Showing posts with label சங்கத்தமிழ். Show all posts
Showing posts with label சங்கத்தமிழ். Show all posts

Friday, April 07, 2006

சங்க கவிகளும் சினிமா பாடல்களும் - II

நமது திரட்டில் இரண்டாவது பாடல் இது. இது போன்ற பாடல்களை சுட்டிக் காட்டி உதவுமாறு வாசகர்களை கேட்டிருந்தும் யாரும் சுட்டவில்லை. இன்றும் வாசகர்கள் இது போன்ற பாடல்களை சுட்ட வரவேற்கபடுகிறார்கள். இனி பாடல்...


யாயும் ஞாயும் யாரோ கியரோ
எந்தையு நுந்தையு மெம்முறை கேளிர்
யானு நீயு மெவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே


இந்த பாடல் இடம் பெற்ற படம் உங்களனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் அந்தப் படத்தில் எல்லா வரிகளும் வராது. 1, 3, 4, 5 வரிகள் மட்டுமே வரும். அதுவும் இந்த பாடலில் உள்ளது போலவே வராது(உதா :- செம்புலம் பெயர்ந்த நீர்த் துளி போல்) . இந்த பாடலை எழுதியவர் பெயர் தெரியவில்லை. அதனால் இந்த பாடலை எழுதியவர் இதில் வரும் உவமையைக் கொண்டு "செம்புல பெயல் நீரார்" என்றே அழைக்கப்படுகிறார். இந்தப் பாடலின் அர்த்தம் உங்களுக்கு எளிதில் விளங்கும் என்றே நினைகிறேன். மேலும் இதில் ஒரு மறைபொருள்("சொல்லாமல் சொல்லப்பட்டது" அல்லது "சிறப்பு") இருக்கிறது. அதையும் என்னவென்று கண்டுபிடியுங்கள்.

Sunday, March 26, 2006

சங்க கவிகளும் சினிமா பாடல்களும் - I

கொஞ்சம் வித்தியாசமாக ஏதாவது முயற்சி பண்ணலாமே என்று இதை ஆரம்பிக்கிறேன். நமது சினிமா பாடல்களில் அவ்வப்பொழுது சில சங்கப் பாடல்கள் எட்டிப் பார்ப்பதுண்டு(உபயம் - இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான்). அந்த சங்கப் பாடல்களையெல்லாம் இங்கே திரட்டலாம் என்று நினைக்கிறேன். வெறுமனே பாடல்களை மட்டும் போடாமல் அந்த சங்கப்பாடல் பற்றிய தெரிந்த தெரியாத விஷயங்களையும் இங்கே நாம் அலசுவோம்.

முதலில் ஏ.ஆர்.ரஹ்மானே ஆரம்பிக்கட்டும்!


"கன்று முண்ணாது கலத்தினும் படாது
நல்லான் றீம்பா னிலத்துக் காஅங்
கெனக்கு மாகா தென்னைக்கு முதவாது
பசலை யுணீஇயர் வேண்டும்
திதலை யல்குலென் மாமை கவினே
"


இந்தப் பாடல் இடம்பெற்ற படம் எதுவென்று உங்களில் நிறைய பேருக்கு தெரிந்திருக்கும். அதனால் அதையும் நீங்களே சொல்லுங்கள். அப்புறம் இந்தப் பாடலை எழுதியவர் யார்? இந்த பாடலுக்கு என்ன அர்த்தம்? இதையெல்லாம் கண்டுபிடிச்சு சொல்லுங்க. தெரியாதவங்க தெரிஞ்சுக்கட்டும்.

எனக்கும் அதிகமான பாடல்கள் தெரியாது. வாசகர்களிடமிருந்தும் இப்படிப்பட்ட பாடல்களை எதிர்பார்க்கிறேன். நீங்கள் புதிதாக ஏதேனும் பாடலை இந்த திரட்டில் சேர்க்க விரும்பினால் அதை ஒரு தனி பின்னூட்டமாக இதில் இடுங்கள். அடுத்த பதிவில் அந்த பாடல் இடம்பெறும்.