Tuesday, August 31, 2004

கையில் ஓவியம்

இது என்ன என்று தெரிகிறதா? நாய் இல்லை. மனிதக்கையில் வரைந்த ஒவியம்(கை கொடுத்த மனிதருக்கு ரொம்பத்தான் பொறுமை!)

பெருக்கத் தெரியுமா?

வகுக்கத் தெரியுமா - கணித வித்தை எப்படி work ஆகிறது என்று கேட்டிருந்தேன். அதற்கு ஒருவரும் பதிலளிக்கவில்லை. அதனால் நானே சொல்கிறேன்.

ஒரு மூன்று இலக்க எண்ணை(xyz) எடுத்துக்கொள்ளுங்கள்.
அதை 1000த்தால் பெருக்குங்கள் - xyz * 1000 = xyz000
இப்பொழுது அதே மூன்று இலக்க எண்ணைக் கூட்டுங்கள் - xyz000 + xyz = xyzxyz
அதாவது ஒரு மூன்று இலக்க எண் அருகில், அதே எண்ணை எழுதும்பொழுது, உண்மையில் அந்த எண்ணை 1001ஆல் பெருக்குகிறோம்.

பின்பு அதை சிறிது சிறிதாக 7, 11, 13 ஆல் வகுக்கிறோம்(7 * 11 * 13 = 1001).

ஆக அந்த எண்ணை 1001ஆல் பெருக்கி, மறுபடியும் 1001ஆல் வகுக்கிறோம். அப்புறம் அதே எண் கிடைக்காமல் வேறயா கிடைக்கும்?!!!

Friday, August 27, 2004

மூன்று புதிர்கள்

திரு. துரைசிங்கம் எனக்கு மூன்று புதிர்கள் அனுப்பியுள்ளார்.

1. கண்ணனுடைய அப்பாவுக்கு ஐந்து குழந்தைகள். ஆணழகன், ஈரழகன், ஊரழகன், ஏழழகன். ஐந்தாவது குழந்தையின் பெயர் என்னவாக இருக்கும் ?

ஓரழனா.. ஐயோ.. கேள்வியை வாசியுங்கள்.
கண்ணன் தான் மற்றவர்.

2. ஓட்டப் பந்தயத்தில் கடைசியாகச் செல்பவரை நீங்கள் முந்தினால், எத்தனையாவதாக ஓடுவீர்கள் ?

கடைசியாக ஓடுபவரை எப்படி முந்துவது. நீங்கள் கடைசி என்றால், உங்களை முந்தினாலும் நீங்கள் கடைசி தானே !
3. வேகமாகக் கூட்டுங்கள் பார்க்கலாம் : 1000, 40, 1000, 30, 1000, 20, 1000, 10. விடையென்ன ?
.
.
.
.
.
(5000 என்றால், மீண்டும் முயற்சி செய்யுங்கள். விடை 4100)

யார் முட்டாள்?

சர்தார்ஜி ஒருவர் நம்ம ஊர் கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

ஒரு கோடியை வெல்ல அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவருடைய பதில்களும் . . . .

1) நூறு வருடப் போர் எவ்வளவு காலம் நடந்தது?
a)116 b)99 c)100 d)150

முதல் ரவுண்டில் கேட்கப்பட்ட கேள்வியானதால், சர்தார்ஜி இதை choiceஇல் விட்டு விட்டார்.

2) பனாமா தொப்பிகள் எந்த நாட்டில் தயாரிக்கப் படுகின்றன?
a)பிரேசில் b)சிலி c)பனாமா d)இக்வேடார்

சர்தார்ஜி நண்பருக்கு போன் போட்டுக் கேட்டார்.

3) ரஷியர்கள் எந்த மாதத்தில் அக்டோபர் எழுச்சியைக் கொண்டாடுவர்?
a)ஜனவரி b)செப்டம்பர் c)அக்டோபர் d)நவம்பர்

சர்தார்ஜி மக்கள் கருத்தைக்கேட்டு விடையளித்தார்.

4) கீழ்கண்டவற்றில் எது ஜார்ஜ் IV ஆம் மன்னனின் முதற்ப் பெயர்(First Name)?
a)எடர் b)ஆல்பர்ட் c) ஜார்ஜ் d)மானுவேல்

சர்தார்ஜி 50-50 சான்ஸ் எடுத்தார்.

5)பசிபிக் சமுத்திரத்தில் இருக்கும் "கானெரித் தீவு", அந்தப் பெயரை எந்த விலங்கின் பெயரிலிருந்து பெற்றது?
a)கானெரிப் பறவை b)கங்காரு c)பப்பி d)எலி

சர்தார்ஜி போட்டியிலிருந்து விலகிக் கொண்டார்.

சர்தார்ஜியின் முட்டாள்த்தனத்தை எண்ணி சிரிக்கிறீர்களா? அப்படியானால் கொஞ்சம் கீழே போங்கள்.

. .


. .


. .


. .


. .


. .

