது பழமொழி.ஆனால் இது உண்மையிலேயே இது "குட்டுப்பட்டாலும் மோதுகிற கையால் குட்டுப்படணும்" என்பதே சரியானது. அதாவது, தன்னை குட்டுகிறவன் தன் சக்திக்கு நிகராக மோதுகிற தகுதி உள்ளவனாக இருக்க வேண்டும் என்பதே பழமொழியின் அர்த்தம்.
-குன்றக்குடி அடிகளார்.

3. "மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே" என்பதே பழமொழி.ஆனால் உண்மையிலே இது "மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே" என்பதே சரி. மண்குதிர் என்பது ஆற்று நீரின் சுழற்சியால் ஏற்படும் மணல்மேடுகள்.இது பாறை போல் காட்சியளித்தாலும், அதன் மீது ஏறினால் அது நீரில் அமிழ்ந்து விடும்.எனவே மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்கக் கூடாது.குதிர் என்பது குதிரை என திரிந்து விட்டது.

Wednesday, September 15, 2004

கயிரு எரிக்கிறாங்க

நம்ம கயிறு கணக்க குச்சிக் கணக்கா ஆக்கி டைனோ ஜூன் மாசமே அவர் பிளாகில் கேள்வி போட்டிருக்கார்(நேர்முகத் தேர்வில் கேட்கப்பட்டதாம்). ஆனாலும் இதுவரைக்கும் இங்கே விடை வராததால் நானே விடை சொல்கிறென்.

ஓரே நேரத்தில் முதல் கயிறை இரு முனைகளிலும், இரண்டாவது கயிறை ஒரு முனையிலும் கொளுத்தவும்(குச்சியை வேணாலும் கொளுத்திப் பாருங்க). முதல் கயிறு எரிந்து முடிக்கையில் 1/2 மணி நேரம் ஆகியிருக்கும். இப்பொழுது இரண்டாவது கயிற்றின் மறுமுனையைக் கொளுத்தவும். இரண்டாவது கயிறு எரிந்து முடிக்க மேலும் 1/4 மணி நேரம் ஆகும். மொத்தம் 45 நிமிடம்(எனக்கு அந்த வேலை கிடைக்குமா?!?!).

குதிரையா? கழுதையா?

இதுவும் நம்ம காக்கா படம் மாதிரிதான். திருப்பி திருப்பி(அதாவது சுத்தி சுத்தி) பாருங்க.

Sunday, September 12, 2004

கயிறு திரிக்கிறாங்க

வர வர நம்ம வலைத்துணுக்கில் வரும் துணுக்குகளுக்கு கன்னாபின்னான்னு பெயர் வைக்கிறேனுல்ல. என்ன பண்றது! எல்லாம் நான் படிக்கிற பத்திரிக்கைகளின் சகவாச தோசம்தான் (புதுசு! கண்ணா! புதுசு). சரி இப்ப கயிறைப் பற்றி யோசிப்போம்.

இரண்டு கயிறுகள் உள்ளன. இரண்டும் (தனி தனியே) எரிந்து முடிக்க ஒவ்வொன்றிற்கும் 1 மணி நேரம் ஆகும். ஆனால், இரண்டும் முழு நீளத்திற்கும் ஒன்று போல் இருக்காது. எனவே அவை பாதி எரிந்தால் 1/2 மணி நேரம் என்றெல்லாம் கணக்கிட முடியாது. இவை இரண்டையும் வைத்து 45 நிமிடங்களை கணக்கிட வேண்டும். முக்கியமான விஷயம், இதை செய்யும் பொழுது உங்கள் கையில் watch இருக்கக் கூடாது (நான் computerலே time பார்த்துப்பேனே).

Thursday, September 09, 2004

காக்காவா?


