Thursday, March 30, 2006

சார்பியல்?!?!

சார்பியல் தத்துவத்துக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லைன்னா நம்ப மாட்டேங்றாங்கப்பா!!!

Tuesday, March 28, 2006

தமிழ்மணம் - ஒரு சர்வே!!!

தேர்தல் சீசனா!? அதான் இப்படி!






அட! வோட்டு பெட்டி!!!

தமிழ்மணத்தில் நீங்கள் விரும்பி படிக்கும் பகுதி எது?




அரசியல்/சமூகம்
சிறுகதை/கவிதை
சினிமா/பொழுதுபோக்கு
விளையாட்டு/புதிர்
அனுபவம்/நிகழ்வுகள்
நூல்நயம்/இதழியல்
அறிவியல்/நுட்பம்
செய்தி விமர்சனம்
வணிகம்/பொருளாதாரம்
ஆன்மீகம்/இலக்கியம்
நகைச்சுவை/நையாண்டி
ஓவியம்/நிழற்படம்
விவாத மேடை
பதிவர் வட்டம்
பொதுவானவை





சார்பியல் தத்துவம் - ஒளி-II

சார்பியல் தத்துவம் - சுட்டிகள்

முன்னுரை 1.சார்பு 2.வெளி 3.ஓய்வு நிலை 4.இயக்கம் 5.ஒளி 6.ஒளி-II
--------------------------------------------------


சென்ற பகுதியின் முடிவில் ஏற்பட்ட முரண்பாடு ஏன் வந்தது? இந்தப் புதிர் வெகு நாட்கள் விஞ்ஞானிகளின் தூக்கத்தை கெடுத்தது.

இந்த முரண்பாடு உண்மையில் முற்றிலும் தவறாக கற்பித்து கொண்ட தர்க்க வாதத்தினால் விளைந்தது. நமது ரயில் எடுத்துகாட்டில் முழுதும் கற்பனையை நம்பி மட்டுமே செயல்பட்டதால் வந்த வினை. இது போன்ற நிலைகளில் ஒளி எப்படி செயல்படும் என்று சோதனை செய்யாமல் விட்டதன் விளைவு.

இதை எப்படி சோதிப்பது? இவ்வளவு வேகத்தை எப்படி அடைய முடியும்? இவையே அப்பொழுது சோதனை யோசனைகளுக்கு முட்டுகட்டை இட்டன.

ஓடும் பூமியில் நாம் இருக்கிறோம். பூமி சூரியனை சுற்றி வரும் வேகம் வினாடிக்கு 30 கி.மீ. நமக்கு தெரிந்தவற்றுள் இது குறிப்பிடத்தக்க அதிகமான வேகம்தான். பூமி தன்னைத்தானே சுற்றி கொள்ளும் அச்சு வழி சுழற்சியின் வேகம் வினாடிக்கு சுமார் 1/2 கி.மீதான். ஆகவே குறுகிய நேரத்துக்கு இதை புறக்கணிக்க தக்கதாய் கொள்ளலாம். ஆகவே பூமியினுள் ஒளி பரவும் விதத்தை ஆராயும் நாம், உண்மையில் வினாடிக்கு 30கி.மீ வேகத்தில் செல்லும் ஒரு வண்டியினுள் அதை ஆராய்கிறோம்.

ஆனால் நாம் எடுத்துகொண்ட ரயிலுக்கு இணையாக நமது பூமியை கருதுவது சரிதானா? ரயில் நேர்கோட்டு(linear) பாதையில் செல்கிறது. ஆனால் பூமியின் இயக்கமோ சுழற்பாதை(angular) இயக்கமல்லவா? எனினும் இப்படி எடுத்து கொள்வதில் பெரிய தவறொன்றுமில்லை. ஏனென்றால் இதனால் வரும் பிழை கணக்கிலெடுத்து கொள்ள தேவையில்லாதபடிக்கு அவ்வளவு அற்பமானது. இப்பொழுது ஓடும் ரயிலில் எப்படி ஒளி வேறு வேறு திசைகளில் வேறு வேறு வேகங்களில் செல்லும் என்று எதிர்பார்த்தோமோ அது போல பூமியிலும் வேறு வேறு திசைகளில் வேறு வேறு வேகங்களில் செல்கிறதா என்று நாம் சோதிக்க வேண்டும்.

