Thursday, December 11, 2008

குறுக்கெழுத்துப் புதிர் போT - 2

போன தடவை குறுக்கெழுத்துப் புதிர் போட்டதோட நிறுத்திக்கலாம்னுதான் நினைச்சேன். ஆனால் போன மாதத் தென்றலில் வாஞ்சிநாதன், நம்ம குறுக்கெழுத்தப் பத்தி ஒரு வரி சொல்லி, லிங்க் வேற குடுத்துட்டார். சரி, நம்மளை ஒருத்தர் இம்புட்டு தூரம் நம்புறாரேன்னு நினைச்சப்ப நெஞ்சம் கனத்தது; கண்கள் பனித்தது; உள்ளம் பூத்தது....!!! அதனால மறுபடி கஷ்டப்பட்டு கு.எ.புதிர் தயார் செய்து விட்டேன்.(ராஜினாமா வாபஸ்!)

இந்த தடவை நம்ம கொத்ஸ், கொஞ்சம் சீக்கிரமாவே அவரோட புதிரை போட்டுட்டார். அதனால் நாமும் இப்ப அதையே பண்ணினால் மக்களுக்கு வெறுத்துப் போயிடும்னு தோனுது. இருந்தாலும் உருவாக்கின புதிரை உடனே போடலைன்னா மண்டை வெடிச்சுடும்னு எங்க குருநாதர் சாபம் ஒன்னு இருக்கு. அதனால இன்றைக்கே போட்டுவிடலாம்னு முடிவு பண்ணிட்டேன். மக்களே, பொருத்தருள்க. இந்த குறுக்கெழுத்தைப் போட்டருள்க.

போன தடவை மாதிரியே மதிப்பெண் பக்கமும் உண்டு. உங்கள் மதிப்பெண்களை விடை சொன்ன அரை மணி நேரத்திற்குள்(அதாவது நான் உங்கள் விடையை பார்த்த பின் அரை மணி நேரத்திற்குள்;-)) இந்தப் பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இனியும் ரொம்ப அறுக்காமல், கு.எ.ஐ பார்க்கலாம்

125
3
4678
9
13
1410
11
151612


இடமிருந்து வலம் :-

1) கத்திக் குத்தை உற்றுப் பார்த்தால் நாக்கு குழறும் (3).
4) நினைவை அழித்து வீரத்தின் இறுதியில் பார்த்தால் அதுவே கிடைக்கும் (3).
6) எலும்புச் சாம்பலை அள்ளி ஓரத்தின் ஓரத்தை நறுக்கி கூர்மையான அயுதம் செய் (5).
10) திராவிடர் முன்னேற்றக் கழகம் திரும்பிய ஊர் (3).
14) பெண் குழந்தை (5).மேலிருந்து கீழ் :-

1) திருட்டு முழி புத்திரி செல்வம் தேடித் தருவாள் (5).
2) குடுமிக்கு முடிவெட்டிப் பொட்டு வைத்து இன்பத்தில் முடிந்தால் வீடு வந்து சேரும் (5).
5) பிரயாணத்தின் நடுவே காணாமல் போய்விட்டால் கிலி பிடிக்கும் (3).
6) குசினிக்கு அடுத்த பாதியில் நீக்கு (5).
8) வைரத்தின் முனை மழுங்கினால் திருப்பிச் சுடலாம் (2).
9) பொட்டிழந்த கையைத் திருப்பி புகைப் பிடித்தால் ரத்தினம் கிடைக்கும் (5).
13) எனது பூஜ்யம் மிகுந்த கணிதத்தின் அடிப்படை (2).
14) எருமைத் தலையில் ஒரு உண்மை சேர்த்தால் உயர்வு (3).


வலமிருந்து இடம் :-

3) இடைஞ்சல் செய்ய உயிர்மாறிய தலையில் தொடு (2).
5) ஒட்டுவதைத் தேய்த்து இலையை வெட்டி வியாதி வந்தால் தேகம் மெலியும் (3,2).
9) அசுரத்தச்சன் ஈறு கெட்டு தலையில்லாமல் அருகில் வந்தால் நினைவிழக்க நேரிடும் (5).
11) தருதலை ஒரு மரமண்டை தெரியுமா? (2).
12) ஓசை கொஞ்சம் குறைந்தால் கௌரவக் கணக்கு இறுதியுமாகுமே (3).
16) முன்னோர் பொருளுடன் உரியது. இப்பொழுது பெண்களுக்கும் உண்டு. (5).


கீழிருந்து மேல் :-

7) சுழியில்லா நெருப்பு வலையில் சிறு துளி சுரக்கும் (3).
12) தெருக்கள் கூடுமிடத்தில் வீரன் வந்தால் தலை தப்பாதாயினும் ஒளி கிடைக்கும் (5).
15) யானையின் கை உடைந்தால் பறந்து விடும் (3).பின் குறிப்பு :-

இது போன்ற புதிர்களுக்கு வாஞ்சி அவர்கள் தந்திருக்கும் ஒரு எளிய அறிமுகத்தை
இங்கே படிக்கலாம்.

Monday, December 01, 2008

காஸினோ - விடை

இந்தப் புதிர் கொஞ்சம் கஷ்டமானதுதான். வெண்பூ ஒருவர் மட்டும் சரியான விடை கண்டுபிடித்திருக்கிறார்.

இந்தப் புதிரில், ஒவ்வொரு சீட்டுக்கும், கலைத்தலுக்குப் பின் இடம் மாறுவதற்கு மொத்தம் பன்னிரெண்டு இடங்கள் உள்ளன. அதாவது A இடம் மாறுவதற்கு இரண்டாம் இடத்திலிருந்து, 13வது இடம் வரை வாய்ப்பிருக்கிறது. அதே போல் "2" இடம் மாறுவதற்கு ஒன்றாவது இடமும், 3லிருந்து 13வரையும் வாய்ப்புள்ளது. எந்தச் சீட்டும் கலைத்தலுக்குப் பின், முன்பிருந்த இடத்திலேயே இருக்க முடியாது. அப்படி இருந்தால், அந்தச் சீட்டு எல்லா கலைத்தலின் போதும் அதே இடத்திலேயே இருக்கும்.

இப்பொழுது A இடம் மாறுவதற்கு மொத்தம் 12 வாய்ப்புகள் என்பதால், அந்த 12 வாய்ப்புகளையும் சோதித்துப் பார்த்து விட்டால், விடையை கண்டுபிடித்து விடலாம்.

முதலில் A முதல் கலைத்தலுக்குப் பின் இரண்டாவது இடத்துக்கு செல்கிறது என்று வைத்துக் கொள்வோம்.

அப்படியென்றால் இரண்டாவது கலைத்தலுக்குப் பின் இரண்டாம் இடத்தில் இருக்கும் 9, முதல் கலைத்தலுக்குப் பின் முதல் இடத்தில் இருந்திருக்க வேண்டும்.

இப்பொழுது 9வது இடத்திலிருப்பது கலைத்தலுக்குப்பின் முதல் இடத்துக்கு வரும் என்பது நமக்குத் தெரிவதால், இரண்டாவது கலைத்தலுக்குப்பின் முதல் இடத்தில் இருக்கும் 10, முதல் கலைத்தலுக்குப் பின் 9வது இடத்தில் இருந்திருக்க வேண்டும்.

இப்பொழுது 10வது இடத்திலிருப்பது 9வது இடத்துக்கு வருகிறது. அப்படியென்றால், இறுதியில் 9வது இடத்திலிருக்கும் 5, முதல் கலைத்தலுக்குப் பின் 10வது இடத்தில் இருந்திருக்க வேண்டும்.

இப்படியே நிரப்பிக் கொண்டு சென்றால் நமக்கு இறுதியில் கிடைக்கும் வரிசை 10, 9, Q, 8, K, 3, 4, A, 5, J, 6, 2, 7

சரி, Ace இரண்டாவது இடத்துக்குச் சென்றால் என்ற சாத்தியக்கூறு சரியாக வருகிறது. Ace, 3வது இடத்துக்குச் சென்றால்...? Ace 4வது இடத்துக்குச் சென்றால்...? கிழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையைப் பார்த்தால், Ace இரண்டாவது இடத்தைத் தவிர மற்றெந்த இடத்துக்குச் சென்றாலும், சரியான வரிசை அமைக்க முடியாது. முரண்பாடு வரும்.

Click on the image to view bigger

ஆகையால், A இரண்டாவது இடத்துக்குச் செல்வது ஒன்று மட்டும்தான் சாத்தியமான வழிமுறை ஆகிறது. ஆகையால் 10, 9, Q, 8, K, 3, 4, A, 5, J, 6, 2, 7 என்ற வரிசையே சரியானது. அதுவே முதல் கலைத்தலுக்குப்பின் கிடைக்கும் வரிசை என்று முடிவாகிறது.

Monday, November 24, 2008

காஸினோ

காஸினோக்களுக்கு எத்தனை பேர் போயிருக்கிறீர்கள்(அதாங்க, ஜூதாட்ற கிளப்பு). வெளிநாடுகளில் வசிப்பவர்களில் சிலர் போயிருக்கலாம். போகாதவகர்கள், அட்லீஸ்ட் ஜேம்ஸ் பாண்ட் படத்திலாவது அந்த க்ளப்களை பார்த்திருப்பீர்கள். அப்படிப்பட்ட சில க்ளப்களில் சீட்டாட்டங்களுக்காக சீட்டுக்களை கலைப்பதற்கு தனி மெஷின் இருக்கும்.

அப்படித்தான் ஒரு க்ளப்பில் ஒரு மெஷின் இருந்தது. அந்த மெஷின் ஒவ்வொரு முறையும் சீட்டுகளை ஒரே விதமாகத்தான் கலைக்கும். அதாவது உதாரணத்துக்கு, கலைப்பதற்கு முன் முதலாவதாக இருந்த சீட்டு, கலைத்தபின் ஐந்தாவதாக இருக்கும் என்று வைத்துக் கொண்டால், ஒவ்வொரு கலைப்பிலும் முதலாவதாக இருந்த சீட்டே ஐந்தாவது இடத்துக்கு வரும்.