மேலே படத்தில் உள்ளது என்னவென்று தெரிகிறதா? ஓரு பறவை(காக்காவா?) எதையோ கவ்விக் கொண்டு இருக்கிறதல்லவா? இப்பொழுது படத்தை அப்படியே தலைகீழாக கவுத்துங்கள்(ஓ! மானிட்டரைக் கவுத்த முடியாதில்லே!!!). சரி, அப்ப கீழே பாருங்கள். அதே படம்தான். இப்ப என்ன தெரிகிறது?
.
.
.


ஒரு தீவும், தீவோரத்தில் ஒரு படகும், அருகில் பெரிய மீனும் தெரிகிறதா?

Tuesday, September 07, 2004

1=2 விளக்கம்

தவறு 4வது statementஇல் இருந்து, 5வது statementஐ கொண்டு வருவதில் இருக்கிறது. a = b எனும் பொழுது (a-b) = 0 ஆகிவிடும். 0வைக் கொண்டு எதை வகுத்தாலும் infinityதான்( infinityக்கு சரியான தமிழ் வார்த்தை என்ன?) வர வேண்டும். அதனால் 5வது statement தவறு. சரியான விளக்கம் அளித்த டைனோவுக்கும்(அதென்ன பெயர்! 'டைனோ'!!), மீனாக்ஸுக்கும் என் பாராட்டுகள்!!!!!.

சரளமான ஆங்கிலம்

நம்மில் பலருக்கு(எனக்கும்தான்) ஆங்கிலத்தில் பிறர் பேசுவது புரியும், ஆனால் சரளமாக பேச வராது. உங்களுக்கும் ஆங்கிலத்தில் சரளமாக பேச ஆசையா? என்ன, Vivekananda Institute விளம்பரம் மாதிரி இருக்கா. இப்ப மேட்டர்! இது திக்கு வாய் உள்ளவர்கள், வாயில் கூழாங்கல்லை அடக்கிக்கொண்டு கத்துவது போன்ற ஒரு பயிற்சிதான். இந்த பயிற்சியை தினமும் இரு வேளை(யாவது) செய்ய வேண்டும். இந்த பயிற்சியை மேற்கொள்வதற்கு முன், அறையில் உங்களைத் தவிர ஒருவரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இப்பொழுது கீழே படத்தில் உள்ளதை வாய் விட்டு உரக்க, வேகமாக படியுங்கள்.


சரி! படித்து முடித்து விட்டீர்களா? இன்னும் பயிற்சி முடியவில்லை. இப்பொழுது மறுபடியும் மேலே சென்று, ஒவ்வொரு வரியின் மூன்றாவது சொற்களை மட்டும் அதே போல் வாய் விட்டுப் படியுங்கள்.

உங்களுக்கு ஆங்கிலம் புரியும்தானே!!!!!!

Monday, September 06, 2004

1=2

இது இலவச விளம்பரம் இல்லீங்க!!!

கணித நண்பர்களுக்கு இந்த proof(???) தெரிந்திருக்கலாம்.

1. a=b
2. a*a = a*b ................ (இரு பக்கமும் 'a'ஆல் பெருக்கவும்.)
3. a*a-b*b = a*b-b*b ....... ( ,, ,, 'b*b' ஆல் கழிக்கவும்.)
4. (a-b)*(a+b) = (a-b)*b ... (a^2-b^2 formula)
5. a+b = b .................. ((a-b)ஆல் வகுக்கவும்)
6. b+b = b .................. (1)
7. 2b = b
8. 2 = 1 .................... (bஆல் வகுக்கவும்)

அட என்ன சார்! கிராபிக்ஸ் வேலையா(அதாங்க! மாயாஜாலம்) இருக்கு? 2 = 1 எப்படி வரும்?!? அப்ப எங்கேயோ தப்பிருக்கு(பெரிய கண்டுபிடிப்பு!?!). எங்கே தப்பிருக்கு? யோசிச்சுக்கிட்டே இருங்க. அடுத்த postல சொல்றேன்.