19ம் நூற்றாண்டை சேர்ந்த சிறந்த விஞ்ஞானி ஆல்பர்ட் மைக்கெல்சன், 1881இல் இத்தகைய சோதனை ஒன்றை செய்தார். வெவ்வேறு திசைகளில் ஒளி செல்லும் வேகங்களை அவர் மிகத் துல்லியமாக அளந்தார். இவ்வளவு வேகத்தில் ஏற்படும் மிக மிக சொற்பமான வேறுபாடுகளையும்(differences) கண்டுபிடிப்பதற்கு மைக்கெல்சன் மிகவும் கறாரான ஒரு ஏற்பாட்டை அமைத்திருந்தார். அதனால் அவருடைய சோதனை மிகவும் துல்லியமாக இருந்தது.



மைக்கெல்சனின் சோதனை திரும்பத் திரும்ப வேறு வேறு இடங்களில், வேறு வேறு சூழ்நிலைகளில் செய்து பார்க்கப் பட்டது. ஆனால் முடிவு அப்போதைய விஞ்ஞானிகளின் கருத்தோட்டத்துக்கு மாறானதாய் இருந்தது; அதாவது ஒளியின் வேகம் அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக ஓடும் தொகுப்பினுள்( frame - இங்கே நமது பூமி) எல்லா திசைகளிலும் ஒரே மாதிரியாய் இருந்ததது.

இந்த விஷயத்தில் ஒளி பரவுதல் நமது துப்பாக்கி குண்டு உதாரணத்தில் குண்டின் பாய்ச்சலைப் போல் இருக்கிறது. அதாவது ஓடும் தொகுப்பின்(frame - இங்கே நமது ரயில்) சுவர்களை சார்ந்து ஒளி எல்லா திசைகளிலும் ஒரே வேகத்தில்தான் செல்லும்.

பிரச்சனை தீர்ந்ததா? இன்னும் இல்லை. ஒன்றை சார்ந்து ஒன்று ஓடி இயங்கி கொண்டிருக்கும் தொகுப்புகள்(உதா-நமது பஸ்கள் வேறு வேறு வேகங்களில் சென்றால் அவை ஒன்றை சார்ந்து ஒன்று இயங்கி கொண்டிருக்கின்றன), வெவ்வேறு வேகங்கள் கொண்டதாய் இருக்க வேண்டும். ஆனால் ஒளியின் வேகம் மட்டும் எல்லா தொகுப்புகளிலும்(frames) அதை சார்ந்து அதே 3,00,000 கி.மீ/வினாடியாகவே இருக்கிறது. ஆக ஒளியின் வேகம் சார்பானதாய் இல்லாமல், சார்பிலா தனி முதலாய் இருக்கிறது!
குழப்பமாக இருக்கிறதல்லவா?


- மீண்டும் பார்(அறு)ப்போம்.

Sunday, March 26, 2006

சங்க கவிகளும் சினிமா பாடல்களும் - I

கொஞ்சம் வித்தியாசமாக ஏதாவது முயற்சி பண்ணலாமே என்று இதை ஆரம்பிக்கிறேன். நமது சினிமா பாடல்களில் அவ்வப்பொழுது சில சங்கப் பாடல்கள் எட்டிப் பார்ப்பதுண்டு(உபயம் - இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான்). அந்த சங்கப் பாடல்களையெல்லாம் இங்கே திரட்டலாம் என்று நினைக்கிறேன். வெறுமனே பாடல்களை மட்டும் போடாமல் அந்த சங்கப்பாடல் பற்றிய தெரிந்த தெரியாத விஷயங்களையும் இங்கே நாம் அலசுவோம்.

முதலில் ஏ.ஆர்.ரஹ்மானே ஆரம்பிக்கட்டும்!


