Sunday, March 05, 2006

சார்பியல் தத்துவம் - ஓய்வு நிலை

சார்பியல் தத்துவம் - சுட்டிகள்

முன்னுரை 1.சார்பு 2.வெளி 3.ஓய்வு நிலை
--------------------------------------------------


நீங்கள் அதே இடத்திலிருக்கிறீர்கள் என்பதே தவறானது என்று சென்ற பகுதியில் பார்த்தோம். அப்படியானால் ஓய்வு நிலை(rest state) என்பதே கிடையாதா? உண்டு. எந்தப் பொருளை சார்ந்து ஓய்வு நிலை(rest state) என்று பார்க்கவேண்டும்.

எளிய உதாரணம், எல்லோருக்கும் தெரிந்த உதாரணம் ஒன்றை பார்ப்போம்.

சென்னை கோயம்பேடு பஸ்டாண்டில் மதுரை செல்லும் ஏழு மணி பஸ்ஸிலேறி அமருகிறீர்கள். உங்கள் பஸ்ஸை அடுத்து ஏழரை மணி பஸ் நிற்கிறது. இப்பொழுது இரண்டு பஸ்களுமே ஒன்றை ஒன்று பொறுத்தவரை ஓய்வு நிலையிலிருக்கின்றன, அதே போல் பேருந்து நிலையத்தை பொறுத்தவரையும் ஓய்வு நிலையிலிருக்கின்றன. இதில் ஒன்றும் குழப்பமில்லை.

இப்பொழுது உங்கள் பஸ் கிளம்பி விட்டது. கிட்டத்தட்ட விழுப்புரம் அருகே வரும்பொழுது, ஏழரை வண்டி, உங்கள் வண்டிக்கு வலது பக்கத்தில் இணையாக வருகிறது. அந்த வண்டியால் உங்கள் வண்டியை முந்தவும் முடியவில்லை, பின்னாலும் போக முடியவில்லை. இரு வண்டிகளும் ஒரே வேகத்தில் செல்கின்றன. இந்த நேரத்திலும் இரண்டு பஸ்களும் ஒன்றை ஒன்று பொறுத்தவரை ஓய்வு நிலையில்தான் இருக்கின்றன. ஆனால் அதே நேரத்தில் சென்னை பேருந்து நிலையத்தை பொறுத்தவரை அவையிரண்டும் ஓய்வு நிலையிலில்லை. ஏனென்றால் ஓய்வு நிலை சார்பானது.

நீங்கள் உண்மையிலேயே அறிவியல் ஆர்வம் உள்ளவராயிருந்தால் இப்பொழுது உங்களுக்கு நியூட்டனின் இயக்க விதி ஞாபகம் வர வேண்டும். "ஒரு பொருளின் மீது புறவிசைகள் செயல்படாதபொழுது, அந்தப் பொருள் ஓய்வு நிலையிலோ, அல்லது நேர்கோட்டுப் பாதையிலான சீரான இயக்க நிலையிலோ இருக்கும்". இப்பொழுது நமக்கு ஓய்வு நிலையைப் பற்றி அது சார்பானது என்று தெரிந்து விட்டதால், அடுத்தாக இயக்க நிலையைப் பற்றி சந்தேகம் வரும். வரவேண்டும். அதைப் பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம்.
- மீண்டும் பார்(அறு)ப்போம்.

No comments:

Post a Comment