Monday, November 29, 2004

ஒரு வண்டியா, ரெண்டு வண்டியா?



தூத்துக்குடி To சென்னை

தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு ஒவ்வொரு ஒரு மணி நேரத்துக்கும், ஒரு பேருந்து கிளம்புதுன்னு வைச்சுக்குங்க(உண்மையில் சாயங்காலம் 5 மணியிலிருந்து, 10 மணிவரை ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கும் ஒரு பேருந்து). அதே மாதிரி சென்னையிலிருந்தும், தூத்துக்குடிக்கு, ஒவ்வொரு ஒரு மணி நேரத்துக்கும் ஒரு பேருந்து கிளம்புது. தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு 12 மணி நேரப் பயணம். இப்ப நீங்க தூத்துக்குடியிலிருந்து, சாயங்காலம் 6 மணிக்கு கிளம்பற சென்னைப் பேருந்துல ஏறுறீங்க. சென்னை வந்து சேரும்பொழுது மொத்தம் எத்தனை சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு கிளம்பிய பேருந்துகளை பார்ப்பீங்க(நான் தூங்கிருவேன்னு பதில் சொல்லாதீங்க!!).

Friday, November 26, 2004

லெட்டர் டூ காசி

'கோவிச்சுக்காம' உங்களுக்கு எழுத சொல்லியிருக்கீங்க, சரி! என்ன எழுதனும்னு சொல்லவேயில்லையே. அப்புறம் ஒரு சின்ன விஷயம்(நீங்களும் இதைத்தான் சொல்றீங்கன்னு நினைக்கிறேன்). என்னோட அந்த பிளாக் ஏன் தமிழ்மணத்தால் திரட்டப்பட மாட்டேங்குதுன்னு யாராவது சொன்னா கொஞ்சம் என்னோட சின்ன மூளையிலே போட்டு அதைப் பத்தி யோசிப்பேன்.

ஐ! நல்லாருக்கு!!



தம்மடித்தவர்கள்

டைனோ 'Back To Form' வந்திருக்கிறார். வழக்கம் போல் சரியான விடை, ஆங்கிலத்தில்(!). NagaS ஒன்றும் குறைவில்லை. முதல் விடை அவருடையதுதான். இவர்களுக்கு வழக்கம் போல(?!?!) பரிசு( ஒரு பை தங்கராஜா வடிகட்டிப் புகையிலைச் சுருட்டுகள்) e-mail மூலம் அனுப்பி வைக்கப்படும்(:-)).

அனைவருக்கும் எனது கார்த்திகைத் திருநாள் வாழ்த்துக்கள்.

Tuesday, November 23, 2004

தம்மோ தம்மு

'தம்'முன்ன உடனே சிம்புவைப் பத்திய மேட்டர்னு நினைக்காதீங்க. இது நிஜமாவே தம் பத்தின மேட்டர்.

இப்ப, இந்த தம் அடிச்சுட்டு கடைசில சிகரெட் துண்டைக் கீழே போடுறோம்ல, அந்த மாதிரி ஒரு ஆறு துண்டுங்களை வைச்சுக்கிட்டு ஒரு முழு சிகரெட் தயாரிக்கலாம். இப்ப உங்ககிட்ட முப்பத்தாறு சிகரெட் இருக்கு. அப்ப மொத்தமா எத்தனை சிகரெட் நீங்கள் பிடிக்க முடியும்? சரியா சொன்னவங்களுக்கு ஒரு பை தங்கராஜா வடிகட்டிப் புகையிலை சுருட்டு(அதாங்க, Gold Flake KINGS) பரிசு.(விடை கண்டுபிடிக்கிறேன் பேர்வழின்னு ஓவரா தம் அடிக்காதீங்க!)

Saturday, November 20, 2004

ச்ச்ச்சும்மாஆஆ!!!



Thursday, November 18, 2004

தேங்காய் வியாபாரி பொழைச்சார்!!!