இப்பொழுது ஒரு சீட்டுக் கட்டில் ஸ்பேட்(Spade) வகை சீட்டுக்களை மட்டும் எடுத்துக் கொள்வோம். அவை வரிசையாக A,2,3,4...10,J,Q,K என்று அடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 13 சீட்டுக்கள். இவற்றை அப்படியே அந்த மெஷினில் வைத்து கலைக்கிறோம். பின் மீண்டும், கலைந்த சீட்டுக்களை அப்படியே வைத்து, இன்னொரு முறை கலைக்கிறோம். இப்பொழுது சீட்டுக்களை வெளியே எடுத்துப் பார்த்தால், அவை 10,9,Q,8,K,3,4,A,5,J,6,2,7 என்ற முறையில் அடுக்கப்பட்டிருந்தது.

அப்படியென்றால் முதல் கலைத்தலுக்குப் பின், சீட்டுக்களின் வரிசை எப்படி இருந்திருக்கும்? கண்டுபிடிக்க முடியுமா?

Friday, November 07, 2008

ரூபாய்க்கு மூன்று கிலோ அரிசி - சில விடைகள்

இந்தப் புதிர் எளிதுதான் என்பதால், பலவிதமான விளக்கங்கள் வந்து விட்டன. வெண்பூ புதிர் போட்ட சில நிமிடங்களிலேயே பைசா சகிதமாக கணக்கைத் தீர்த்துவிட்டார். நையாண்டி நைனா குத்து மதிப்பாக ஆரம்பித்து, அப்புறம் வித விதமாய் பிரித்து மேய்ந்தார்.

பலரும் 48 ரூபாய் சரிதான் என்று நிறுவுவதிலேயே கவனம் செலுத்தினர். ஐம்பது ருபாய் ஏன் வரவில்லை அல்லது ஐம்பது ரூபாய் வந்திருக்க என்ன செய்திருக்க வேண்டும் என்று சொன்னவர்கள் சிலரே. அதுவும் எனது தவறுதான். கேள்வியில் அதை நான் தெளிவாக கேட்கவில்லை. அதனால் ஒரு மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன்(வுடு, வுடு. இதெல்லாம் நமக்கு சகஜம்தானே).

விடையளித்து இருந்தவர்களில் சிலர் மிகத் தெளிவாக விளக்கியிருந்தனர். அதனால் அவர்களின் விளக்கங்களையே கொடுக்க விரும்புகிறேன்(சொந்தமா டைப் பண்ண எவ்வளவு சோம்பேறித்தனம்!).

முதலில் 48 ரூபாய் சரிதான் என்பதற்கு வந்த சில விளக்கங்கள் :

// ஜே கே J K said...
மொத்தம் - 120 கிலோ.

5 கிலோ 2 ரூ

2+3 அல்லது 3+2

அதாவது ஸ்டாலின் அரிசி 2 கி + அழகிரி அரிசி 3 கி அல்லது ஸ்டாலின் அரிசி 3 கி + அழகிரி அரிசி 2 கி.

இப்படி விற்க்கும் போது எதாவது ஒரு அரிசி 20 பேர்க்கு விற்றதும் முடிந்துவிடும். அப்போது காசு 40 ரூ இருக்கும். மீதமுள்ள 20 கி அரிசியை விற்றால் 8 ரூ கிடைக்கும். மொத்தம் 48 ரூபாய் தான்.
//

// புருனோ Bruno said...
//ஸ்டாலினுக்கு 60கிலோ அரிசிக்கு, ரூபாய்க்கு 2 கிலோ வீதம், முப்பது ரூபாய். அது கொடுத்தாகிவிட்டது. அந்த அரிசியை விற்றதற்கு 30 ரூபாய் கையில்.//

இல்லை. அந்த அரிசி வாங்கப்பட்டது ரூபாய் 30

விற்கப்பட்டது ரூபாய் 24க்கு (5 கிலோ
2 ரூபாய் என்றால் 60 கிலோ 24 ரூபாய்)

//தனக்கு 60 கிலோ அரிசிக்கு, ரூபாய்க்கு 3 கிலோ வீதம், 20 ரூபாய் கையில். ஆக மொத்தம் 50 ரூபாய் இருக்க வேண்டும்.//

இந்த அரிசியும் விற்கப்பட்டது
விற்கப்பட்டது ரூபாய் 24க்கு (5 கிலோ
2 ரூபாய் என்றால் 60 கிலோ 24 ரூபாய்)

எனவே 24 + 24 = 48

//

// SP.VR. SUBBIAH said...
ஸ்டாலின் (தனி விற்பனை): 60 கிலோ வகுத்தல் 2 கிலோ 30 units x ரூ1.00 = 30:00
ஸ்டாலின்: (கூட்டணி விற்பனை)60 கிலோ வகுத்தல் 5 கிலோ 12 units x ரூ2.00 = 24:00
----------------------------------------------------------------------------------------
நஷ்டம் 6:00
----------------------------------------------------------------------------------------
அழகிரி: (தனி விற்பனை)60 கிலோ வகுத்தல் 3 கிலோ 20 units x ரூ1.00 = 20:00
அழகிரி: (கூட்டணி விற்பனை) 60 கிலோ வகுத்தல் 5 கிலோ 12 units x ரூ2.00 = 24:00
----------------------------------------------------------------------------------------
லாபம் 4:00
-------------------------------------------------------------------------------------------
ஆக மொத்தம் 6:00 கழித்தல் 4:00 இரண்டு ரூபாய் காணமல் போய்விட்டது

//
நஷ்டம் எப்படி வந்தது/ஐம்பது ரூபாய் பெற என்ன செய்திருக்கலாம் என்று விளக்கியவர்கள் :


//வெண்பூ said...
ஸ்டாலின் அரிசி 60 கிலோ
அழகிரி அரிசி 60 கிலோ

மொத்தம் 120 கிலோ

ஒரு கிலோவின் விற்பனை விலை (ரூ0.40 => இரண்டு ரூபாய்க்கு 5 கிலோ)

மொத்த விலை 120 * 0.40 => ரூ 48

சரியாத்தான் இருக்கு.

:)))

ஒரு வேளை ஒரு கிலோ அரிசி ரூ 2 மற்றும் ரூ 3 என்றால் மொத்தமாக விற்கும்போது 2 கிலோ 5 ரூபாய் என்று விற்கலாம். ஆனால் 2 கிலோ ஒரு ரூபாய், 3 கிலோ ஒரு ரூபாய் என்றால் அதே அளவில் பணம் கிடைக்க ஒரு கிலோ (0.50 + 0.33333) / 2 = 0.4166... (அதாவது 41.6666.. பைசாவிற்கு) க்கு விற்றிருக்க வேண்டும் ஆனால் அவர் 1.6667.. பைசா குறைவாக 40 பைசாவிற்கு விற்றதால் ஒரு கிலோவிற்கு 1.6667 பைசா. மூன்று கிலோவிற்கு நஷ்டம் 5 பைசா, அதனால் 120 கிலோவிற்கு நஷ்டம் 2 ரூபாய்)

சரியா?
//

// நையாண்டி நைனா said...
1 ரூபாய்க்கு 2 கிலோ அரிசி எனும் போது, ஒரு கிலோ அரிசி அரை ரூபாயும் அரை கிலோ அரிசி கால் ரூபாயும் ஆகிறது.
1 ரூபாய்க்கு 3 கிலோ அரிசி எனும் போது ஒரு கிலோ அரிசி 0.333333333333333333333 ரூபாயும் அரை கிலோ அரிசி 0.1666666666666667 என்றும் ஆகிறது.இப்போது அவரின் 5 கிலோவில் 2.5 கிலோ, 2 ரூபாய் அரிசியும் 2.5 கிலோ 3 ரூபாய் அரிசியும் இருக்கும்போது
அதனுடைய விலை (5/2*1/2) + (5/2*1/3) அதாவது. (25/12) ரூபாய் ஆகிறது
ஆனால் அவர் வைத்துள்ள விலையோ 2 ரூபாய்.
இங்கே
(25/12) > 2
ஆக அவருக்கு
(25/12 -2 ) ரூபாய் நட்டம் ஆகிறது. ஒரு 5 கிலோ விற்பனையில்.

அவரிடம் 120 கிலோ உள்ளது. அதாவது 24, 5 கிலோ உள்ளது. அதாவது 24 முறை நட்டம் அடைகிறார்
ஆக மொத்த நட்டம்
=(25/12-2)*24
=((25-24)/12)*24
=2
அதுவே அந்த 2 ரூபாய் ஆகும்

இந்த விளக்கம் போதுமா....?????

( இதை முடித்து திரும்பினால்... என் பின்னால், என் மேலாளர், நற...நற.. .)
//


// Amar said...
விற்றிருக்க வேண்டிய விடை: 2.083

கிலோ அரிசி Rs 0.50க்கும் உள்ளது Rs 0.33333க்கும் உள்ளது.

ஆதலால் ஒரு கிலோவின் நிகர விலை
0.50000 +
0.33333
--------
0.83333 /
2
--------
0.41665 = ஒரு கிலோ அரிசியின் நிகர விலை

0.416665
5
--------
2.083325
--------

என்ன சரியா யோசிப்பவரே?
//


// தகடூர் கோபி(Gopi) said...
யோசிப்பவர்,

ஸ்டாலின் அரிசியை ரெண்டு ரெண்டு கிலோவா பிரிச்சி கட்டினா 30 பை வரும்.

அழகிரி அரிசியை மூனு மூனு கிலோவா பிரிச்சி கட்டினா 20 பை தான் வரும்.

ரெண்டையும் கலந்து ஐந்து கிலோ கட்டு கட்டினால் 24 பை வரும்.

அதாவது அழகிரி குடுதத அளவை விட 4 பை அதிகமா அவர் விலைக்கு விற்கப்படுது. அதை சரி கட்ட ஸ்டாலினோட கணக்குல 6 பை குறையுது. அதாவது அவரோட 6 பையை அழகிரியின் 4 பை விலைக்கு வித்திருக்காரு. அதாவது 6 ரூபாய்க்கு பதிலா 4 ரூபாய். அதான் அந்த 2 ரூபாய் நஷ்டம்..

என்ன ரொம்ப குழப்பிட்டேனா?
//நான் எதிர்பார்த்த விடை தகடூர் கோபியிடமிருந்து வந்தது :


// தகடூர் கோபி(Gopi) said...
//ஐம்பது ரூபாய் கிடைத்திருக்க வேண்டுமென்றால், எப்படி விற்றிருக்க வேண்டும்//

ஐந்து ஐந்து கிலோவா 20 பையை கட்டி வித்துடனும். 40 ரூபாய் கிடைக்குமா?