"கன்று முண்ணாது கலத்தினும் படாது
நல்லான் றீம்பா னிலத்துக் காஅங்
கெனக்கு மாகா தென்னைக்கு முதவாது
பசலை யுணீஇயர் வேண்டும்
திதலை யல்குலென் மாமை கவினே
"


இந்தப் பாடல் இடம்பெற்ற படம் எதுவென்று உங்களில் நிறைய பேருக்கு தெரிந்திருக்கும். அதனால் அதையும் நீங்களே சொல்லுங்கள். அப்புறம் இந்தப் பாடலை எழுதியவர் யார்? இந்த பாடலுக்கு என்ன அர்த்தம்? இதையெல்லாம் கண்டுபிடிச்சு சொல்லுங்க. தெரியாதவங்க தெரிஞ்சுக்கட்டும்.

எனக்கும் அதிகமான பாடல்கள் தெரியாது. வாசகர்களிடமிருந்தும் இப்படிப்பட்ட பாடல்களை எதிர்பார்க்கிறேன். நீங்கள் புதிதாக ஏதேனும் பாடலை இந்த திரட்டில் சேர்க்க விரும்பினால் அதை ஒரு தனி பின்னூட்டமாக இதில் இடுங்கள். அடுத்த பதிவில் அந்த பாடல் இடம்பெறும்.

Wednesday, March 22, 2006

பல்லவியை கண்டுபிடிங்க?

கீழே சில பாடல்களின் இடைவரிகளை கொடுத்திருக்கிறேன். அவற்றிலிருந்து அந்த பாடல்களின் பல்லவியை(முடிந்தால் படத்தையும்) கண்டுபிடியுங்கள். பாடல்களை விரைவாக கண்டுபிடிக்கும் முதல் மூன்று பேருக்கு, பல்லவி பூஷன் விருது வழங்கப்படும். இந்த தடவை எல்லாமே ஈஸியான பாடல்கள்தான்(விருதை முன்னிட்டு!!!)


1) பள்ளிக்கூட பாடமறந்து பட்டாம்பூச்சி தேடினோம்...

2) பட்டமரத்து மேல எட்டிபாக்கும் ஓனான்போல வாழ வந்தோம்...

3) உன் விழி என் இமை மூட வேண்டும்...

4) அழகிய கோலங்கள், அதற்கென தாளங்கள். ஏதேதோ நினைவுகள் தினசரி கடலலை போல்...

5) ஒரு ஓவியகவிதை கண்ணீரினில் நனையும்...

6) தனிமைக்கே விடுமுறையா. நாம் இதழ் சேர்ப்போம் முதல் முறையா...

7) என் கண் பார்த்தது, என் கை சேருமோ...

8) பெண்ணுடம்பில் காதல் எங்கு உள்ளது?

9) பாய்விரித்து பாவை பார்த்த காதல் இன்பம் மாயமா?

10) கண் கெட்டபின்னே சூரிய உதயம் எந்தப் பக்கமானால் எனக்கென்ன...

11) தேவதையை காண்பதற்கு வழியுமில்லை...

12) மானத்தின் மானத்தை வாங்கி விட்டான்...

Tuesday, March 21, 2006

சார்பியல் தத்துவம் - ஒளி

சார்பியல் தத்துவம் - சுட்டிகள்

முன்னுரை 1.சார்பு 2.வெளி 3.ஓய்வு நிலை 4.இயக்கம் 5.ஒளி
--------------------------------------------------
நமக்கு தெரிந்தவற்றுள் அதிகபட்ச வேகமுடையது ஒளிதான் என்பது நமக்கெல்லாம் தெரியும்(டாங்கியான்களை எல்லாம் இப்பொழுது கணக்கிலெடுக்காதீர்கள்! அவை கற்பனையானது). ஒளியின் வேகம் வினாடிக்கு 3 லட்சம் கிலோமீட்டர்கள். இந்த வேகத்தை நம்மால் கற்பனை செய்தே பார்க்க முடியவில்லை. அப்படிபட்ட வேகத்தில் செல்லும் ஒளியின் வேகம் மாறாதது என்றும் நமக்கு தெரியும்.

