ஒரு வழியா சில வலைத் துணுக்குகளுக்கு தொடுப்பு கொடுத்து விட்டேன். இந்த வலைத் துணுக்கை ஆரம்பித்த நேரத்திலிருந்து செய்ய வேண்டும், செய்ய வேண்டும் என்று நினைத்து இன்றுதான் முடிந்தது.
Sunday, February 27, 2005
Tuesday, February 22, 2005
எழுந்திருங்கள், பார்க்கலாம்!!!
கயிற்றால் கட்டிப் போடாமலே, என்னால் உங்களை நாற்காலியிலிருந்து எழ முடியாமல் செய்ய முடியும்(உங்க ஒத்துழைப்போடதான்!). ஒன்றும் இல்லை. நாற்காலியில் நான் சொல்வது போல் உட்கார்ந்தால் உங்களால் எழுந்திருக்க முடியாது. சோதித்துப் பார்த்தால்தான் நம்புவீர்கள் என்றால் கீழே உள்ளபடி செய்யுங்கள்.
படத்தில் பையன் உட்கார்ந்து இருப்பது போல் நீங்களும் உட்கார்ந்து கொள்ளுங்கள். நேராக நிமிர்ந்து உட்கார வேண்டும். நாற்காலிக்கு அடியில் உங்கள் பாதங்களை வைக்கக் கூடாது. கால் தொங்காமலும், அதே சமயம் வளையாமலும் இருக்கும்படியான நாற்காலியிலேயே(அதாவது உங்கள் உயரத்துக்கு ஏற்ற நாற்காலியிலேயே) உட்கார வேண்டும். இப்பொழுது 1)கைகளை எதிலும் ஊன்றாமல், 2)பாதங்களை பின்புறமோ, முன்புறமோ நகர்த்தாமல், 3)முன்புறம் குனியாமல், எங்கே! எழுந்திருங்கள் பார்ப்போம்!!!
என்ன? அப்படியே நாற்காலியோடு கட்டிப்போட்டாற்போல் உட்கார்ந்திருக்கிறீர்கள்!?!?
இதைப் பற்றி கேள்வி கேட்டால் எளிதாக விடை கூறிவிடுவீர்கள் என்று தெரியும். ஆனாலும் தெரியாதவர்கள் சிலர் இருக்கலாம். அவர்களும் தெரிந்து கொள்வதற்காக கேள்வி.
ஏன் உங்களால் எழுந்திருக்க முடியவில்லை?
Posted by யோசிப்பவர் at 11:08 PM 5 comments
Wednesday, February 16, 2005
மறுபடியும் கவித!?!
நண்பர் நிலா ரசிகனின் கவிதை. இது கவிதை இலக்கணத்துக்குள் வருமா என்று தெரியவில்லை. ஆனாலும் சொல்லப்பட்ட விஷயம் எனக்கு பிடித்திருந்தது.
சொந்த நாட்டு அகதிகள்
அலுவலகம் செல்ல
தாமதமானாலும் கூட
ஐந்து நிமிடம்
செய்தித்தாளில்
தலைப்புச் செய்திகள்
படிக்க நேரமிருக்கிறது...
வாரத்தில் ஆறு
நாட்கள் வேலை
வேலை என்று
அலைந்தாலும்
தவறாமல் வாரம்
இருமுறை சினிமாவுக்கு
போக நேரமிருக்கிறது...
நேரத்தை வீணாக்குவது
பிடிக்காது என்று
சொல்லிக்கொண்டு
கிரிக்கெட் போட்டி என்றால்
மட்டும் தவறாமல்
பார்க்க நேரமிருக்கிறது...
பிறந்த ஊர்
விட்டு பிழைப்புக்காக
வந்த இந்த நகரவாழ்க்கையில்
எல்லாவற்றிற்க்கும் நேரமிருந்தாலும்,
"தாத்தா பாட்டியை பார்க்க
ஊருக்கு எப்பொ போறோம்பா?"
என்று மழலை மொழியில்
கேட்கும் மகனிடம் மட்டும்
உடனே சொல்ல முடிகிறது
"அதுக்கெல்லாம் அப்பாவுக்கு
நேரமில்லடா" என்று!
- நிலா ரசிகன்
Posted by யோசிப்பவர் at 3:18 PM 0 comments
Labels: கவிதை மாதிரி?, மொத்தம்
உன் கண் உன்னை ஏமாற்றினால்?