மீதி இருக்குற 20 கிலோவை

1)ரெண்டு ரெண்டு கிலோவா கட்டி ஸ்டாலின் விலைக்கு வித்தா 10 ரூபாய்.
2) ஐந்து ஐந்து கிலோவா கட்டி மொத்தம் 4 பை.. ஒரு பை 2ரூபாய்ன்னு விக்கறதுக்கு பதிலா 2.5 ரூபாய் (கடைசி இல்லையா.. டிமாண்டு அதிகமாகி விலை ஏறிப்போயிடுச்சி) போட்டு விக்கலாம். அப்பவும் 10 ரூபாய் கிடைக்கும்


இல்லையா.. மொதல்ல இருந்தே ஐந்து கிலோ ரூ 2.0833333333 க்கு விக்கலாம்.

ஆக மொத்தம் கடைசியில 50 ரூபாய் கிடைச்சதா.
//


பங்கேற்ற அனைவருக்கும் எனது நன்றிகள். சிலரின் பெயர்கள்/பின்னூட்டங்கள் குறிப்பிட விட்டுப் போயிருக்கலாம். அதுக்காக கோபப்படாதீங்க மக்காள்ஸ்!!:-)

Wednesday, November 05, 2008

ரூபாய்க்கு மூன்று கிலோ அரிசி

முன்குறிப்பு : இது அரசியல் பதிவல்ல!!!!!!!!!

ஸ்டாலினும், அழகிரியும் அரிசி வியாபாரிகள். ஸ்டாலின் தன்னிடமுள்ள அரிசியை ரூபாய்க்கு 2 கிலோ என்ற விலையில் விற்கிறார். அழகிரி தன்னிடமுள்ள அரிசியை ரூபாய்க்கு 3 கிலோ என்ற விலையில் விற்கிறார்.

ஒரு நாள் இருவரிடமும் தலா 60 கிலோ அரிசி இருக்கிறது. ஆனால் அன்றைக்கு ஸ்டாலினால் வியாபாரத்துக்கு போக முடியவில்லை. அதனால், தன்னிடமுள்ளதை அழகிரியிடம் ஒப்படைத்து, அதையும் தனக்காக சந்தையில் விற்று வரும்படி கூறுகிறார்.

ஸ்டாலின் விற்கும் விலை அழகிரிக்குத் தெரியுமாதலால், ஸ்டாலினுக்கு 30 ரூபாயை கொடுத்துவிட்டு அரிசியை வாங்கிக் கொள்கிறார். சந்தையில் விற்கும்பொழுது அழகிரி வழக்கம் போல விற்காமல், இரு அரிசிகளையும் கலந்து, இரண்டு ரூபாய்க்கு ஐந்து கிலோ அரிசி வீதம் விற்றுத் தீர்த்தார். கணக்குப் பார்த்தார்.

ஸ்டாலினுக்கு 60கிலோ அரிசிக்கு, ரூபாய்க்கு 2 கிலோ வீதம், முப்பது ரூபாய். அது கொடுத்தாகிவிட்டது. அந்த அரிசியை விற்றதற்கு 30 ரூபாய் கையில்.
தனக்கு 60 கிலோ அரிசிக்கு, ரூபாய்க்கு 3 கிலோ வீதம், 20 ரூபாய் கையில். ஆக மொத்தம் 50 ரூபாய் இருக்க வேண்டும்.

ஆனால் அவர் கையில் 48 ரூபாய்தான் இருந்தது. இரண்டு ரூபாயை எங்கே, எப்படி கோட்டை விட்டார் அழகிரி?

பின்குறிப்பு : இது ஒரு அக்மார்க் புதிர் கணக்கு. நீங்கள் நுண்ணரசியலையெல்லாம் தேடினால், நான் பொறுப்பல்ல!!!

Thursday, October 30, 2008

கோலி

இரண்டு மாதமாக குறுக்கெழுத்துப் புதிரை வைத்தே காலத்தை ஓட்டியாகிவிட்டது. அதனால் வழக்கம் போல இன்று கணிதப் புதிர்.

ஒரு கடைக்காரர் மொத்த வியாபாரி ஒருவரிடம் கோலிக் குண்டுகளுக்கு ஆர்டர் செய்தார். மொத்த வியாபாரி கோலிகளை 7 சிறு பைகளிலும், 18 பெரிய பைகளிலுமாக அடுக்கி, பேக் செய்து பில்லோடு(BILL) அனுப்பிவிடுகிறார். ஆனால் கடைக்கு வந்து சேருமுன் போக்குவரத்தில், பைகளுக்குள் இருந்த கோலிகள் நொறுங்கிவிடுகின்றன.

ஒவ்வொரு அளவிலான பைகளிலும் ஒரே எண்ணிக்கையளிவிலான கோலிகளே இருந்தன என்பது கடைக்காரருக்குத் தெரியும். அதாவது எல்லா சிறு பைகளிலும் ஒரு எண்ணிக்கையிலும், ஒவ்வொரு பெரிய பைகளிலும் ஒரு எண்ணிக்கையிலும் கோலிகள் இருந்தன. ஆனால் சிறு பைகளில் எவ்வளவு எண்ணிக்கை, பெரிய பைகளில் எவ்வளவு எண்ணிக்கை என்பது கடைக்காரருக்குத் தெரியாது. பில்லில் மொத்த கோலிகளின் எண்ணிக்கை 233 என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதை வைத்துக் கொண்டு சிறு பைகள் ஒவ்வொன்றிலும் எவ்வளவு கோலிகள், பெரிய பைகள் ஒவ்வொன்றிலும் எவ்வளவு கோலிகள் என்பதை கடைக்காரர் கண்டுபிடித்து விட்டார். அதையே உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?

Wednesday, October 15, 2008

தொடராத தொடர் விளையாட்டுக்கள்

வலையுலகத்தில் ஆரம்பத்தில் இருந்தே தொடரும் அன்புத் தொல்லைகள் இந்த தொடர் விளையாட்டுக்கள். இதில் பொதுவான அம்சம், விளையாடும் அனைவரும், இறுதியில் குறைந்தபட்சம், மேலும் ஒருவரையாவது விளையாட்டுக்குள் இழுக்க வேண்டும். இங்கேதான் கீழ்கண்ட விதி விளையாடுகிறது. புதிர் பற்றிய ஒரு புத்தகத்திற்காக எனது அண்ணன் எழுதிய கீழ்கண்ட கட்டுரையை படித்துப் பாருங்கள்.

வதந்தீ

பரபரப்பான செய்தி அல்லது வதந்தி. காட்டுத்தீப் போல் படுவேகமாக பரவக் கூடியது. எனவே இதனை செய்தீ அல்லது வதந்தீ என்று கூட கூறலாம்.

சதாம் தூக்கிலிடப்பட்டார்!

உலகக் கோப்பையை இந்தியா வென்றது!

இந்தோனிஷியாவில் மீண்டும் சுனாமி!

போன்ற உலகளாவிய பரபரப்பு செய்திகள், மக்களிடையே பரவும் வேகம், சில சமயம் வியப்பாகவும், ஆச்சர்யமாகவும் இருக்கும். சம்பவங்கள் நடந்த சில மணி நேரத்தில், பல சமயம் சில நிமிடங்களிலேயே உலகிலுள்ள செய்தி பிரியர்கள் பலருக்கு விஷயம் தெரிந்து விடுகிறது. இது எப்படி நடக்கிறது? இத்தகைய வேகம் எப்படி சாத்தியமாகிறது? கணக்கு போட்டு இதை ஆராய்வோம்.

உலகின் மிகமிக முக்கியமான விஷயம் ஒன்று, தற்செயலாக, ஒரே ஒரு நபருக்கு, அட, உங்களுக்கே தெரிய வருகிறது. உங்கள் கையில் செல்ஃபோன் உள்ளது. உங்களிடம் மட்டுமல்ல. உலகில் உள்ள அனைத்து மனிதர்களிடமும் செல்ஃபோன் உள்ளது என்று வைத்துக் கொள்வோம். உங்களுக்கு தெரிந்த விஷயத்தை, நீங்கள் உங்கள் நண்பர்கள் இரண்டு பேருக்கு, இரண்டே இரண்டு பேருக்கு மட்டும் SMS(குறுஞ்செய்தி) அனுப்புகிறீர்கள். உங்களின் நண்பர்கள், அதே SMSஐ, அவர்களின் வேறு இரண்டு நண்பர்களுக்கு Forward செய்கின்றனர். செல்ஃபோன் கம்பெனிகளும், எவ்வளவு மெஸேஜ் வந்தாலும், இரண்டு நிமிடத்தில் டெலிவரி செய்து விடுகின்றன(உண்மையில் சில வினாடிகளில் நடந்து விடும்) என்றும் வைத்துக் கொள்வோம். இங்ஙனம், செய்தி கிடைத்த ஒவ்வொருவரும், மேலும் புதிய இரண்டு நபர்களுக்கு, இரண்டு நிமிடத்தில் தகவலை அனுப்பி விடுகின்றனர். இந்த வகையில், செய்தி பரவும்பொழுது, ஒரு மணி நேரத்திற்குள், உங்கள் SMS, எத்தனை நபர்களை அடைந்திருக்கும்.

100 கோடிக்கும் மேற்பட்டோருக்கு செய்தி போய்விடும். இந்திய மக்கள் தொகையினர் அனைவரும் விஷயத்தை தெரிந்து கொண்டு விடுவார்கள். மேலும் அடுத்த ஆறு நிமிடத்திற்குள் உலக மக்கள் அனைவருக்கும் விஷயம் தெரிந்து போய்விடும்.

இதை எளிதில் கணக்கு போட்டு சரி பார்க்கலாம். காலை 9 மணிக்கு, நீங்கள் ஒரு விஷயத்தை தெரிந்து கொள்கிறீர்கள். அதை டைப் செய்து, SMS அனுப்பும்பொழுது மணி சரியாக 9.02 என்று வைத்து கொள்ளுங்கள். 9.04க்கு செய்தி 2 பேருக்கு சென்றிருக்கும். இதே விகிதத்தில், கீழ் கண்ட முறையில் செய்தி பரவுகிறது.

ஆக, ஒவ்வொரு 2 நிமிடத்திற்கும், புதிதாக செய்தி தெரிந்த நபர்கள் இரண்டின் மடங்காக இருப்பார்கள்.