ஒரு தேங்காய் கூட மிச்சமில்லைன்னா, தேங்காய் வியாபாரி என்னத்துக்கு ஆவார். அதனால லாரி டிரைவர்(அல்லது கிளீனர்) கொஞ்சம் அறிவாளித்தனமா என்ன பன்னினார்னா, ஒரு மூடையை பிரித்து இரண்டுரண்டு தேங்காவா ஒவ்வொரு செக்போஸ்டிலும் கொடுத்துக்கிட்டு வந்தார். பன்னிரண்டாவது செக்போஸ்டில் கொடுத்து முடிஞ்சதும் ஒரு மூடையில் 1 தேங்காயும், இன்னோரு மூடை முழுசாவும் இருந்தது. பதிமூனாவது செக்போஸ்டில், மீதமிருந்த ஒரு மூடைக்கு மீதமிருந்த ஒரு தேங்காயை கொடுத்து விட்டார். மீதி பன்னிரண்டு செக்போஸ்டிலும் இரண்டாவது மூடையைப் பிரித்து, ஒவ்வொன்றிலும் ஒரு தேங்காய் கொடுத்தார். மீதி 13 தேங்காயை திருச்சி கொண்டு போய் சேர்த்து, தேங்காய் வியாபாரியை காப்பாத்திட்டார்.

இந்த தடவை நம்ம வழக்கமான வாசகர்கள் யாரும் பதில் சொல்லவில்லை. அவர்களுக்கு என்ன வேலையோ தெரியவில்லை. புதுசா சரவணன் ,Srini இரண்டு பேரும், விடை சொல்லி இருக்கிறார்கள். இதில் Srini சொன்னது மிகச் சரியானது. சரவணன் , பிரச்சனையை சரியாக அணுகியிருந்தாலும், சின்ன சறுக்கல் சறுக்கி விட்டார். விடை சொன்ன இரண்டு பேருக்கும், வலைத்துணுக்குவாசிகள் சார்பாக எனது பாராட்டுக்கள்.

Sunday, November 14, 2004

சென்னை To திருச்சி

பிளாக்களில் இப்பொழுது நிறைய பேர் கேள்வி கேட்கிறார்கள். இது ஆரோக்கியமான விஷயம்தான். கேள்வி கேட்கும் பதிவிற்குதான் பின்னூட்டங்களும் அதிகமாக வருகின்றன. நம்ம வலைத் துணுக்கிலேயேகூட புதிர் கேள்வி துணுக்குகளுக்குதான்(பல தடவை அதற்கு மட்டும்தான்) அதிகமான பின்னூட்டங்கள் வருகின்றன. அதனால்தான் நானும் வாரம் ஒரு புதிராவது போட்டுக் கொண்டிருக்கிறேன்.

சென்னைக்கும் திருச்சிக்கும் இடையே 25 செக்போஸ்ட்கள்(சும்மா வச்சுக்கங்க) இருக்கின்றன. ஒரு தேங்காய் மூடை லாரி இந்த வழியாப் போனா, மூடை ஒன்றுக்கு(மூடையில் எத்தனை தேங்காய் இருந்தாலும் கவலை இல்லை) ஒரு தேங்காய் வீதம் ஒவ்வொரு செக்போஸ்டிலும் கொடுக்க வேண்டும். இப்ப, ஒரு லாரி இரண்டு மூடை தேங்காய் ஏற்றிக் கொண்டு சென்னையிலிருந்து, திருச்சிக்கு போகிறது. ஒவ்வொரு மூடையிலும் 25 தேங்காய்கள் இருக்கின்றன. திருச்சிக்குப் போய் சேரும்போது கொஞ்சமாவது தேங்காய்கள் மிச்சமிருக்குமா? மிச்சமிருந்தால் அது எப்படின்னு சொல்லுங்க.

இந்த வார பொன்மொழி

ஒரே சமயத்தில் இரண்டு வேலை செய்ய நம்மில் பலருக்குத் தெரியும். ஒரு சமயத்தில் ஒரே ஒரு வேலை செய்வதுதான் கடினமானது.
- மெக்லாலின்.

ஒரு சமயத்தில் ஒரு வேலையும் செய்யாமல் இருப்பதுதான் மிகவும் கடினமானது.
- யோசிப்பவர்.