Sunday, September 05, 2004

விலை போகுமா விடை

திரு.பரி சொல்லியதுதான் சரியான விடை. நான்காவது வருடத்தில் வண்டியின் விலை ரூ.296/-. திரு.KVR சொல்லிய விளக்கமும் சரிதான். நம்மாளுங்க proove பண்ணிட்டாங்க.

Saturday, September 04, 2004

விலை போகுமா?

நம்மாளுங்க(அதான் Blog படிக்கிறவங்க) கணக்குல ரொம்ப வீக்கா இருக்காங்ளோன்னு எனக்கு ஒரு சந்தேகம். அப்படியெல்லாம் இல்லைன்னு prove பண்ணுங்க பார்ப்போம். இப்ப கணக்கைப் பார்ப்போம்.

சந்தையில்(எந்த ஊர்?), ஒரு வண்டியை(சைக்கிளா இருக்குமோ!?!) முதல் வருடத்தில் விலை ரூ.999/- கூறுகிறார்கள். ஆனால் வண்டி விற்கவில்லை. இரண்டாவது வருடத்தில் விலை ரூ.666/- என கூறுகிறார்கள். அப்போதும் வண்டி விற்கவில்லை. மூன்றாவது வருடத்தில் விலை ரூ.444/- என கூறுகிறார்கள். அப்போதும் விற்கவில்லை(அவ்வளவு கேவலமான வண்டியா!). எனில் நான்காவது வருடத்தில் என்ன விலை நிர்ணயம் செய்திருப்பார்கள்?

Friday, September 03, 2004

கண்ணை நம்பாதே


இந்தப் படத்தைப் பாருங்கள். எதுவும் ஆடவில்லை என்று உங்கள் மூளை உணர்த்தினாலும், உங்கள் கண் அதை நம்ப விடாது. நடுவில் வட்டத்துக்குள் இருக்கும் அந்த மங்கலான pattern ஒரு லென்ஸை வைத்து பார்ப்பது போல், அசைவது போல் ஒரு தோற்றம் கிடைக்கும். ஆனால் அது உண்மையில்
அசையவில்லை(கவனிக்கவும்! இது GIF அல்ல. JPEG படம்). இதற்கு யாருக்காவது விளக்கம் தெரிந்தால் அனுப்புங்களேன்( எனக்குத் தெரியாது! அதனால் தைரியமாக அனுப்புங்கள்!!!) .

Thursday, September 02, 2004

தமிழில் விண்டோஸ்

நிலா சாரலின் கற்பனை.

நம்ம பில்லு கேட்ஸு இர்க்ராரே, பில்லு கேட்ஸு! அவ்ரு ஒர்ங்காட்டி மட்றாஸ்காரா இர்ந்தா இந்த விண்டோஸ் கமாண்டல்லாம் இப்டி இர்ந்திர்க்மோ!!!