நேரம்--- புதிதாக செய்தி தெரிந்தவர்கள் ---மொத்த நபர்கள்
_____________________________________________________

09.02 --------------- 1 -------------------------------- 1
09.04 --------------- 2 -------------------------------- 3
09.06 --------------- 4 -------------------------------- 7
09.08 --------------- 8 ------------------------------- 15
. . .
. . .
. . .
. . .


செய்தி அறிந்த நபர்கள், முதல் இரண்டு நிமிடத்தில் (2) - 1 என்றும், இரண்டாவது இரண்டு நிமிடத்தில் (2 x 2) - 1 என்றும், மூன்றாவது இரண்டு நிமிடத்தில் (2 x 2 x 2) - 1 என்றும் பெருகிக் கொண்டேயிருக்கும்.

இந்த விகிதத்தில், முப்பதாவது இரண்டு நிமிடத்தில், அதாவது ஒரு மணி நேரத்தில், சரியாக பத்து மணிக்கு, (2 x 2 x 2....30 தடவை) - 1 நபர்கள் செய்தி அறிந்திருப்பார்கள்.

அதாவது இரண்டு இரண்டாக முப்பது தடவை பெருக்கினால் வரும் எண்ணிலிருந்து ஒன்றை கழித்தால் வரும் எண்ணே, நபர்களின் மொத்த எண்ணிக்கை.

107,37,41,824 - 1
= 107,37,41,823.

சரியாக பத்து மணிக்கு, நூற்றி ஏழு கோடியே, முப்பத்தி ஏழு லட்சத்து, நாற்பத்தி ஒன்றாயிரத்தி, எண்ணூற்றி இருபத்தி மூன்று நபர்கள், செய்தியை தெரிந்து கொண்டிருப்பார்கள். வெறும் ஒரே ஒரு நபரில் ஆரம்பித்த இந்த சங்கிலித் தொடர், ஒரு மணி நேரத்தில் இந்த பிரம்மாண்டமான எண்ணை வந்தடைந்துள்ளது.

இந்திய மக்கள் தொகை இப்பொழுது 102 கோடி. அதை விட அதிக நபர்களுக்கு இந்த செய்தி சென்றடைந்துவிடும். அடுத்தடுத்த 2 நிமிடங்களில் , இதன் வேகம் அசுரத்தனமாய் அதிகரிக்கிறது. மேலும் ஆறு நிமிடத்திற்குள் உலகம் முழுவதும் செய்தி தெரிந்து விடும்.

10.02க்கு 21,74,83,647 நபர்களும்,
10.04க்கு 429,49,67,295 நபர்களும்,
10.06க்கு 858,99,34,591 நபர்களும்
செய்தியை அறிந்திருப்பார்கள்.

உலக மக்கள் தொகையே ஜுலை 2006 கணக்குப்படி 652,51,70,264(652 கோடி சொச்சம்)
தான் என்பதால், 10.04கு செய்தி கிடைத்தவர்களில் பாதி நபர்கள்,செய்தி தெரியாத புதிய இரண்டு நபர்கள் கிடைக்காமல் அல்லாடுவார்கள். செய்தி 10.06க்கு உலகம் முழுமைக்கும் தெரிந்துவிடும்.

ஒவ்வொரு நபர்களும், வெறும் இரண்டு நபர்களுக்கு அனுப்பும் செய்தியே, இவ்வளவு விரைவாக பரவி விடுகிறது. இதே செய்தியை ஒவ்வொருவரும், புதிதாக ஐந்து பேருக்கு அனுப்புவதாக, வைத்துக் கொண்டால், இதைவிட வேகமாய் பரவி விடும்.

9.02க்கு --- 1 --- 1
9.04க்கு --- 5 --- 1 + 5 = 6
9.06க்கு ---25--- 1 + 5 + 25 = 31

ஆக மொத்தம் செய்தி தெரிந்த நபர்கள், முதல் இரண்டு நிமிடத்தில் ((5) - 1) / 4 = 1 என்றும், இரண்டாவது இரண்டு நிமிடத்தில் ((5 x 5) - 1) / 4 = 6 என்றும், மூன்றாவது இரண்டு நிமிடத்தில் ((5 x 5 x 5) - 1) / 4 = 31 என்றும் பெருகிக் கொண்டே செல்லும்.

இதே வேகத்தில் பதினான்காவது இரண்டு நிமிடத்தில், அதாவது 9.28 மணிக்கு ((5 x 5 x 5 x....14 தடவை) - 1) / 4 = 152,58,78,906 நபர்களை சென்றடைந்திருக்கும்.

பதினைந்தாவது இரண்டு நிமிடத்தில், 9.30 மணிக்கு ((5 x 5 x 5 x....15 தடவை) - 1) / 4 = 762,93,94,531 நபர்களை சென்றடைந்திருக்கும்.

30 நிமிடத்திற்குள் உலகம் பூராவும் செய்தி பரவி விடுகிறது!!!

கட்டுரை இதோடு முடிந்து விட்டது. இதில் கொடுமை என்னவென்றால், கட்டுரையில் குறிப்பிட்டிருக்கும் எடுத்துக்காட்டில் கடைசியாக செய்தியை தெரிந்துகொண்ட, அதாவது கடைசியாக சங்கிலியில் கோர்க்கப்பட்ட (762,93,94,531 - 152,58,78,906) = 6103515625 நபர்களுக்கு புதிதாக ஆள் கிடைக்காது(சங்கிலியில் கோர்க்கிறதுக்கு).

அதாவது சங்கிலியை வெற்றிகரமாக கோர்க்க முடிந்தவர்களை விட, கோர்க்க முடியாதவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 4 மடங்கு அதிகம்.

லெஃப்ட், ரைட் என்று ஆள் சேர்க்க சொல்லும் சீட்டு கம்பெனிகளின் மோசடி, இந்த வகைதான்.

சரி, இப்பொழுது எதற்கு இவ்வளவு பெரிய விளக்கம்? ஒன்றுமில்லை. மீம் தொடர் விளையாட்டுக்கு என்னால் யாரையும் அழைக்க முடியவில்லை என்பதை கொஞ்சம் விஞ்ஞானபூர்வமாக, சரி விடுங்கள், கணிதபூர்வமாக நிரூபிக்க விரும்பினேன். அவ்வளவுதான்!!:-))

Tuesday, October 07, 2008

குறுக்கெழுத்துப் புதிர் - போT - விடைகள்

இந்த மாதம் குறுக்கெழுத்துப் புதிருக்கு, ஓரளவு நல்ல வரவேற்பு கிடைத்தது. நன்றி.

பெனாத்தல் சுரேஷ், ஸ்ரீதர் நாராயணன், அமர், இலவசக்கொத்தனார், அரசு, சுரேஷ் S.P., வடகரை வேலன் ஆகிய ஏழு பேரும் புதிரை முழுமையாக முடித்தவர்கள். மற்றவர்களும் பெரும்பாலான விடைகளை சொல்லிவிட்டனர். ஒன்றிரண்டுதான் பாக்கி. ஏற்கெனவே சொல்லியிருந்தபடி, ஐந்துக்கு மேற்பட்டவர்கள் விடை சொல்லிவிட்டதால், நான் மரியாதையாக இந்த கு.எ. போட்டியை நிறுத்திக் கொள்கிறேன்(யோசிக்க முடியலைப்பா!!) .

போட்டியில் பங்கெடுத்துக் கொண்டவர்களின் மதிப்பெண் விவரங்களை இங்கே பார்க்கலாம்.

இப்பொழுது புதிருக்கான விடைகளைப் பார்க்கலாம்.

இடமிருந்து வலம் :

2) "விழியருகில்" + "இதயத்துடிப்பின்" ஓசை மாறினால் = தெளிவாகத் தெரியும்.(4).
விடை : கண்ணாடி.

3) "மாமா"வை ஒருமுறை + ஆகாரமில்லாமல் ஆ"றுதல்" செய்தால் = மாற்றம் வரும்.(4)
விடை : மாறுதல்

6) "ணிவின்" ஸ்வரத்தை மாற்றி, முட்டையை உடைத்தால் = இரக்கம் பிறக்கும்.(3)
விடை : கனிவு

11) "வ"கையின் கையுடைத்து + உ"ள்ளு"டையில் அடைந்திருப்பது + மறுபாதி வடி"வம்"ஆனால் = தமிழ்மறை.(5)
விடை : வள்ளுவம்

17) "பல்லி"யின் இடுப்பை வெட்டி ஒலியை மாற்றினால் நிந்தனை ஏற்படும்.(2) விடை : பழி

மேலிருந்து கீழ் :

1) சுழிகள் நிறைந்த "கன்னி" + விஷ"யம்"தில் நஞ்சை அகற்றினால் = கௌரவம்.(5)
விடை : கண்ணியம்

3) "மடி" மீது கால் வைத்து ஏறிப் போ.(2)
விடை : மாடி

4) "த"ற்கொ"லை"யின் அடிமுடியை ஆராய்ந்தால் = சிரம் தனியே வந்துவிடும்.(2)
விடை : தலை

8) ஞானத்தின்->அறிவு + ஒரு கரை வ"ரை" அடைய = இது வழிகாட்டும்.(4)
விடை : அறிவுரை

16) "மீசை"யை திருப்பி விட்டுத்->சைமீ, திரித்து ->சமீ+ கோ"பம்"தில் அரசனை விரட்டியதால் = அண்மையில் கிடைத்தது.(4)
விடை : சமீபம்

19) "உயர்ந்தோர் தரச்சொல்லி" ->கொடு + அழு"க்கு"இன் சோகம் அகற்றி = துன்புறுத்தும் உறுப்பு.(4)
விடை : கொடுக்கு. இந்தக் கேள்வி பலரை கஷ்டப்படுத்தியது. "ஈ, தா என்பது ஒப்போர் கூற்றே! கொடு என்பது உயர்ந்தோர் கூற்றே" - தொல்காப்பியம்.