இங்கே மாறாதது என்பதற்கு சிறு விளக்கம் தேவை. ஒரு ஒளி கற்றையின் முன் ஒரு கண்ணாடி த்டுப்பை வைப்போம். வெற்றிடத்தைவிட கண்ணாடியினுள் ஒளியின் வேகம் கொஞ்சம் குறைவு. அதனால் சிறிது மெதுவாக செல்லும். ஆனால் கண்ணாடி தடுப்பை கடந்ததும் மீண்டும் தனது 3,00,000 கி.மீ வேகத்தையடைந்துவிடும். அதாவது ஒளியின் வேகம் ஒரே ஊடகத்துக்குள் மாறாததாயிருக்கும். அதை கூட்டவோ, குறைக்கவோ முடியாது.

இப்பொழுது ஒரு சின்ன புதிர். பயங்கரமான வேகத்தில் நேர்கோட்டில்(பூமியை சாராத நேர்கோடு) செல்லும் ஒரு ரயிலை கற்பனை செய்து கொள்ளுங்கள். அதன் வேகம் 2,40,000 கி.மீ/வினாடி. அதாவது ஒளியின் வேகத்தில் பத்தில் எட்டு பங்கு. இந்த ரயிலின் கடைசி பெட்டியில் ஒரு மின்விளக்கு இருக்கிறது. நீங்கள் முதல் பெட்டியில் இருக்கிறீர்கள். இப்பொழுது மின்விளக்கை போடுகிறோம். இப்பொழுது ஒளி உங்களை ரயிலை சார்ந்து, எவ்வளவு வேகத்தில் வந்தடையும்?

ஒளியின் வேகம் மாறாதது. அதனால் 3,00,000-2,40,000= 60,000கி.மீ வேகத்தில் ரயிலை சார்ந்து வந்திருக்க வேண்டும். அதாவது ரயிலின் முதல் பெட்டியை ஒளி விரட்டி சென்று பிடிக்க வேண்டும். இதே போல் ரயில் வண்டியின் முதல் பெட்டியில் விளக்கு இருந்து, நீங்கள் கடைசி பெட்டியிலிருந்தால் நிலைமை என்ன? அப்பொழுது ஒளி ரயில் பெட்டியை சார்ந்து 3,00,000+2,40,000=5,40,000 கி.மீ வேகத்தில் உங்களை வந்தடைய வேண்டும். அதாவது ரயிலும் ஒளியும் ஒன்றை நோக்கி ஒன்று ஓடி வர வேண்டும்.

நமது ரயில் வண்டியில் இப்பொழுது மின்விளக்குக்கு பதிலாய், துப்பாக்கியால் சுடுகிறோம் என்று வைத்து கொள்ளுங்கள். சார்பியல் தத்துவப்படி ரயில் வண்டியை சார்ந்து, குண்டு முதல் பெட்டியிலிருந்து கடைசிக்கு சுட்டாலும், கடைசி பெட்டியிலிருந்து முதலுக்கு சுட்டாலும் ஒரே வேகத்தில்தான் செல்லும். அதாவது எல்லா திசைகளிலும் ஒரே வேகத்தில்தான் செல்லும். இது நமக்கு தெரியும்.

ஆனால் ஒளி மட்டும் ரயிலை சார்ந்து வேறு வேறு திசைகளில் வேறு வேறு வேகங்களில் செல்கிறது. இது சார்பியல் கோட்பாட்டை உடைப்பதாக இருக்கிறதல்லவா?

உண்மையில் ஒளி சார்பியல் தத்துவத்துக்குள் அடங்காததா? விடை அடுத்த பகுதியில்.


- மீண்டும் பார்(அறு)ப்போம்.

Saturday, March 18, 2006

நிழல்கள்

Thursday, March 16, 2006

ஒரேரரர கொழப்பமா இருக்குல்ல?!?!



எது மேல? எது கீழே?

Tuesday, March 14, 2006

பெருக்கல் தெரியுமா?