File = பைலு
Save = காப்பாத்து
Save as = ஐயே! இப்டி காப்பாத்து
Save All = அல்லாத்தையும் காப்பாத்து
Help = ஐயோ! அம்மா! காப்பாத்து
Find = தேடு மா!
Find Again = இன்னோர் தபா தேடு மா!
Move = ஜகா வாங்கு
Mail = போஸ்டு
Mailer = போஸ்டுமேன்
Zoom = பெர்ஸா காட்டு
Zoom Out = வெள்லே வந்து பெர்ஸா காட்டு
Open = தெற நைனா!
Close = பொத்திக்கோ
New = புச்சு
Old = பழ்சு
Replace = இத்த தூக்கி அதுல, அத்த தூக்கி இதுல போடு
Run = ஓடு நைனா!
Print = அச்சடி
Print Preview = புரூப் பாத்து அச்சடி
Copy = பிட் அடி
Cut = வெட்டுக்குத்து
Paste = ஒட்டு
Paste Special = நல்லா எச்சித் தொட்டு ஒட்டு
Delete = கீசிடு
View = லுக்கு உடு
Tools = ஸ்பானரு
Toolsbar = ஸ்பானர் செட்டு
Spreadsheet = பெட்ஷீட்டு, ஜமக்காளம்
Exit = உட்றா டேய்
Compress = அமுக்கிப் போடு
Mouse = எலி
Click = போட்டோ சத்தம்
Scrollbar = இங்கே அங்கே இழுத்தடி
Pay Per View = துட்டுக்கு பயாஸ்கோப்பு
Next = அப்பாலே
Previous = முன்னாடி
back = பின்னாடி
home = ஊடு
reload = புச்சா லோட் பண்ணு
view = பாக்க
find = தேடிப் பாரு
go= நீ போடா..
default = எப்டி இர்க்கோ அப்டிதான் இர்க்கும்
do = பண்ணுமா
undo = திர்பி பண்ணுமா
net search = வலை வீசித் தேடு
Do you want to delete selected item? = மெய்யாலுமே கடாசிடவா?
Do you want to move selected item? = மெய்யாலுமே தூக்கிரவா?
Do you want to save selected item? = மெய்யாலுமே வச்சிக்கவா?
Abort, Retry, Ignore = முடிச்டு, இன்னோர் தபா பண்ணு, கண்டுக்காத
General protection fault = காலி
Access denied = கை வெச்சே கீசிருவேன்
Operation illegal = வேலுர் ஜெய்ல் மூணு மாசம்

ரொம்ப டமாஸாக்கீதுபா!!! தமிள்ப்பட்த்ரவங்க கவனிங்கபா.

Tuesday, August 31, 2004

கையில் ஓவியம்

இது என்ன என்று தெரிகிறதா? நாய் இல்லை. மனிதக்கையில் வரைந்த ஒவியம்(கை கொடுத்த மனிதருக்கு ரொம்பத்தான் பொறுமை!)

பெருக்கத் தெரியுமா?

வகுக்கத் தெரியுமா - கணித வித்தை எப்படி work ஆகிறது என்று கேட்டிருந்தேன். அதற்கு ஒருவரும் பதிலளிக்கவில்லை. அதனால் நானே சொல்கிறேன்.

ஒரு மூன்று இலக்க எண்ணை(xyz) எடுத்துக்கொள்ளுங்கள்.
அதை 1000த்தால் பெருக்குங்கள் - xyz * 1000 = xyz000
இப்பொழுது அதே மூன்று இலக்க எண்ணைக் கூட்டுங்கள் - xyz000 + xyz = xyzxyz
அதாவது ஒரு மூன்று இலக்க எண் அருகில், அதே எண்ணை எழுதும்பொழுது, உண்மையில் அந்த எண்ணை 1001ஆல் பெருக்குகிறோம்.

பின்பு அதை சிறிது சிறிதாக 7, 11, 13 ஆல் வகுக்கிறோம்(7 * 11 * 13 = 1001).

ஆக அந்த எண்ணை 1001ஆல் பெருக்கி, மறுபடியும் 1001ஆல் வகுக்கிறோம். அப்புறம் அதே எண் கிடைக்காமல் வேறயா கிடைக்கும்?!!!

Friday, August 27, 2004

மூன்று புதிர்கள்

திரு. துரைசிங்கம் எனக்கு மூன்று புதிர்கள் அனுப்பியுள்ளார்.

1. கண்ணனுடைய அப்பாவுக்கு ஐந்து குழந்தைகள். ஆணழகன், ஈரழகன், ஊரழகன், ஏழழகன். ஐந்தாவது குழந்தையின் பெயர் என்னவாக இருக்கும் ?

ஓரழனா.. ஐயோ.. கேள்வியை வாசியுங்கள்.
கண்ணன் தான் மற்றவர்.

2. ஓட்டப் பந்தயத்தில் கடைசியாகச் செல்பவரை நீங்கள் முந்தினால், எத்தனையாவதாக ஓடுவீர்கள் ?