வலமிருந்து இடம் :

5) "வ"தக்க ஆரம்பித்து + கா"லை"யில் பறவையை விரட்டினால் = மீனைப் பிடிக்கலாம்.(2)
விடை : வலை

9) க"ரக"த்தின் இடையில் + சில "சி"ல + சம"யம்" முடிந்தால் = மறைக்கப்படும்.(5)
விடை : ரகசியம்

13) "சா"லையின் ஒரு ஓரத்தில் + குரங்கு->மந்தி வந்தால் = மணக்கும்.(4)
விடை : சாமந்தி

14) அங்கு"சம்"இன் முனையில் + அ"ங்க"தனின் இடையை, சொருகினால் = வெட்டிக் கூட்டம்.(4)
விடை : சங்கம்

18) ஆ"ட்டு"த் தலைக்கு பதில், "மீ"ன் தலையை வைத்து = வீணையை வாசி.(3)
விடை : மீட்டு

கீழிருந்து மேல் :

7) "கவ"லையின் காலை உடைத்து + கா"தல்"இன் தலையை வெட்டி, உள்ளே நுழைத்தால் = செய்தி தரும்.(4)
விடை : தகவல்

10) "அவ"ள் மருவி + "மனைவி"->தாரம் என்பது = தெய்வப்பிறவி.(5)
விடை : அவதாரம்

12) உட்காராததால் -> அமரா + மலைமகள்->பார்"வதி", கண்மண் தெரியாமல் = நதியாக ஓடுகிறாள்.(5)
விடை : அமராவதி

14) பதியின் சரி பாதி இவள்.(2)
விடை : சதி. இது க்ரிப்டிக் இல்லாத நேரடிக் குறிப்பாக அமைந்து விட்டது.

15) "மிச்சம் விழுந்ததை"-> "கழி"வு, கழித்து எடுத்தால் = அடிப்பான்.(2)
விடை : கழி

பின் குறிப்பு : சொதப்பல்கள் இருந்தால் தெரிவிக்கவும். முடிந்தவரை சப்பைக் கட்டு கட்டுகிறேன்!!

Monday, September 29, 2008

குறுக்கெழுத்துப் புதிர் - போT

போன மாதம் கொத்ஸை தொடர்ந்து நாமும் குறுக்கெழுத்துப் போட்டோம். ஆனா சரியா வரலை. ஆனாலும் தன்னுடைய முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தன் போல இந்த மாதமும் புதிரை உருவாக்கிட்டேன். போன முறை செய்ததில் தவறு என்று தோன்றியவைகளை இந்த முறை சரி செய்திருக்கிறேன். கேள்விகள், விடைகள் இரண்டுமே எளிதாக இருக்கும்படியே புதிரை அமைத்திருக்கிறேன்.

அப்புறம் கொத்ஸ் இந்த மாதம் மதிப்பெண் வேறு போட்டு விட்டாரே. அதையும் காப்பியடிக்காவிட்டால் எப்படி என்பதால், விடை சொன்னவர்களுக்கான மதிப்பெண்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்(போன தடவை ஒரே ஒருத்தர்தானே பதில் சொன்னார்! ஒருத்தருக்காக ஒரு லிங்க்கா?!).

டிஸ்கி - 3:
மரியாதையாக நான்கைந்து பேராவது பதில் சொல்லனும். அப்படி சொல்லலைன்னா, அடுத்த மாதமும் புது கு.எ.புதிர் போடுவேன். நாலைந்து பேராவது பதில் சொன்னால் இந்த மாதத்தோடு நிறுத்தி கொள்வேன் என்று உறுதி கூறுகிறேன்!!

இப்ப புதிரைப் பார்க்கலாம்1348
25
6
97
191611
1810
1713
151412


இடமிருந்து வலம் :

2) விழியருகில் இதயத்துடிப்பின் ஓசை மாறினால் தெளிவாகத் தெரியும்.(4).
3) மாமாவை ஒருமுறை ஆகாரமில்லாமல் ஆறுதல் செய்தால் மாற்றம் வரும்.(4)
6) பணிவின் ஸ்வரத்தை மாற்றி முட்டையை உடைத்தால் இரக்கம் பிறக்கும்.(3)
11) வகையின் கையுடைத்து உள்ளுடையில் அடைந்திருப்பது மறுபாதி வடிவமானால் தமிழ்மறை.(5)
17) பல்லியின் இடுப்பை வெட்டி ஒலியை மாற்றினால் நிந்தனை ஏற்படும்.(2)


மேலிருந்து கீழ் :

1) சுழிகள் நிறைந்த கன்னி விஷயத்தில் நஞ்சை அகற்றினால் கௌரவம்.(5)
3) மடி மீது கால் வைத்து ஏறிப் போ.(2)
4) தற்கொலையின் அடிமுடியை ஆராய்ந்தால் சிரம் தனியே வந்துவிடும்.(2)
8) ஞானத்தின் ஒரு கரை வரை அடைய இது வழிகாட்டும்.(4)
16) மீசையை திருப்பி விட்டுத் திரித்து கோபத்தில் அரசனை விரட்டியதால் அண்மையில் கிடைத்தது.(4)
19) உயர்ந்தோர் தரச்சொல்லி அழுக்கின் சோகம் அகற்றி துன்புறுத்தும் உறுப்பு.(4)


வலமிருந்து இடம் :

5) வதக்க ஆரம்பித்து காலையில் பறவையை விரட்டினால் மீனைப் பிடிக்கலாம்.(2)
9) கரகத்தின் இடையில் சில சில சமயம் முடிந்தால் மறைக்கப்படும்.(5)
13) சாலையின் ஒரு ஓரத்தில் குரங்கு வந்தால் மணக்கும்.(4)
14) அங்குசமின் முனையில் அங்கதனின் இடையை சொருகினால் வெட்டிக் கூட்டம்.(4)
18) ஆட்டுத் தலைக்கு பதில் மீன் தலையை வைத்து வீணையை வாசி.(3)


கீழிருந்து மேல் :

7) கவலையின் காலை உடைத்து காதலின் தலையை வெட்டி உள்ளே நுழைத்தால் செய்தி தரும்.(4)
10) அவள் மருவி மனைவி என்பது தெய்வப்பிறவி.(5)
12) உட்காராததால் மலைமகள் கண்மண் தெரியாமல் நதியாக ஓடுகிறாள்.(5)
14) பதியின் சரி பாதி இவள்.(2)
15) மிச்சம் விழுந்ததை கழித்து எடுத்தால் அடிப்பான்.(2)


இது போன்ற புதிர்களுக்கு வாஞ்சி அவர்கள் தந்திருக்கும் ஒரு எளிய அறிமுகத்தை இங்கே படிக்கலாம்.

Thursday, September 18, 2008

உண்மையைத் தேடி

இன்றைக்கு ஒரு லாஜிக்கலான புதிர். கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு முன்பு யோசிங்கவில் கேட்ட "ஒரே ஒரு ஊர்ல" புதிர் மாதிரிதான் இன்றையப் புதிரும். ஆனால் இந்த தடவை கதை எதுவும் இல்லை, நேரடியாக கேள்விதான்.

உங்கள் முன் இரண்டு பேர் இருக்கிறார்கள். அதில் ஒருவர் எப்பொழுதும் உண்மையே பேசுவார், இன்னொருவர் எப்பொழுதும் பொய்யே பேசுவார், என்பது மட்டும் உங்களுக்கு சொல்லப்படுகிறது. ஆனால், யார் உண்மை பேசுபவர், யார் பொய் பேசுபவர் என்பது உங்களுக்குத் தெரியாது. நீங்கள் அந்த இருவரில் யாராவது ஒருவரிடம், ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்க அனுமதிக்கப்படுகிறீர்கள். அதன் மூலம் யார் உண்மை பேசுபவர், யார் பொய் பேசுபவர் என்று கண்டு பிடிக்க வேண்டும். அப்படியானால் உங்களது கேள்வி என்னவாக இருக்கும்? (ஒரு கேள்விதான் அலவ்டு!!)

வெண்பூ சுட்டிக் காட்டியதால் புதிரில் சின்னத்(?!) திருத்தம். நீங்கள் கேட்கும் கேள்வியில், கேள்வி கேட்கப்படுபவர் மட்டும்தான் நேரடியாக சுட்டப்பட்டிருக்க வேண்டும். அவரல்லாத மற்றவரை கேள்வி சுட்டக் கூடாது.(இதெல்லாம் ஒரு ரூலா?! தாங்கலைப்பா!)


தொடர்பில்லாத குறிப்பு : இந்தப் புதிர் கொஞ்சம் எளிதாக இருப்பதாக நினைப்பவர்கள், பயங்கர கஷ்டமான புதிரை படிக்க விரும்புகிறீர்களா? இங்கே செல்லவும். அதிக நேரம் செலவழிக்க வேண்டுமென்பதால், நான் முயற்சி செய்யவில்லை(எஸ்கேப்பு)!

Wednesday, September 17, 2008

வெட்டி

எனது அறைக்குள், எங்கள் VP திடீரென்று நுழைந்ததை நான் கவனிக்கவில்லை. எனது கணிணித் திரைக்குள், கொத்ஸின் குறுக்கெழுத்தில் மண்டையை பிய்த்துக் கொண்டிருந்தபொழுது, திடீரென்று சத்தம் கேட்டுத் திரும்பினால், அருகில் நின்று கொண்டிருக்கிறார். திரையை மூட சமயம் வாய்க்கவில்லை. பார்த்திருப்பார்!

இருந்தாலும் கண்டுக்காதது போல் வந்த வேலையைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார். பேசிக்கொண்டே, நைஸாக கு.எ. ஐ மூடி வைத்தேன். அவர் போன பின்பு அவர் கொடுத்த வேலை வேலைக்காகாது என்று தெரிந்தது. அதனால் அவரிடம் நேரிடையாகவே அதைப் பற்றி சொல்லிவிடலாம் என்று அவர் அறைக்குச் சென்றேன்.

சிங்கம் பிஸியாக லேப்டாப்புக்குள் மூழ்கியிருந்தது. குரல் கொடுத்துவிட்டு இயல்பாக உள்ளே நுழைந்தேன். இப்பொழுது அவர் கணிணித் திரை தெரிந்தது. அவரும் சிறிது சங்கடத்துடன், திரையில் விரிந்திருந்த சாலிட்டரை மூடிவிட்டு, "என்னப்பா?" என்றார்.

"அடப்பாவி! நீங்களுமா?!" என்று மனதில் நினைத்துக் கொண்டேன்!?!