மனதை அமைதிப்படுத்திக் கொள்ளுங்கள். சிந்தனையை அலைய விடாதீர்கள். இப்பொழுது கீழே உள்ள படத்தை ஆழ்ந்து அலசுங்கள். படத்தில் மொத்தம் எத்தனை நிறங்கள் இருக்கின்றன? என்னென்ன நிறங்கள்?
விடை சொல்ல அவசரப் படாதீர்கள். நன்றாக கவனித்து(எத்தனை முறை வேண்டுமானாலும்) விடை சொன்னால் போதும்.
Posted by யோசிப்பவர் at 2:48 PM 5 comments
Labels: காட்சிப் பிழை, படங்கள், மொத்தம்
Saturday, February 12, 2005
பகடை + பகடை = சாத்தியக்கூறு
நண்பர் தர்மா அனுப்பியுள்ள இன்னொரு கணக்கு இது.
மணியும், வர்மனும் பகடைகள் வைத்து ஒரு விளையாட்டு விளையாடுகிறார்கள். அவர்களிடம் இரு பகடைகள் இருக்கின்றன. ஒவ்வொரு பகடைக்கும் ஆறு முகங்கள். விளையாட்டு இதுதான் : பகடைகளை உருட்டிப் போடும்பொழுது இரண்டு பகடைகளிலும் ஒரே நிறம் தோன்றினால், மணி ஜெயித்ததாக அர்த்தம். இரண்டு பகடைகளிலும் வேறு வேறு நிறம் தோன்றினால் வர்மன் ஜெயித்ததாக அர்த்தம். இருவருக்குமே ஜெயிக்க சமமான சாத்தியக்கூறுகள் உள்ளன.
கேள்வி இதுதான் : ஒரு பகடையின் ஐந்து முகங்களிலும் நீல நிறம் இருக்கிறது. மீதி ஒரு முகத்தில் சிகப்பு நிறம் இருக்கிறது. அப்படியானால், இரண்டாவது பகடையில், எத்தனை முகங்களில் சிகப்பு இருக்க வேண்டும்?
ரொம்ப சின்னக் கணக்குதான். அதிக நேரம் எடுத்துக் கொள்ளாதீர்கள்.
Posted by யோசிப்பவர் at 8:04 PM 2 comments
Thursday, February 10, 2005
Monday, February 07, 2005
நான் ஏன் இப்படி முட்டாளாகி போனேன்?
உங்கள் எல்லோருக்குமே ஆங்கிலம் வாசிக்கத் தெரிந்திருக்கும்(டேய் என்ன நக்கலா?!?!). கீழே உள்ள ஆங்கில வாக்கியத்தை ஒரு முறை உரக்கப் படியுங்கள்.
FINISHED FILES ARE THE RE- SULT OF YEARS OF SCIENTIF- IC STUDY COMBINED WITH THE EXPERIENCE OF YEARS.
இப்பொழுது மறுபடியும் மேலே சென்று அந்த வாக்கியத்தில் உள்ள 'F'ஐ மட்டும் எண்ணுங்கள்(சீக்கிரம் 2 வினாடிதான் நேரம்!).
எண்ணி முடித்து விட்டீர்களா? மறுமுறை எண்ணக் கூடாது. ஒரே ஒரு தடவைதான்(முக்கா முக்கா மூணு ஆட்டமெல்லாம் கிடையாது!).
இப்பொழுது கீழே படியுங்கள்.
வாக்கியத்தில் மொத்தம் ஆறு 'F'கள் இருக்கின்றன. சாதாரணமான புத்திசாலிகள் இதில் மூன்றைக் கண்டுபிடிப்பார்கள். நீங்கள் நான்கு 'F'கள் கண்டு பிடித்திருந்தால் நீங்கள் சாதாரணத்துக்கு மேற்பட்ட புத்திசாலி. நீங்கள் ஐந்து கண்டுபிடித்திருந்தால் சட்டைக் காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளலாம். ஆறையுமே கண்டுபிடித்திருந்தால் நீங்கள் ஜீனியஸ்("ஜீனியஸ்" சரியான தமிழ் வார்த்தை என்ன?)
இதை எனக்கு மின்னஞ்சலில் அனுப்பியவர் நண்பர் தர்மா. அவருக்கு நன்றி.
அப்புறம் என்னோட முட்டாள்தனம் என்ன என்று கேட்காமல் விட்டு விட்டீர்களே. நாம் இந்த சின்ன விஷயத்தில் எல்லாம் ஏமாறுவோமா என்ற ஒரு சின்ன தலைகனத்தில் கொஞ்சம் அசட்டையாகவே இந்த வாக்கியத்தைப் படித்தேன். என்னால் காலரைத்தான் தூக்கி விட்டுக் கொள்ள முடிகிறது.