பைப் புகை

கணவன் எப்பொழுதும் 'பைப்'பில் புகை பிடித்துக் கொண்டிருக்கிறார் என்று கூறி விவாகரத்துக் கோரினாள் ஒரு மனைவி. "புகை உங்களுக்கு தொல்லையாக இருக்கிறதா?" என்று கேட்டார் நீதிபதி.

"அதையாவது பொறுத்துக் கொள்வேன். ஆனால் என்னை முத்தமிடும்போதுகூட பைப்பை வாயிலிருந்து அவர் எடுப்பதில்லை.", என்றாள் மனைவி.

இந்த வாரக் கவிதை

இருந்து என்ன
ஆகப் போகிறது
செத்துத் தொலைக்கலாம்
செத்து என்ன
ஆகப் போகிறது
இருந்து தொலைக்கலாம்.


- கல்யாண்ஜி (கல்யாண்ஜி கவிதைகள்)

கதைப் போட்டி அறிவிப்பு

"உண்மைக் கதை எழுதி அனுப்புங்கள். சிறந்த உண்மைக் கதைக்கு முதல் பரிசு - பத்து வருடம்."

ஒரு சர்வாதிகார நாட்டுப் பத்திரிக்கையில் வெளி வந்த அறிவிப்பு இது.

Friday, November 12, 2004

ராவணனையும் யாருக்குமே தெரியவில்லை

ராவணன் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும் என்பதையே நான் மறந்து விட்டேன்(தீபாவளி பரபரப்பில்). நேற்று bsubra தான் ஞாபகப்படுத்தினார்.

ராவணனுடைய இயற்பெயர் தசக்ரீவன். கைலாசத்தைப் பெயர்க்க முயன்றபோது சிவபெருமான் காலால் அழுத்த, மலையின் கீழ் மாட்டிக்கொண்டு வலி தாங்காமல் தசக்ரீவன் அலறினான். அன்று முதல் அவன் பெயர் ராவணன் ஆயிற்று. ராவணன் என்றால் 'அலறல்' என்று பொருள்- ஆதாரம் : ரா.கி.ரங்கராஜனின் "அறிவுக்கு ஆயிரம் வாசல்"

Wednesday, November 10, 2004

யாருக்கும் வேலை இல்லை

நல்ல வேலை! Micro Soft வேலைக்கு யாரையும் சிபாரிசு செய்யத் தேவையில்லாமல் போய்விட்டது. மைக்ரோசாப்ட் புதிருக்கு விடையை ganesh கொஞ்சம் நெருங்கியிருந்தார்.

விடை இதோ: முதலில் நவனும்(2), டைனோவும்(1) அக்கரைக்கு சென்றுவிட வேண்டும்(2). பின்பு நவன்(2) மட்டும் டார்ச்சுடன் அங்கிருந்த திரும்ப வேண்டும்(2+2=4). பின் இங்கிருந்து கோபியும்(10), KVRஉம்(5) அக்கரை செல்ல வேண்டும்(4+10=14). பின்னர் அந்த முனையில் இருக்கும் டைனோ(1) டார்ச்சுடன் திரும்பி(14+1=15) வந்து நவனை(2) அழைத்து செல்லவேண்டும்(15+2=17). சரியா பதினேழு நிமிடம் ஆச்சா.

சரி யாருக்கும் வேலைதான் தர முடியவில்லை. தீபாவளி நல்வாழ்த்துக்களாவது சொல்லிவிடுகிறேன். தீபாவளிக்கு இன்னும் சரியாக 17 நிமிடங்கள்(என்ன ஒரு பொருத்தம்) இருப்பதால், Advanced தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

Sunday, November 07, 2004

மைக்ரோசாப்டில் வேலை

'ஆடு, புலி, புல்லுக்கட்டு' புதிர் நமக்கெல்லாம் தெரியும். இதுவும் கிட்டத்தட்ட அதே வகைதான்.