Monday, September 08, 2008

கருவிப் பட்டை பலமுறை தெரியும் பிரச்சினைக்குத் தீர்வு

தமிழ் மணம் கருவிப்பட்டை பிளாக்கரில் பலமுறை தெரியும் பிரச்சினை பல பிளாக்களில் இருக்கிறது. அவற்றை சரி செய்யும் விதமாக, பட்டையை இணைக்கும் நிரலியில் சில மாறுதல்கள் செய்து தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு அனுப்பினேன். ஒரு வாரம் கழித்து தமிழ் சசியிடமிருந்து மடல் கிடைத்ததற்கான மறுமொழி வந்தது. நானும் அதை தமிழ்மணம் கருவிப்பட்டை இணைக்கும் பக்கத்தில் செயல்படுத்துவார்கள் என்று காத்திருந்தேன். மேலும் பத்து நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஒன்றும் நடப்பதாக அறிகுறியில்லை. சரி,இது வேலைக்காகாது, நாமே வலையேற்றினால்தான் உண்டு என்று முடிவு செய்து வலையேற்றிவிட்டேன். முதலில் இந்தப் பதிவிலேயே, அந்த நிரலியை செயல்படுத்த முனைந்தேன். javascript பிளாக்கரில் சரியாக வேலை செய்யவில்லை. அதனால் அதை தனிப் பக்கமாக வலையேற்றியிருக்கிறேன். உங்கள் பிளாக்கர் வலைப்பதிவில், பலமுறை கருவிப்பட்டைத் தெரியும் பிரச்சினை இருந்தால், அதை நீங்கள் இங்கே சென்று சரி செய்து கொள்ளலாம்.

சுட்டி :- http://karuvipattai.freevar.com/

Monday, August 25, 2008

குறுக்கெழுத்துப் புதிர்

போன வாரம் நம்ம இலவசக்கொத்தனார் Cryptic வகை குறுக்கெழுத்துப் புதிர் போட்டார். அவரைத் தொடர்ந்து நாமும் அதே மாதிரி Cryptic குறுக்கெழுத்துப் புதிர் போட்டால் என்ன என்று தோன்றியதால் போட்டாச்சு. ஆனால் கொத்தனார், வாஞ்சி போன்றவர்களின் புதிர்கள் ஹிண்டு, எக்ஸ்ப்ரெஸ் ரேஞ்ச் என்றால், நம்மளுது வாரமலர் ரேஞ்சுக்குத்தான் வந்தது. இருந்தாலும் பரவாயில்லைன்னு பதிஞ்சாச்சு.

குறுக்கெழுத்துப் புதிர்னா, அதன் கட்டங்கள் Symmetric ஆக இருக்க வேண்டும் என்பது விதியாம். நம்மோடது அப்படியில்லைங்கிறது பெரிய குறையாய்டுச்சு. ஆனால், ஏன் கட்டங்கள் Symmetryயாகத்தான் இருக்க வேண்டும் என்பதற்கு சரியான விளக்கம் கிடைக்கவில்லை. நான் அறிந்து கொண்ட வரையில், அது ஒரு Standard என்பதாக மட்டும்தான் ஆங்கில ஊடகங்கள் பின்பற்றுகின்றன. மற்றபடி, இந்த விதியின் மூலம் புதிரை விடுவிப்பதில் கஷ்டமோ, சுவாரஸ்யம் கூட்டுதலோ இல்லை என்பதே என் கருத்து. இது மட்டுமில்லாமல் வேறு சில Standardகளையும் வெவ்வேறு ஊடகங்கள் பயன்படுத்துகின்றன. அவற்றையெல்லாம் நாம் தமிழுக்கும் பயன்படுத்துவது கஷ்டம் என்பதால், அவற்றோடு சேர்த்து இந்த Symmetric விதியையும் நான் விட்டு விட்டேன்(அப்பாடா, ஒரு வழியாக சமாளித்தாயிற்று!!)

ஏற்கெனவே சொன்னது போல், இது Cryptic வகைப் புதிர். அதாவது கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புகள், விடையை நேரிடையாக விளக்காமல், விடையை அக்கு வேறு ஆணிவேறாக பிரித்து, அக்குக்கு ஒரு அர்த்தம் ஆணிக்கு ஒரு அர்த்தம் ஆனால் மொத்தத்திற்கும் வேறு அர்த்தம் என்ற முறையில் அமைந்திருக்கும். ஒரு உதாரணம் தருகிறேன்.

ஆசிரியப்பாவின் தலையை கொய்தால் கவலை ஏற்படும்(3) - இதற்கு விடை : "கவல்" ஆசிரியப்பா என்பது அகவலோசையுடையது. அதனால் அது 'அகவல்' என்றும் அழைக்கப்படுகிறது. இந்த அகவல் என்ற வார்த்தையின் தலையைக் கொய்தால், அதாவது முதல் எழுத்தை எடுத்துவிட்டால் - கவல். கவல் என்றால் கவலை என்று பொருள்.

மேலும் விளக்கங்களுக்கு வாஞ்சியின் இந்தக் கட்டுரையைப் பாருங்கள்.

உதாரணத்தில் உள்ளது போல், கவல் போன்ற கஷ்டமான வார்த்தைகள், ஒன்றிரண்டுதான் இந்தப் புதிரில் கொடுத்திருக்கிறேன். பெரும்பாலும் எளிதான கேள்விகள்தான். நிரப்ப ஆரம்பித்தால் உங்களுக்கே ஆர்வமாயிருக்கும் என்று நம்புகிறேன்.

கொத்தனாரின் உதவியோடு(அவருக்கு உதவியவர் கே.ஆர்.எஸ்.) பதிவிலேயே நிரப்பக் கூடிய கட்டங்களைக் கொடுத்திருக்கிறேன். இனி புதிர்.

11817
16
919
320
781012
2
414
5
6111315


இடமிருந்து வலம் :

1) கடவுச் சொல் சொல்லி உள்ளே நுழையவும்.(4)
4) பறக்க ஆரம்பித்தால் விருந்தை முடித்து விடலாம்.(4)
8) ஆரம்பத்தின் முடிவில் பரம்பரையை ஆரம்பித்தால் தலை சுற்றும்.(5)
11) அடுத்தப் பாதியில் உப்பைக் கரைத்தால் சமைக்கலாம்.(4)
14) தவத்தை முதலில் கொடுத்தால் வளத்தில் கொஞ்சம் தந்து இடம் கொடுப்போம்.(3)
16) பசு மேயும் உள்ளாடையின் ஓரங்களை நறுக்கி அங்கு குறைத்தால் மரியாதை.(4)
18) காதலின் மூலம் முடிப்பதே உத்தமம்.(3)


மேலிருந்து கீழ் :

1) கன்னி முதலில் மார்பின் பின்புற ஓரங்களை உவப்பாக்கினாள்.(3)
2) கெஞ்சிக் கேட்டால் பாதி ஆட்சி செய்யலாம்.(4)
3) பசுவை ஓட்டிக் கொண்டு போனால் உபத்திரவம் வரும்.(4)
4) பழகத் தொடங்கினால் முடிவில் வந்து விளையாடும்.(3)
7) முடிவற்ற எளிமையின் இறுதியில் குழந்தையைக் கண்டாள் வஞ்சி.(4)
12) நடுவில் அசிரத்தையாக இருந்துவிட்டால் முடிவில் அபத்தமாகி குருதி வெளிப்படும்.(4)
17) மணாளனே ஆரம்பம் இவளுக்குள் கங்கையும் கரைந்துவிடும்.(3)
19) மச்சத்தில் மீதியும் பாதியும் சேர்த்து வை.(4)


வலமிருந்து இடம் :

6) பகுத்தறிவை பகுக்க முயன்றால் தாக்கப்படுவோம்.(3)
9) வழ வழ என்று பேசிக் கொண்டிருந்தால் ஆமணக்காக முடிந்துவிடும்.(4)
19) சங்கொலிக்க ஆரம்பித்தால் கடைசித் தங்கை அச்சப்படுவாள்.(3)
20) சபாஷ் என்று சொல்லமுடியாவிட்டாலும் கூட்டம் வரும்.(2)

கீழிருந்து மேல் :

3) நதிக்கரையோரம் ஆண்கள் தவம் செய்தால் ஒளி பெறலாம்.(4)
5) துருப்பிடிக்க ஆரம்பித்தால் கொஞ்சம் பயனில்லாமல் போய் விடும் முனை.(4)
10) பானையின் காலை ஒடித்தால் நெடு நெடுவென வளர்ந்து விடும்.(2)
12) சூரியன் என்றதும் காக்கை முண்டமாகிவிடும்.(4)
13) முடிவற்ற ஞானியின் உள்ள முடிவில் ஞானம் கிடைக்கும்.(5)
15) தலையை வெளிக்காட்டுவது கொஞ்சம் சிரமம்தான்.(3)
20) பாதி பயத்திலேயே மூடன் ஒங்கி அடித்துவிட்டான்.(5)

Wednesday, August 20, 2008

பந்து

பந்த் இல்லை. இது பந்து. அதாவதுங்க மொத்தம் ஆறு பந்து இருக்கு(ஆரம்பிச்சுட்டான்யா!).

இரண்டு சிவப்பு, 2 வெள்ளை, ரண்டு நீலம், இப்படி ஜோடி ஜோடியா இருக்கு(மேலே உள்ள படங்களை பார்க்காதீங்க. கீழே உள்ளதை பாருங்க!!;-)). ஒவ்வொரு ஜோடியிலேயும் ஒரு பந்து, மற்றதை விட கொஞ்சம் எடை அதிகம். எடை அதிகமுள்ள எல்லா பந்துகளும் ஒரே எடைதான். அதே மாதிரி குறைவா உள்ள பந்துகளின் எடையும் ஒரே அளவுதான். இப்ப உங்ககிட்ட ஒரு தராசு கொடுத்துட்டோம். அதுல இரண்டே 2ரண்டு முறை மட்டும் எடை போட்டு, ஒவ்வொரு ஜோடியிலேயும், எது எது எடை அதிகமான பந்துன்னு கண்டுபிடிக்க முடியுமா?


பின் குறிப்பு : நமீதா படங்களுக்கும் கேட்கப்பட்ட கேள்விக்கும் சம்பந்தம் இல்லை :-)

Monday, August 18, 2008

குதிரை வீரர்கள்

இந்தப் புதிருக்கு செஸ் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. செஸ் பலகையில், குதிரையை எப்படி நகர்த்த வேண்டும் என்று தெரிந்திருந்தாலே போதும். அதுவும் தெரியாது என்றாலும் பரவாயில்லை. குதிரையை எப்படியெல்லாம் நகர்த்தலாம் என்ற விளக்கம் கீழே இருக்கிறது.