Posted by யோசிப்பவர் at 8:35 PM 1 comments
Thursday, February 03, 2005
தவறான விளக்கம்
போன துணுக்கில் நாம் பார்த்த பரிசோதனைக்கு ஒரு தவறான விளக்கம் நம்மிடையே உலவுவதாகக் கூறியிருந்தேன். அந்த தவறான விளக்கம் என்னவென்று முதலில் பார்ப்போம்.
டம்ளருக்குள் இருக்கும் ஆக்ஸிஜன் எரிந்து போவதால், எரிந்து போன ஆக்ஸிஜனின் இடத்தை இட்டு நிரப்ப தண்ணீர் உள்ளே போவதாக பல புத்தகங்களில் இந்த பரிசோதனைக்கு விளக்கம் அளிக்கபடுகின்றன. இது தவறாகும். ஆக்ஸிஜன் எரிந்து எங்கும் போகவில்லை. உள்ளேயேதான் கார்பன் டை ஆக்ஸைடாக மாறியிருக்கிறது. ஆகையால் இது தவறான விளக்கம்.
சரியான விளக்கம் : டம்ளருக்குள் எரியும் காகிதத்தை போட்டதும், டம்ளருக்குள் இருக்கும் காற்று சூடாகிறது. காற்று சூடாகும்போது, அதன் அடர்த்தி(Density) குறைகிறது. அடர்த்தி குறையும் போது அதன் கொள்ளளவும்(Volume) அதிகமாக இருக்கும்(அல்லது காற்று விரிவடையும் என்று சொல்லலாம்). தீ அணைந்தபின் உள்ளிருக்கும் காற்று குளிரடைகிறது. அப்பொழுது அதன் அடர்த்தி அதிகமாகிறது. அதாவது உள்ளிருக்கும் காற்று சுருங்குகிறது. இதனால் டம்ளருக்குள் காற்றழுத்தம்(Pressure) குறைகிறது. இது டம்ளருக்கு வெளியே இருக்கும் காற்றழுத்தத்தைவிட குறைவாயிருப்பதால், வெளியே இருக்கும் காற்றழுத்தம்(Atmosphere Pressure) தண்ணீரை டம்ளருக்குள் தள்ளுகிறது. இதனாலேயே தண்ணீர் டம்ளருக்குள் போகிறது.
இன்னமும் ஆக்ஸிஜன் எரிந்து போவதாலேயே தண்ணீர் உள்ளே போகிறதென்று நம்புபவர்கள், கீழ்கண்டவாறு அதே பரிசோதனையை செய்யவும். டம்ளருக்குள் எரியும் காகிதத்தைப் போடாமல், டம்ளரை சிறிது நேரம் கொதிக்கும் வெண்ணீரில் போட்டு பின்னர் கவுத்தவும்(உடனே). இப்பொழுதும் தண்ணீர் உள்ளேறுவதைக் காண்பீர்கள். இங்கே எதுவும் எரியவில்லை(ஆக்ஸிஜன் உட்பட). அதனால் ஆக்ஸிஜன் விளக்கம் தவறென்பது இதன் மூலம் தெளிவாகிறது.
பத்ரி பாதி கிணறு தாண்டியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். எரிந்து முடித்ததும் காற்றின் Volume குறைவாக இருக்கும் என்பதை சொன்னவர், அது ஏன் குறைவாக இருக்கிறது என்று சொல்லவில்லை. இவருக்கு அரை மதிப்பெண்.
காஸிலிங்கம் எரிவுக்கு முன்னிருக்கும் வாயுக்கள், எரிவுக்கு பின்னிருக்கும் வாயுக்கள் என்று பட்டியலிட்டு, இவற்றில் பிந்தயது, முந்தயதை விட குறைவாயிருக்கும் என்று கூறுகிறார். மேலும் அவை ஏன் அப்படியிருக்க வேண்டும் என்ரு கூறவில்லை. அவர் கூறியுள்ள பட்டியலில் முந்தயதற்கும், பிந்தயதற்கும், நிறை(mass) ஒன்றாகத்தான் இருக்கும். ஆனால் அடர்த்தி (அதுவும் வெப்ப மாறுதல்களினால்) வேறுபடும். அதனால் அவருக்கும் அரை மதிப்பெண்தான்.
உங்கள் மூளையை ரொம்ப பிராண்டி விட்டேன் என்று நினைக்கிறேன். கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.
Posted by யோசிப்பவர் at 8:24 PM 3 comments