Friday, October 02, 2009

குறுக்கெழுத்து போT - 4 விடைகள்

இந்த முறை விடை சொன்னவர்கள் மிக மிக குறைவுதான்(மொத்தமே 5 பேர்தான்). ரொம்ப கஷ்டமாக இருந்ததா? இல்லை இதெல்லாம் ஒரு புதிர்னு சொல்லி லூஸ்ல விட்டுட்டீங்களான்னு தெரியவில்லை.

விடை சொன்ன அந்த 5 பேர் :

1) வாஞ்சிநாதன்
2) வீ.ஆர். பாலகிருஷ்ணன்.
3) குன்னத்தூர் சந்தானம்
4) பூங்கோதை
5) அரசு

இதில் எல்லாவற்றுக்கும் சரியான விடையளித்தவர்கள் பாலகிருஷ்ணனும், பூங்கோதையும்.

குறுக்காக

1. சொக்காய் - மதுரை மன்னனை நிறைய பேர் பாண்டியன் என்று நினைத்து குழம்பிவிட்டார்கள். குழம்ப வேண்டும் என்றுதான் கொடுத்திருந்தோம். பலரும் சொக்கா’வா’ என்றே விடை சொன்னார்கள். அழைத்தாய் இறுதியாக என்று கொடுத்திருந்ததால் சொக்காய் என்பதே சரியான வார்த்தை. இருந்தாலும் ’சொக்காவா’க்கும் மதிப்பெண் கொடுத்தோம்.

3. அரோகரா - கந்தன் புகழ் பாடு என்று கொடுத்திருக்க வேண்டும். தவறை சுட்டிக் காட்டிய வாஞ்சிக்கு நன்றி. ஆனாலும் எல்லோரும் கண்டுபிடித்து விட்டார்கள். துருவ ஒளி - அரோரா - வட/தென் துருவங்களில் மட்டும் பனிப்பரப்பினால் இயற்கையாக தோன்றும் வண்ண ஒளி.

7. சிந்தாமணி - எளிய குறிப்புதான். விரும்பியது கொடுக்கும் மணி - சிந்தாமணி.

8. தாழி - ’த’கரம் + கடல் (ஆழி) . குழம்புவீர்கள் என்று நினைத்தோம். ம்ஹும். நீங்களாவது குழம்புவதாவது.

9. வெண்ணை உருண்டை - கருணை குறைவாய் என்பது ’க’ இல்லாமல் ருணை என்பதை குறிக்கிறது. இதனுடன் ’வெண்டை உண்’ என்பதில் உள்ள எழுத்துக்களை கலக்கினால் கண்ணனைக் கவரலாம். இதிலும் ஒரு பிழை உண்டு. ’வெண்ணெய்’ என்பதே சரியான வார்த்தை. இனி கவனமாக இருக்க வேண்டும்.

10. மீறி - ’மீன் வலையைப் பற்றி’ என்பதன் முதல் கடைசி எழுத்துக்கள் சேர்ந்து அடங்காமல் போனது.

12. விண்கலமா - ’கவி மாலன்’ முட்டை அதிகம் உண்டால் கவி மால’ண்’ ஆவார். அவர் குழம்பினால் வேற்றுக் கிரகம் போவார்.

14. துந்துபி - பேரிகை என்ற க்ளுவிற்கு பதில் அறுபது தமிழ் வருடங்களில் ஒன்று என வரும்படி கொடுக்கலாம் என்று நினைத்தோம். பிறகு வாக்கிய அழகிற்காக மாற்றி விட்டோம்.

15. மிதியடி - இந்த க்ளு எனக்கே பிடித்திருந்தது. சேது நாயகன் என்ற வார்த்தைக்கு விக்ரமிடமிருந்து விலகி, ராமர் என்று யோசித்தால் எளிதில் கண்டு பிடித்திருக்கலாம். அதையும் மூன்று பேர் சரியாக யோசித்துள்ளனர்.


நெடுக்காக

1. சொடக்கு - ஆங்கில வாத்தை டக் என்று எளிதில் விடுவித்து விடுவீர்கள் என்று தெரிந்தே தான் கொடுத்தோம்.

2. காஞ்சி - சத்தியமாக நூற்றாண்டு விழா பாதிப்பில் தமையனை அழைக்கலீங்க! அது சரி . . . ’ஏப்ரல் மே யில...’ பாடல் க்ளுவில் தெரியவில்லையா?!?

4. ரோகிணி - அவ’ரோ’+ மணியோசை = ’கிணி’. சோதிட ஸாஸ்திரத்தில் இருபத்தி ஏழு நட்சத்திரங்களும் சந்திரனின் மனைவியர். அவர்களில் சந்திரனுக்கு மிகவும் பிரியமான மனைவி ரோகிணி.

5. ராக்கோழி - மீண்டும் ஆங்கில என்று உபயோகிக்க எங்களுக்கே விருப்பமில்லைதான். என்ன செய்ய? ராக் தமிழ் வார்த்தை கிடையாதாமே?

6. பாதாள உலகம் - மிக எளிதான் குறிப்புதான். விளக்கம் தேவையில்லை என்று நினைக்கிறோம்.

8. தாடை - க்ளுவை டைப்பியதும் எங்களுக்கே முகம் கிழிந்து விட்டது போல ஒரு உணர்வு! நீங்கள் யாரும் கிழித்து விடுவீர்களோ என்ற பயமும் கூட!!

9. வெறி - ஆக்ரோஷமாக என்று கொடுக்கலாமா என நினைத்தோம். எப்படி கொடுத்திருந்தாலும் கண்டு பிடித்து விடுவீர்கள் என்று தெரிந்து விட்டதால் விட்டு விட்டோம் ( எல்லாம் உங்க புத்திசாலித்தனத்தில் மேல் நம்பிக்கைதான் )

10. மீந்தது - கொஞ்சம் கஷ்டப்பட்டீர்களோ? அந்த முண்டத்தில் - ந்த என்று பிடித்திருந்தால் கண்டுபிடித்திருப்பீர்கள்.

11. அம்மாடி - இந்த விடை தான் எண்ணியிருந்தோம். ஆனால் போஸ்ட் பண்ணிய பிறகு தான் ஆத்தாடி என்பதும் சரியாக வருவதை தெரிந்து கொண்டோம். ஆனாலும் விடை சொன்ன அனைவரும் அம்மாடி என்றே கூறியிருந்தது மகிழ்ச்சியளித்தது.

12. வித்து - ஆதி மூலம் இடையில் கமா போட்டிருக்க வேண்டாமோ?

13. மாருதி - சுதந்திரம் <=> விடுதலை. சுதந்திர சிறுத்தை <=> ?!

- ஸ்ரீ தேவி

No comments:

Post a Comment