இப்பொழுது உங்களிடம் 3x3 செஸ் பலகை இருக்கிறது. ஏழு குதிரை வீரர்கள் இருக்கிறார்கள். முதலில் ஒரு குதிரையை எடுங்கள். அதை 3x3 பலகையில் காலியான ஏதாவதொரு கட்டத்தில் வையுங்கள். பின் அதை வைத்த கட்டத்திலிருந்து ஒரு முறை அதை குதிரை நகர்த்தல் முறையில் நகர்த்துங்கள். பின் இதே முறையில் இரண்டாவது குதிரையை காலி கட்டத்தில் வைத்து, ஒரு முறை நகர்த்தல்... இப்படியே ஏழு குதிரை வீரர்களையும் பலகையில் வைக்க முடியுமா? முடியுமென்றால் எப்படி?


குதிரை நகர்த்தல் முறை :

குதிரை எப்பொழுதும் L வடிவ பாதையில்தான் நகரும். L வடிவ பாதையில், மொத்தமாக மூன்று கட்டங்கள் தாண்டும். பாதையில் வேறு காய்கள் இருந்தாலும், அவற்றைத் தாண்டிச் செல்லும். ஆனால் நகர்த்தலின் முடிவிலிருக்கும் கட்டத்தில் வேறு காய்கள் இருக்க கூடாது. 3x3 பலகையில் ஒரு குதிரை வீரன் செல்லக் கூடிய இரண்டு சாத்தியக்கூறுகளை கீழேயுள்ள படங்கள் காட்டுகின்றன.

Tuesday, July 15, 2008

வட்டமேஜை கொள்ளையர்கள

ஒரு வட்ட மேஜையில் நான்கு பேர் அமர்ந்துள்ளனர். அதில் ஒருவன் திருடன், ஒருவன் தாதா, ஒருவன் கொலைகாரன், மற்றொருவன் கடத்தல்காரன். இவர்களில் இருவர் மட்டுமே உண்மையான குற்றவாளிகள். மீதி இருவர் அவர்களை கண்டுபிடிக்க மாறுவேடத்தில் வந்துள்ள சிஐடி ஆபீசர்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு நால்வரும் யார் யார் என்பதையும் அவர்கள் எவ்வாறு அமர்ந்துள்ளனர் என்பதையும் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.


1. காளியும் கமலும் குற்றவாளிகள்.

2. காளி தாதாவிற்கு எதிரில் அமர்ந்துள்ளான்.

3. சிஐடி வெங்கி திருடனுக்கு இடதுபக்கம் உள்ளார்.

4. சிஐடி மங்கி கொலைகாரனுக்கு எதிரில் இருக்கிறார்.

5. சிஐடி மங்கி திருடன் கிடையாது.

Monday, July 07, 2008

பூமிக்கு ஒரு பெல்ட்

பூமி கோள வடிவில் இருக்கிறது என்பது சிறு குழந்தைக்கும் தெரியும். உண்மையில் அது மிகச் சரியான கோளம்(Perfect Sphere) கிடையாது. பள்ளங்களும் மேடுகளாமாய்த்தான் உள்ளது. கணக்கிற்காக அது மிகச் சரியான கோளமாய் இருக்கிறது எனக் கொள்வோம். அந்த பூமிக் கோளத்தை சுற்றி, தரையோடு தரையாக எஃகினாலான ஒரு பெல்ட் அமைக்கிறோம். இப்பொழுது அந்த பெல்டை வெட்டியெடுத்து, அதன் நீளத்தில் சரியாக ஒரு அடி மட்டும் கூட்டுகிறோம். இப்பொழுது பெல்டை மறுபடியும் பூமியின் தரையிலிருந்து சமமான தூரத்தில் அமைத்தோமானால், தரைக்கும் பெல்ட்டுக்கும் இடைவெளி எவ்வளவு இருக்கும்? இதே செய்முறையை பூமிக்கு பதில் நிலவை வைத்து செய்தால், அப்பொழுது இடைவெளி எவ்வளவு இருக்கும்?

பி.கு : படத்துக்கும் கேள்விக்கும் சம்பந்தம் இல்லை!!:-)

Wednesday, June 04, 2008

சிறைச்சாலை - விடை

இந்தப் புதிரை கொஞ்சம் விரிவாக அலசலாம்.

இப்பொழுது ஒரே ஒரு சிவப்பு முத்திரைதான் குத்தப்பட்டுள்ளது என்று வைத்துக் கொள்வோம்(Assumptionதான்).

முதல் மாதத்தின் முடிவில் :-

1) சிவப்பு முத்திரை குத்தப்பட்டுள்ளவன், வேறு யார் முதுகிலும் சிவப்பு முத்திரையே இல்லாததால், ஒரே ஒரு சிவப்பு முத்திரைதான் குத்தப்பட்டுள்ளது, அதுவும் தன் முதுகில் என்று யூகிப்பான். அதை வார்டனிடம் சொல்லி அவன் விடுதலையாகி விடுவான்.

2) மற்றவர்களுக்குத் தெரிவது ஒரே ஒரு சிவப்பு முத்திரை. இதன் மூலம், அவர்கள் முடிவு செய்வது, மொத்தம் ஒன்று அல்லது இரண்டு தான் சிவப்பு முத்திரை குத்தப்பட்டுள்ளது. ஒன்றே ஒன்றாயிருந்தால், அவர்கள் கண்களுக்குத் தெரிந்த கைதியின் முதுகில் குத்தப்பட்டது மட்டும். இரண்டாயிருக்கும் பட்சத்தில், தஙளது சொந்த முதுகிலும் சிவப்பு முத்திரை குத்தப்பட்டிருக்கலாம். இப்பொழுதே எது சரியென்று தீர்மானிப்பது முடியாது. ஆகையால் அடுத்த மாதம் வரை பொறுத்திருப்பார்கள்.

இரண்டாவது மாதத்தின் முடிவில் :-

1) இப்பொழுது எல்லோருக்குமே முதல் மாதம் விடுதலையாகி போய்விட்ட கைதியின் காலி அறை தெரியும். மேலும் எல்லோருக்குமே தெரிவது பச்சை முத்திரை மட்டும்தான். தனது முதுகிலும் சிவப்பு முத்திரை இருந்திருந்திருந்தால், முதல் மாதமே விடுதலையான கைதியால் சரியான விடையை யூகித்திருக்க முடியாது. அதனால் தனது முதுகில் இருப்பது பச்சை முத்திரைதான் என்று முடிவு செய்து, அதை வார்டனிடம் சொல்லி எல்லோருமே விடுதலையாகி விடுவார்கள்.சரி. இப்பொழுது மொத்தம் இரண்டு சிவப்பு முத்திரைகள் குத்தப்பட்டுள்ளன என்று வைத்துக் கொள்வோம்(Assumption 2).

முதல் மாதத்தின் முடிவில் :-

1) சிவப்பு முத்திரை குத்தப்பட்டுள்ள கைதிகள் இருவருக்கும், ஒரே ஒரு சிவப்பு முத்திரை மட்டும் தெரியும். இதனால் மொத்தம் குத்தப்பட்ட சிவப்பு முத்திரைகள் ஒன்று அல்லது இரண்டு என்பது இவர்களுக்கு உறுதியாகிறது. ஆனால் ஒன்றா இரண்டா என்பதை இந்த மாதமே முடிவு செய்ய முடியாது. அதனால் அடுத்த மாதம் வரை பொறுத்திருப்பார்கள்.

2) மற்றவர்களுக்குத் தெரிவது இரண்டு சிவப்பு முத்திரைகள். அப்படியென்றால் மொத்தம் இரண்டு அல்லது மூன்று சிவப்பு முத்திரைகள் குத்தப்பட்டுள்ளன என்ற முடிவிற்கு வருகிறார்கள். தங்கள் முதுகில் குத்தப்பட்டள்ள வண்ணம் குறித்து இப்பொழுது எந்த முடிவிற்கும் வர முடியாததால், இவர்களும் பொறுத்திருப்பார்கள்.


இரண்டாவது மாதத்தின் முடிவில் :-

1) சிவப்பு முத்திரை குத்தப்பட்டுள்ள கைதிகள் இருவரும், யாருமே விடுதலையாகவில்லை என்பதை கவனிக்கின்றனர். மேலும் அதே ஒரு சிவப்பு முத்திரை இந்தத் தடவையும் தெரிவதை கவனிப்பார்கள். தனது முதுகில் கருப்பு வண்ணத்தில் முத்திரை குத்தப்பட்டிருந்தால், இன்னொருவன் முதல் மாதமே விடுதலையாகியிருப்பான். ஆனால் அவன் அப்படி விடுதலையாகவில்லை. ஆகையால் தனது முதுகில் இருப்பது சிவப்பு முத்திரையே என்ற முடிவிற்கு இருவருமே வந்து, அதை வார்டனிடம் சொல்லி, விடுதலையாகி விடுவார்கள்.

2) கருப்பு வண்ண முத்திரைக்காரர்களுக்கு, இந்த மாதமும் இரண்டு சிவப்பு முத்திரைகளும், யாருமே முதல் மாதம் விடுதலையாகவில்லை என்பதும் தெரிகிறது. இப்பொழுதும் அவர்கள் முதுகில் உள்ளதை சரியாக யூகிக்க முடியாததால், மறுபடியும் பொறுத்திருப்பார்கள்.

மூன்றாவது மாதத்தின் இறுதியில் :-

1) கருப்பு வண்ண முத்திரையுள்ளவர்களுக்கு, இந்த மாதம் சிவப்பு முத்திரை குத்தப்பட்ட கைதிகளின் இரு அறைகளும் காலியாகத் தெரியும். இதன் மூலம் தங்கள் முதுகுகளில் குத்தப்பட்டுள்ளது கருப்புதான் என்ற முடிவிற்கு வந்து, அவர்களும் இந்த மாதமே விடுதலையாகி விடுவார்கள்.

மேலேயுள்ள எடுத்துக்காட்டுகளின்படி, கைதிகள் விடுதலையாகும் காலம், குறைவாக குத்தப்பட்ட வண்ண முத்திரையின் எண்ணிக்கையைப் பொறுத்து அமையும்.