கடைசியாக ஓடுபவரை எப்படி முந்துவது. நீங்கள் கடைசி என்றால், உங்களை முந்தினாலும் நீங்கள் கடைசி தானே !
3. வேகமாகக் கூட்டுங்கள் பார்க்கலாம் : 1000, 40, 1000, 30, 1000, 20, 1000, 10. விடையென்ன ?
.
.
.
.
.
(5000 என்றால், மீண்டும் முயற்சி செய்யுங்கள். விடை 4100)

யார் முட்டாள்?

சர்தார்ஜி ஒருவர் நம்ம ஊர் கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

ஒரு கோடியை வெல்ல அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவருடைய பதில்களும் . . . .

1) நூறு வருடப் போர் எவ்வளவு காலம் நடந்தது?
a)116 b)99 c)100 d)150

முதல் ரவுண்டில் கேட்கப்பட்ட கேள்வியானதால், சர்தார்ஜி இதை choiceஇல் விட்டு விட்டார்.

2) பனாமா தொப்பிகள் எந்த நாட்டில் தயாரிக்கப் படுகின்றன?
a)பிரேசில் b)சிலி c)பனாமா d)இக்வேடார்

சர்தார்ஜி நண்பருக்கு போன் போட்டுக் கேட்டார்.

3) ரஷியர்கள் எந்த மாதத்தில் அக்டோபர் எழுச்சியைக் கொண்டாடுவர்?
a)ஜனவரி b)செப்டம்பர் c)அக்டோபர் d)நவம்பர்

சர்தார்ஜி மக்கள் கருத்தைக்கேட்டு விடையளித்தார்.

4) கீழ்கண்டவற்றில் எது ஜார்ஜ் IV ஆம் மன்னனின் முதற்ப் பெயர்(First Name)?
a)எடர் b)ஆல்பர்ட் c) ஜார்ஜ் d)மானுவேல்

சர்தார்ஜி 50-50 சான்ஸ் எடுத்தார்.

5)பசிபிக் சமுத்திரத்தில் இருக்கும் "கானெரித் தீவு", அந்தப் பெயரை எந்த விலங்கின் பெயரிலிருந்து பெற்றது?
a)கானெரிப் பறவை b)கங்காரு c)பப்பி d)எலி

சர்தார்ஜி போட்டியிலிருந்து விலகிக் கொண்டார்.

சர்தார்ஜியின் முட்டாள்த்தனத்தை எண்ணி சிரிக்கிறீர்களா? அப்படியானால் கொஞ்சம் கீழே போங்கள்.

. .


. .


. .


. .


. .


. .

சரியான விடைகள் :
1) நூறு வருடப் போர் 116 வருடங்கள்(1337-1453) நடந்தது.
2) பனாமாத் தொப்பிகள் இக்வேடார் நாட்டில் தயாரிக்கப்படுகின்றன.
3) அக்டோபர் எழுச்சி நவம்பர் மாதம் கொண்டாடப்படுகிறது.
4) ஜார்ஜ் IV ஆம் மன்னனின் முதற்ப் பெயர் ஆல்பர்ட். 1936ஆம் வருடம் தன் பெயரை மாற்றிக்கொண்டான்.
5) பப்பி. "இன்சுலாரியா கானெரி" என்றால் லத்தினில் 'பப்பிகளின் தீவு'(பப்பிக்கு சரியான தமிழ் வார்த்தை என்னப்பா?) என்று அர்த்தமாம்.


இப்பொழுது சொல்லுங்கள் யார் முட்டாள். இனிமேலாவது சர்தார்ஜிகளைப் பற்றி ஜோக் சொல்வதற்கு முன் கொஞ்சம் யோசிப்போமாக.

Thursday, August 26, 2004

ஓவரா குடிக்காதீங்க!