"யாரைப் பார்த்து என்ன கேள்வி கேட்கிறாய்?" அப்படினெல்லாம் கோபப்படாதீங்க. உண்மையிலேயே உங்களுக்கு பெருக்கத் தெரியுமா? எங்கே பார்ப்போம். ஒன்னுமில்லை! சாதாரணமா இரண்டு எண்களை பெருக்க வேண்டும். ஆனால் அதை கணினி செய்ய வேண்டும். கணிமொழி அறிந்தவர்கள் "C"யில் எழுதலாம். மற்றவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று ஒரு Algorithm போல் கொடுக்கலாம். அப்புறம் ஒரு முக்கியமான விஷயம். நீங்கள் அந்த இரு எண்களையும் பெருக்க x குறியையோ, + குறியையோ உபயோகிக்க கூடாது. அதாவது இந்த பெருக்கலில் பெருக்கல் விதிகளையோ, கூட்டல் விதிகளையோ பயன்படுத்தகூடாது(புரியும் என்று நினைக்கிறேன்). இப்போ பெருக்குங்க பார்ப்போம்.


பி.கு.:
இதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட பதில்கள் உண்டு.

Sunday, March 12, 2006

சார்பியல் தத்துவம் - இயக்கம்

சார்பியல் தத்துவம் - சுட்டிகள்

முன்னுரை 1.சார்பு 2.வெளி 3.ஓய்வு நிலை 4.இயக்கம்
--------------------------------------------------
ஓய்வு நிலையே சார்பானது எனும்போது, அதற்கு நேர்மாறான இயக்க நிலையும் சார்பாகவே இருக்கும் என்பதை புரிந்து கொள்வது கடினமல்ல.

இதையும் நமது பழைய உதாரணத்தை கொண்டே விளக்கலாம். ஏழு மணி வண்டியில் நீங்கள் செல்கிறீர்கள். ஏழரை மணி வண்டியில் உங்கள் நண்பர் வருகிறார். விழுப்புரம் அருகே இரு வண்டிகளும் இணையாக வரும்பொழுது, உங்கள் இருவர் ஜன்னல்களும் நேருக்கு நேராக இருக்கிறது. இப்பொழுது உங்கள் நண்பர் உங்கள் கையிலிருக்கும் எதோ ஒரு பொருளை கேட்கிறார். அதை நீங்கள் உங்கள் ஜன்னல் வழியாக அவர் ஜன்னலை நோக்கி நேர் கோட்டில் எறிகிறீர்கள். காற்று தடையை புறக்கணித்துவிட்டால் உங்கள் பொருள் உங்கள் நண்பர் கைக்கு எளிதாக கிடைத்து விடும், இரண்டு பேருந்துகளும் நின்று கொண்டிருக்கும்பொழுது எவ்வளவு எளிதாக கிடைக்குமோ, அவ்வளவு எளிதாக.

சரி. இப்பொழுது பொருள் சென்ற பாதை எப்படிபட்டது? நேர்கோட்டு பாதையா(linear path)? பரவளைய பாதையா(Parabolic path)? பரவளைய பாதை என்றுதான் முக்கால்வாசிபேர் சொல்வீர்கள். ஆனால் இப்பொழுது உங்களுக்கு சார்பியல் பற்றி கொஞ்சம் தெரியுமாதலால் பதில் சொல்லுமுன் கொஞ்சம் யோசியுங்கள்.

உண்மையில் பொருள் சென்ற பாதை சார்பானது. பேருந்துகள் செல்லும் சாலையை பொறுத்து பொருள் சென்றது பரவளைய பாதைதான்(Parabolic path). ஆனால் இரண்டு பேருந்துகளையும் பொறுத்தவரை அது சென்ற பாதை நேர்கோடானதே(linear). நேர்கோட்டு பாதையில் இயங்கும் ஒரு பொருளுக்கு பொருந்தும் எல்லா விஞ்ஞான விதிகளும்(இங்கே இது முக்கியம், எல்லா விஞ்ஞான விதிகளும்), இரண்டு பேருந்துகளையும் சார்ந்து நமது பொருளுக்கும் பொருந்தும்.