அதாவது 6 கறுப்பு முத்திரைகளும், 94 சிவப்பு முத்திரைகளும் குத்தபட்டிருந்தால், குறைவான எண்ணிக்கை உள்ள வண்ணம், அதாவது கறுப்பு வண்ண முத்திரையுள்ளவர்கள், அந்த வண்ணத்தின் எண்ணிக்கையளவான மாதங்கள்(ஆறு மாதம்) சிறையில் இருக்க வேண்டியிருக்கும். மற்றவர்கள், அவர்களை விட ஒரு மாதம் அதிகமாக(ஏழு மாதம்).

சரி. நமது கேள்வி என்ன?

எல்லா கைதிகளும் விடுதலையாவதற்கு, குறைந்தபட்சமாக எத்தனை மாதங்கள் ஆகும்? அதிக பட்சமாக எத்தனை மாதங்கள் ஆகும்?

எல்லா கைதிகளும் விடுதலையாவதற்கு, குறைந்தபட்சமாக இரண்டு மாதங்கள் ஆகும்.

அதிகபட்சமாக? 99ஓ, 100ஓ இல்லை. 51கூட இல்லை. 50தான். அப்பொழுது இரு வண்ணங்களுமே 50/50 என்று இருப்பதால். இரு வண்ணங்களுமே குறைந்த பட்ச எண்ணிக்கை கொண்டதாகிவிடும்.

பி.கு :- படங்களைப் பார்த்து உங்கள் கண் கெட்டு விட்டதென்றால் அதற்கு நான் பொறுப்பில்லை!!:-)


Tuesday, June 03, 2008

கொஞ்சம் ஆறுதலுக்காக

போன பதிவை பார்த்து வெறுப்படைஞ்சவங்களுக்கு, கொஞ்சம் ஆறுதலாக.. கொஞ்சம் கலை வண்ணமுமாய்..Monday, June 02, 2008

என்ன கொடுமை சார் இது?!?
Thursday, May 29, 2008

சிறைச்சாலைஒரு ஊரில் ஒரு விநோதமான சிறைச்சாலை இருந்தது. அந்த சிறைசாலைக்கு ஒரே நேரத்தில், நூறு கைதிகள் கொண்டு வரப்பட்டார்கள். அவர்கள் அனைவரின் முதுகிலும் ஒரு சிறிய வட்ட முத்திரையை பச்சை குத்தினார்கள், சிலருக்கு கருப்பு வண்ணத்திலும், சிலருக்கு சிவப்பு வண்ணத்திலும். தனது முதுகில் எந்த வண்ணத்தில் முத்திரை குத்தப்பட்டுள்ளது என்பது கைதிக்குத் தெரியாது. ஆனால், மொத்தம் நூறு பேர் என்பதும், பச்சை குத்தப்படும் வண்ணங்கள் கருப்பு, சிவப்பு என்பதும், எல்லா கைதிகளுக்கும் சொல்லப்பட்டது.

கைதிகள் அனைவருமே நன்கு படித்த அறிவாளிகள்(ஏதோ ஊழல் குற்றமாம்!!). ஒவ்வொரு கைதியும் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டனர். ஒவ்வொரு அறையிலும், ஒரு சுவற்றில் ஒரு வீடியோ கேமராவும், எதிர் சுவற்றில் ஒரு டிஸ்பிளே ஸ்கிரீனும் இருந்தது. மாதத்தின் கடைசி தினத்தன்று, அரை மணி நேரம், அந்த வீடியோ கேமராவும், டிஸ்பிளே ஸ்கிரீனும் வேலை செய்யும். அந்த நேரத்தில் எல்லா கைதிகளும் தங்கள் முதுகை கேமராவுக்கு காட்டியபடி இருக்க வேண்டும். அந்த நேரத்தில், தப்பித் தவறிக் கூட திரும்பிப் பார்க்கவோ, அல்லது ஏதாவது சைகை செய்யவோ கூடாது. மீறினால் மரணதண்டனை நிச்சயம். அதே நேரத்தில், டிஸ்பிளே ஸ்கிரீனில் தெரியும் மற்ற கைதிகளின் முதுகை கவனித்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கைதியின் அறையிலிருக்கும் ஸ்கிரீனில், அந்த கைதியின் அறையைத் தவிர, மற்ற கைதிகளின் அறைகள் மட்டுமே தெரியும்.

இந்த வீடியோ படம் காட்டுதல் முடிந்ததும், யாருக்காவது தனது முதுகில் குத்தப்பட்டிருக்கும் வண்ணம் எதுவென்று தெரிந்தால், வார்டனிடம் சொல்லலாம். கைதி கூறுவது சரியாக இருந்தால் அந்தக் கைதி அப்பொழுதே விடுவிக்கப்படுவான். தவறாக இருந்தால் மரண தண்டனை. அதனால், யாரும் வெறும் யூகங்களை முயல மாட்டார்கள். அப்படி சரியாக சொல்லி விடுதலையாகிவிட்ட கைதியின் காலி அறையே, அடுத்த மாததிலிருந்து வீடியோவில் தெரியும். அப்படி காலி அறை தெரிந்தால் அந்தக் கைதி விடுதலையாகிவிட்டான் என்பது நிச்சயம்.

எல்லா கைதிகளுக்குமே சீக்கிரம் விடுதலையாகும் எண்ணம் இருக்கிறது; அதே நேரத்தில் சேதமில்லாமலும்!

இந்தச் சூழ்நிலையில், எல்லா கைதிகளும் விடுதலையாவதற்கு, குறைந்தபட்சமாக எத்தனை மாதங்கள் ஆகும்? அதிக பட்சமாக எத்தனை மாதங்கள் ஆகும்?

Friday, April 18, 2008

எழுத்திலே கலைவண்ணம் வரைந்தான்!!
சுத்தி சுத்தி சுத்துனா!?!

நெடு விடுப்பில்(லாங் லீவ்) செல்லவிருப்பதால், அதற்குமுன், ஒரு கணக்கை கேட்டு வைத்து விடலாம் என்று ஒரு கெட்ட எண்ணம்!?!

ஒரு நீட்ட உருளைக்கிழங்கு இருக்குது. ஸாரி, ஒரு நீட்ட உருளை(சிலிண்டர்) இருக்குது. அத்தோட நீளம் 90செ.மீ., சுத்தளவு 24செ.மீ.. அத்த சுத்தி சுத்தி, ஒரு நூல(கயிறுபா) சுத்துறாங்க. அந்த நூலு, உருளைய சரியா 5 தடவை சுத்திருக்கு(அதாவ்து கரீட்டா அஞ்சு ரவுண்டு அடீச்சிருக்கு). அப்படி 5 தடவை சுத்துனதுல, நூலோட ரெண்டு முனையும், உருளையோட மேலேயும் கீழேயும் இருந்துச்சு(பட்த்த பாத்துகோபா!).

இப்போ கேள்வி என்னத்த பெரிசா கேட்டுறப் போறேன்? அந்த நூலோட நீளம் என்ன? அவ்வளவுதான்!

Tuesday, April 15, 2008

காசு தங்கக் காசு

நம்ம கெபிகிட்ட(கெக்கே பிக்குனி) கொஞ்சம் தங்க காசுங்க இருக்காம். அதாங்க, இந்த தங்கத்த 1 பவுனுக்கு ரவுண்டு பண்ணி, காசு மாதிரி போட்டு, நடுவுல லக்ஷ்மி படமெல்லாம் போட்டிருக்குமே; அந்த மாதிரி காசுங்க. மொத்தம் எத்தனை காசு வச்சிருக்கீங்கன்னு தெரியாம கேட்டுட்டேன். அதுக்கு அவங்க உடனே உங்க ஸ்டைல்லயே பதில் சொல்றேன் பேர்வழின்னு "எங்கிட்ட உள்ள காசுங்கள ரெண்டு கூறா பிரிச்சு வச்சிருக்கேன். ரெண்டு கூறுக்கும் இடையில எத்தனை காசு வித்தியாசம் இருக்கோ, அதை முப்பத்தி ஏழால பெருக்கினா வர்ற விடையும், ஒவ்வொரு கூறையும் தனித் தனியா ஸ்கொயர் பண்ணி, அந்த ரெண்டு நம்பருக்கும் இடையில உள்ள வித்தியாசமும் ஒன்னு. அப்ப எங்கிட்ட எத்தனை காசுங்க இருக்கு?" அப்படின்னு கேட்டாங்க. "உங்களோட ரெண்டாவது வாக்கியம் சுத்தமா புரியலை. கொஞ்சம் தமிழ் படுத்தி புரிய வைங்க"ன்னு சொன்னேன். "சரி பொழச்சுப் போ. இங்கிலீஷ்லயே சொல்றேன். Thirty Seven times the difference between the number of coins in each group, EQUALS, the difference between the squares of the two numbers. புரிஞ்சுதா?"ன்னாங்க. ஓரளவு புரிஞ்சுது. ஆனா, மொத்தம் எத்தனை காசுங்கன்னுதான் தெரியலை. உங்களுக்கு ஏதாவது தெரியுதா?

பி.கு.: விடை சொல்பவர்களுக்கு, அந்த தங்க காசுகளிலிருந்து ஒன்று கூட கொடுக்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்படுகிறது!!

Thursday, April 10, 2008

சதுரம் வட்டம் செவ்வகம் ஆரம்

ஒரே ஒரு ஊர்ல ஒரு சதுரம் இருந்துச்சாம். அந்த சதுரத்துக்குள்ள ஒரு வட்டமாம். அந்த வட்டத்தோட விளிம்பு, நாலு பக்கமும் சதுரத்தோட விளிம்புங்கள தொட்டுகிட்டு இருந்திச்சாம். இப்ப சதுரத்தோட ஒரு மூலைல, வட்டத்துக்கும் சதுரத்துக்கும் இடையில கொஞ்சம் இடம் இருக்கும்ல; அதை அடைச்ச மாதிரி ஒரு செவ்வகம் வந்து உக்காந்திச்சு. அதாவது அந்த செவ்வகத்தோட ரெண்டு பக்கமும், சதுரத்தோட மூலைல ஒட்டிகிட்டு இருக்கும். அதே நேரத்துல செவ்வகத்தோட எதிர் முனை, வட்டத்த தொட்டுகிட்டு இருக்கும். இப்ப அந்த செவ்வகத்தோட ஒரு பக்கம் 7 அடி; இன்னொரு பக்கம் 14 அடி. அப்படின்னா நடுவுல இருக்கிற வட்டத்தோட ஆரம் என்ன?