ஒரு வாத்தியக் குழுவில் நாலு பேர். அவுங்களுக்கு ஆளுக்கு ஒரு பேர் வைச்சுக்கிடுவோமே, கோபி, KVR, நவன், டைனோன்னு(ஏன் எப்பம்பார்த்தாலும் இவங்களையே வம்புக்கு இழுக்குறே?!). இப்ப அவங்க நாலு பேரும் ஆத்துக்கு அக்கரையில் உள்ள ஊருக்கு வாசிக்கப் போக வேண்டியிருக்கு. ஆத்தைக் கடக்க ஒரு மரப்பாலம் இருக்கு(தமிழ் சினிமால வர்ர மாதிரி!).

ஒரு நேரத்தில் இரண்டு பேரை மட்டுமே அந்தப் பாலம் தாங்கும்.(பைக்ல போலாமா?)

அந்த பாலத்தை தாண்ட கோபிக்கு 10 நிமிடம் ஆகும். அதுவே KVRக்கு 5 நிமிடமும், நவனுக்கு 2 நிமிடமும், டைனோவுக்கு 1 நிமிடமும் ஆகும். ஆனா இப்ப ரெண்டு பேர் சேர்ந்து போனால், இருவரில் யாருக்கு பாலத்தைக் கடக்க அதிக நேரம் ஆகுமோ, அவருடைய வேகத்துக்குதான் இருவரும் போவார்கள். உதாரணத்துக்கு, நவனும், KVRம் சேர்ந்து பாலத்தைக் கடக்க 5 நிமிடமாகும்(அட, புரிஞ்சிருச்சு! உட்ருப்பா!!).

அவங்க கிட்டே ஒரே ஒரு டார்ச் லைட் இருக்கு. பாலத்தைக் கடக்கும் போது, கண்டிப்பாக கடப்பவர்களின் கையில் அந்த டார்ச் லைட் இருக்க வேண்டும்.

இன்னோரு முக்கியமான விஷயத்தை சொல்ல மறந்துட்டேன். உங்களுக்கு இந்தப் புதிரை விளக்கிகிட்டு(பாத்திரமா விளக்கினே?) இருந்ததுல நேரம் ஆயிருச்சு. அவங்க நாலு பேரும் இன்னும் 17 நிமிடத்துல அக்கரைக்குப் போகனும். எப்படி போவாங்கன்னு யோசிச்சு 5 நிமிடத்துக்குள் விடை கண்டுபிடித்து, 'யோசனைகள்'(Commentஐ சொல்றியாக்கும்) சொல்பவர்களை Micro Softல் வேலைக்கு யோசிப்பவர் சிபாரிசு செய்வார்(நீ செய்வப்பா. Micro Soft ஒத்துப்பாங்களா?).

திருடர்கள் ஜாக்கிரதை

"இந்த இடத்தில்தான் அடிக்கடி திருட்டுப் நடக்கிறதே. 'திருடர்கள் ஜாக்கிரதை'ன்னு போர்டு வைக்கிறதுக்கென்ன?"

"எத்தனை தடவைதான் வைக்கிறது?"

கர்ணனைத் தெரியும்; ராவணனை?

முன்பு கர்ணனைப் பற்றிப் பார்த்தோம். இப்போ ராவணன். ராவணனின் இயற்பெயர் என்ன?

Monday, November 01, 2004

வித்தியாசம் என்ன?

'இந்தப் படத்த எதுக்கு இங்கே போட்டிருக்கான்'னு யோசிக்கிறீங்களா? நம்ம வலைத்துணுக்கில் வெளிவந்தாலே இதுல எதோ புதுசா இருக்குன்னுதானே அர்த்தம். எங்கே இந்தப் படத்துல உள்ள வித்தியாசமான அம்சம் என்னன்னு யோசிங்க பார்ப்போம். அது என்னன்னு கண்டுபிடிக்க முடியாதவங்க கவலைப்படாம, Scroll Barஐ கொஞ்சம் கீழே நகர்த்துங்க.
.
.
.
.
'Ctrl'ஐயும் 'A'ஐயும் சேர்ந்தாப்புல அமுக்குங்க. சூப்பரா இருக்கா?