சரியான விடைகள் :
1) நூறு வருடப் போர் 116 வருடங்கள்(1337-1453) நடந்தது.
2) பனாமாத் தொப்பிகள் இக்வேடார் நாட்டில் தயாரிக்கப்படுகின்றன.
3) அக்டோபர் எழுச்சி நவம்பர் மாதம் கொண்டாடப்படுகிறது.
4) ஜார்ஜ் IV ஆம் மன்னனின் முதற்ப் பெயர் ஆல்பர்ட். 1936ஆம் வருடம் தன் பெயரை மாற்றிக்கொண்டான்.
5) பப்பி. "இன்சுலாரியா கானெரி" என்றால் லத்தினில் 'பப்பிகளின் தீவு'(பப்பிக்கு சரியான தமிழ் வார்த்தை என்னப்பா?) என்று அர்த்தமாம்.


இப்பொழுது சொல்லுங்கள் யார் முட்டாள். இனிமேலாவது சர்தார்ஜிகளைப் பற்றி ஜோக் சொல்வதற்கு முன் கொஞ்சம் யோசிப்போமாக.

Thursday, August 26, 2004

ஓவரா குடிக்காதீங்க!

அடுத்ததாக கண்ணுக்கு குளிர்ச்சியாக ஒரு படம் பார்க்கலாமா? உங்கள் கண்ணோ, மனதோ கெட்டுப் போனால் நான் பொறுப்பல்ல.
குடிச்சிருக்கீங்களா?

வகுக்கத் தெரியுமா?

முதன்முதலாக ஒரு கணக்கில் நம் வலைத்துணுக்கை துவக்குவோம். நிறைய பேருக்கு தெரிந்த கணித வித்தைதான். முதலில் ஒரு மூன்று இலக்க(digit) எண்ணை எழுதிக்கொள்ளுங்கள். பின்னர் அதே எண்ணை அதன் அருகில் எழுதி அதை ஆறு இலக்கமாக்குங்கள். இப்பொழுது கிடைத்திருக்கும் எண்ணை எழால் வகுங்கள். மீதி இல்லாமல் வகுபடும். இப்பொழுது கிடைத்திருக்கும் விடையை பதினொன்றால் வகுங்கள். மறுபடியும் மீதி இல்லாமல் வகுபடும். இப்பொழுது கிடைத்திருக்கும் விடையை பதிமூன்றால் வகுங்கள். விடையைப் பார்த்து ஆச்ச்ர்யப்படாதீர்கள்!! நீங்கள் முதலில் எழுதிய மூன்று இலக்க எண்ணேதான் விடை!!!சரி வித்தை காட்டி முடித்துவிட்டீர்களா? இப்பொழுது ஒரு சின்னக் கேள்வி. இந்த வித்தை எப்படி work ஆகிறது? அதாவது, மேலே சொன்ன எண்களால் ஏன் அந்த ஆறு இலக்க எண் மிச்சமில்லாமல் வகுபடுகிறது? கடைசியில் எப்படி முதலில் எழுதிய மூன்று இலக்க எண்ணே வருகிறது? யோசிங்க பார்ப்போம்.

யோசிப்பவர்

எல்லோரும் பிளாகில் சண்டை போடுவதை பார்த்து, நானும் ஒரு பிளாக் எழுத ஆசைப்பட்டேன்(சண்டை போட இல்லை!!). தமிழர்களுக்கு கருத்து சொல்ல நிறைய கருத்து கந்தசாமிகள் இருப்பதால், நானும் கருத்து சொல்ல விரும்பவில்லை. இந்த பிளாக் முழுக்க முழுக்க பொழுதுபோக்காக கொடுக்கவிருக்கிறேன். பிறகு ஏன் இதற்கு யோசிங்க என்று பெயர் வைத்தேன் என்று யோசிக்கிறீர்களா? இதை கொஞ்சம் அறிவுபூர்வமாகவும்?!? maintain பண்ண விரும்புகிறேன். புதிர்கள், கொஞ்சம் சிந்திக்கவைக்கும் ஜோக்குகள், கொஞ்சம் அறிவுத்துணுக்குகள், நெட்டில் நான் ரசித்த(கவனிக்கவும், நான் வரைந்தது அல்ல) படங்கள் ஆகியவற்றை 'தமிழ் கூறும் நல்லுலகுடன்'(எல்லாரும் இப்படித்தான் சொல்றாங்க) பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கவிதைகள் பல பிளாக்களில் வருவதால் அது இந்த வலைத்துணுக்கில் இருக்காது. இவற்றில் எதுவுமே எனது சொந்த படைப்புகள் அல்ல என்பதை முதலிலேயே ஒத்துக்கொள்கிறேன். இந்த வலைத்துணுக்கில் பதிய, இல்லை பிரசுரிக்க, வேண்டாம் பதியவே இருக்கட்டும், யார் வேண்டுமானாலும் விஷயங்களை(அல்லது பார்த்து ரசித்த Linkகளை) அனுப்பலாம். yosippavar@yahoo.co.in என்ற முகவரிக்கு உங்கள் படைப்புகளை!?!? அனுப்புங்கள்.