அடுத்ததாக கண்ணுக்கு குளிர்ச்சியாக ஒரு படம் பார்க்கலாமா? உங்கள் கண்ணோ, மனதோ கெட்டுப் போனால் நான் பொறுப்பல்ல.
குடிச்சிருக்கீங்களா?

வகுக்கத் தெரியுமா?

முதன்முதலாக ஒரு கணக்கில் நம் வலைத்துணுக்கை துவக்குவோம். நிறைய பேருக்கு தெரிந்த கணித வித்தைதான். முதலில் ஒரு மூன்று இலக்க(digit) எண்ணை எழுதிக்கொள்ளுங்கள். பின்னர் அதே எண்ணை அதன் அருகில் எழுதி அதை ஆறு இலக்கமாக்குங்கள். இப்பொழுது கிடைத்திருக்கும் எண்ணை எழால் வகுங்கள். மீதி இல்லாமல் வகுபடும். இப்பொழுது கிடைத்திருக்கும் விடையை பதினொன்றால் வகுங்கள். மறுபடியும் மீதி இல்லாமல் வகுபடும். இப்பொழுது கிடைத்திருக்கும் விடையை பதிமூன்றால் வகுங்கள். விடையைப் பார்த்து ஆச்ச்ர்யப்படாதீர்கள்!! நீங்கள் முதலில் எழுதிய மூன்று இலக்க எண்ணேதான் விடை!!!சரி வித்தை காட்டி முடித்துவிட்டீர்களா? இப்பொழுது ஒரு சின்னக் கேள்வி. இந்த வித்தை எப்படி work ஆகிறது? அதாவது, மேலே சொன்ன எண்களால் ஏன் அந்த ஆறு இலக்க எண் மிச்சமில்லாமல் வகுபடுகிறது? கடைசியில் எப்படி முதலில் எழுதிய மூன்று இலக்க எண்ணே வருகிறது? யோசிங்க பார்ப்போம்.

யோசிப்பவர்

எல்லோரும் பிளாகில் சண்டை போடுவதை பார்த்து, நானும் ஒரு பிளாக் எழுத ஆசைப்பட்டேன்(சண்டை போட இல்லை!!). தமிழர்களுக்கு கருத்து சொல்ல நிறைய கருத்து கந்தசாமிகள் இருப்பதால், நானும் கருத்து சொல்ல விரும்பவில்லை. இந்த பிளாக் முழுக்க முழுக்க பொழுதுபோக்காக கொடுக்கவிருக்கிறேன். பிறகு ஏன் இதற்கு யோசிங்க என்று பெயர் வைத்தேன் என்று யோசிக்கிறீர்களா? இதை கொஞ்சம் அறிவுபூர்வமாகவும்?!? maintain பண்ண விரும்புகிறேன். புதிர்கள், கொஞ்சம் சிந்திக்கவைக்கும் ஜோக்குகள், கொஞ்சம் அறிவுத்துணுக்குகள், நெட்டில் நான் ரசித்த(கவனிக்கவும், நான் வரைந்தது அல்ல) படங்கள் ஆகியவற்றை 'தமிழ் கூறும் நல்லுலகுடன்'(எல்லாரும் இப்படித்தான் சொல்றாங்க) பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கவிதைகள் பல பிளாக்களில் வருவதால் அது இந்த வலைத்துணுக்கில் இருக்காது. இவற்றில் எதுவுமே எனது சொந்த படைப்புகள் அல்ல என்பதை முதலிலேயே ஒத்துக்கொள்கிறேன். இந்த வலைத்துணுக்கில் பதிய, இல்லை பிரசுரிக்க, வேண்டாம் பதியவே இருக்கட்டும், யார் வேண்டுமானாலும் விஷயங்களை(அல்லது பார்த்து ரசித்த Linkகளை) அனுப்பலாம். yosippavar@yahoo.co.in என்ற முகவரிக்கு உங்கள் படைப்புகளை!?!? அனுப்புங்கள்.