ஆக இயக்கமும் சார்பானதாகி விட்டது. சார்பியல் தத்துவத்துக்கு ரொம்பவும் கண்ணாமூச்சி காட்டிய கதாநாயகன் ஒன்று உண்டு. அது ஒளி.


- மீண்டும் பார்(அறு)ப்போம்

மறுபடி ஒரு மன்னிப்பு

போன பதிவில் பதிந்த படங்களை அனுப்பியவர் கீதா அல்ல. கணேஷ். மெய்ல் ஐடியால் குழம்பி விட்டேன். மன்னிக்கவும்.

Tuesday, March 07, 2006

தெரு ஓவியங்கள்

நமது தோழி கீதா இரு தினங்களுக்கு முன் அனுப்பிய படங்கள் இவை. சில படங்களை மட்டும் இங்கே பதிகிறேன்.







Sunday, March 05, 2006

சார்பியல் தத்துவம் - ஓய்வு நிலை

சார்பியல் தத்துவம் - சுட்டிகள்

முன்னுரை 1.சார்பு 2.வெளி 3.ஓய்வு நிலை
--------------------------------------------------


நீங்கள் அதே இடத்திலிருக்கிறீர்கள் என்பதே தவறானது என்று சென்ற பகுதியில் பார்த்தோம். அப்படியானால் ஓய்வு நிலை(rest state) என்பதே கிடையாதா? உண்டு. எந்தப் பொருளை சார்ந்து ஓய்வு நிலை(rest state) என்று பார்க்கவேண்டும்.

எளிய உதாரணம், எல்லோருக்கும் தெரிந்த உதாரணம் ஒன்றை பார்ப்போம்.

சென்னை கோயம்பேடு பஸ்டாண்டில் மதுரை செல்லும் ஏழு மணி பஸ்ஸிலேறி அமருகிறீர்கள். உங்கள் பஸ்ஸை அடுத்து ஏழரை மணி பஸ் நிற்கிறது. இப்பொழுது இரண்டு பஸ்களுமே ஒன்றை ஒன்று பொறுத்தவரை ஓய்வு நிலையிலிருக்கின்றன, அதே போல் பேருந்து நிலையத்தை பொறுத்தவரையும் ஓய்வு நிலையிலிருக்கின்றன. இதில் ஒன்றும் குழப்பமில்லை.

இப்பொழுது உங்கள் பஸ் கிளம்பி விட்டது. கிட்டத்தட்ட விழுப்புரம் அருகே வரும்பொழுது, ஏழரை வண்டி, உங்கள் வண்டிக்கு வலது பக்கத்தில் இணையாக வருகிறது. அந்த வண்டியால் உங்கள் வண்டியை முந்தவும் முடியவில்லை, பின்னாலும் போக முடியவில்லை. இரு வண்டிகளும் ஒரே வேகத்தில் செல்கின்றன. இந்த நேரத்திலும் இரண்டு பஸ்களும் ஒன்றை ஒன்று பொறுத்தவரை ஓய்வு நிலையில்தான் இருக்கின்றன. ஆனால் அதே நேரத்தில் சென்னை பேருந்து நிலையத்தை பொறுத்தவரை அவையிரண்டும் ஓய்வு நிலையிலில்லை. ஏனென்றால் ஓய்வு நிலை சார்பானது.

நீங்கள் உண்மையிலேயே அறிவியல் ஆர்வம் உள்ளவராயிருந்தால் இப்பொழுது உங்களுக்கு நியூட்டனின் இயக்க விதி ஞாபகம் வர வேண்டும். "ஒரு பொருளின் மீது புறவிசைகள் செயல்படாதபொழுது, அந்தப் பொருள் ஓய்வு நிலையிலோ, அல்லது நேர்கோட்டுப் பாதையிலான சீரான இயக்க நிலையிலோ இருக்கும்". இப்பொழுது நமக்கு ஓய்வு நிலையைப் பற்றி அது சார்பானது என்று தெரிந்து விட்டதால், அடுத்தாக இயக்க நிலையைப் பற்றி சந்தேகம் வரும். வரவேண்டும். அதைப் பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம்.
- மீண்டும் பார்(அறு)ப்போம்.