Saturday, June 05, 2010

நோநோகிராம் - புதிர் வகை அறிமுகம்

உங்களுக்கு சுடோகு பிடிக்குமா? அப்படியென்றால் இந்த நோநோகிராம்(Nonogram) புதிரும் உங்களுக்கு பிடிக்க 90% வாய்ப்பிருக்கிறது. சுடோகு பிடிக்காத பலருக்கும் கூட இந்தப் புதிர் பிடிக்கும். இதுவும் ஒரு ஜப்பான் இறக்குமதி.


சுடோகுவில்
நமக்கு ஆரம்ப நிலைக் கட்டம் கொடுக்கப்படுவது போலவே,
இங்கும் நமக்கு சில கட்டங்களும் எண்களும் கொடுக்கப்படுகிறது.உதாரணத்திற்கு இந்தக் கட்டங்களைப் பாருங்கள். 5x5 கட்டங்கள் இவை. இவைகளுக்கு மேலாகவும் , இடதுபுறத்திலும் Tabular Column தலைப்புகள் போல, சில எண்கள் கொடுக்கப் பட்டிருக்கின்றன. இவற்றுக்கு என்ன அர்த்தம்? எளிதாக விளக்குவதற்காக நான் 5x5=25 கட்டங்களுக்கும்
பெயர் வைத்துக் கொள்கிறேன். புதிர், எண்கள் சம்பந்தப்பட்டது என்பதால் ஆங்கில எழுத்துக்களை பெயர்களாக உபயோகிப்போம்.

சரி! பெயர் வைத்தாகிவிட்டது. இப்பொழுது முதல் columnஐ(a,f,k,p,u) பார்ப்போம். அதன் தலைப்பில் 3
என்றிருக்கிறது. இதற்கு அர்த்தம் அந்த
Columnத்தில் தொடர்ச்சியாக மூன்று கட்டங்கள் மட்டும் கறுப்படிக்க வேண்டும் என்று அர்த்தம். பிரிண்ட் அவுட் எடுத்து கொண்டீர்களென்றால் பென்சில் வைத்து கறுப்படிக்கலாம். மொத்தம் ஐந்து கட்டங்களில், 3 கட்டங்கள் மட்டும்தான் கறுப்பு, அதுவும் தொடர்ச்சியாக. அது எந்தெந்த கட்டங்கள் என்று கண்டுபிடிக்க வேண்டியது தான் நமது வேலை.

சரி கண்டுபிடிக்கலாம். இன்னொரு சந்தேகம். நான்காவது columnத்தின்(d,i,n,s,x) தலைப்பு (1 1) என்றிருக்கிறதே? அப்படியென்றால்? நான்காவது columnத்தில், ஒரு கறுப்பு கட்டம் வருகிறது. அதற்குப்பின் குறைந்தபட்சம் ஒரு கட்டம் விட்டு, (கவனிக்கவும் குறைந்தபட்சம்) இன்னொரு கறுப்பு கட்டம் வருகிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், இரண்டு கருப்பு கட்டங்கள். இரண்டுக்கும் இடைவெளி குறைந்தபட்சம் ஒரு வெள்ளை கட்டம்.

ஓகே! இப்போழுது இடது புறம் இருக்கும் எண்கள். அவையும் coulmn தலைப்புகள் போல்தான், row தலைப்புகள்.

முதல் row(a,b,c,d,e) தலைப்பு 1 சொல்லும் அர்த்தம், அந்த முதல் rowல் ஒரே ஒரு கருப்புக் கட்டம்தான் இருக்கிறது. மூன்றாவது row(k,l,m,n,o) தலைப்பு (1 3). இதன் அர்த்தம், மூன்றாவது rowல் ஒரு கட்டம் கருப்பு. அதற்குப் பிறகு குறைந்தபட்சம் ஒரு கட்டம் இடைவெளி விட்டு, மூன்று கட்டங்கள் தொடர்ச்சியாகக் கருப்பு. இங்கே கவனிக்க வேண்டியது, ஒரு தனிக் கருப்பு கட்டத்துக்கு, வலது புறமாகத்தான், அடுத்து தொடர்ச்சியாக வரவேண்டிய மூன்று கருப்புக் கட்டங்களும் வரவேண்டும்.

சரி. ஏதோ ஒரு மாதிரி புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். நாம் உதாரணத்திற்கு எடுத்துக் கொண்ட கட்டத்தை கொஞ்சம் solve செய்தால் இன்னும் நன்றாகப் புரியும்.

முதலில் முதல் columnஐ கவனிக்கலாம். அந்த வரிசையில் மொத்தம் மூன்று கருப்பு தொடர்ச்சியாக. இந்த வரிசையில் மொத்த கட்டங்களே ஐந்து கட்டங்கள்தான். ஐந்தில் மூன்று தொடர்ச்சியான கருப்பு கட்டங்கள் என்றால், இந்த வரிசையில் நடுக்கட்டம்(k) கண்டிப்பாக கருப்பாகத்தான் இருக்க முடியும். அதைக் கருப்பாக்குவோம்.

இப்பொழுது மூன்றாவது rowஐ கவனியுங்கள். (1
3). இந்த வரிசையில் இப்பொழுது முதல் கட்டம் கருப்புக் கட்டமாகி விட்டது. (1 3)இல் 1 என்பது முடிவாகிவிட்டது. இதற்கு அடுத்த கட்டம்(l) கண்டிப்பாக கருப்பாக இருக்க முடியாது. கண்டிப்பாக இடைவெளி இருக்க வேண்டுமே. அதனால் இந்த வரிசையில் இரண்டாவது கட்டத்தை x என்று குறியிடுவோம்(கண்டிப்பாக கருப்பு கிடையாது என்ற அர்த்தத்தில்).

மூன்றாவது rowல் இப்பொழுது மீதியிருப்பது மூன்றே கட்
டங்கள். மூன்றாவது rowல் இன்னும் தீர்வு காணப்படாத clueவும் 3. ஆக மீதியிருக்கும் மூன்று கட்டங்களும்(m,n,o) கருப்புதான். அவற்றில் கருப்படியுங்கள்.

அடுத்து நாம் நான்காவது columnஐ
குறி வைக்கலாம்(d,i,n,s,x). இதன்
clueக்கள் (1 1).
அதாவது இந்த வரிசையில் எந்த இடத்திலும் தொட
ர்ச்சியான கருப்பு கட்டங்கள் இல்லை. இதில் நமக்கு மூன்றாவது கட்டம் n கருப்பு என்பது ஏற்கனவே முடிவாகிவிட்டது. தொடர்ச்சி இல்லை என்பதால் இந்தக் கட்டத்தின் முன்/பின் இரு கட்டங்களும்(i,s) கருப்பில்லை என்பது தெளிவு. அவற்றில் x குறியிடலாம்.

இப்பொழுது நான்காவது rowஐப்(p,q,r,s,t) பாருங்கள். இதன் குறிப்பு(clue) 3 மட்டும்தான். மூன்று தொடர்ச்சியான கருப்புக் கட்டங்கள். இந்த
வரிசையில் நான்காவது கட்டம்(s) ஏற்கனவே x குறியிட்டிருப்பதால், கண்டிப்பாக வெள்ளைதான். இதன் மூலம்
தெளிவாவது, 3 தொடர்ச்சியா
ன கருப்புக் கட்டங்கள் என்பது இந்த நாலாவது கட்டம் xக்கும் முன்புதான் வரமுடியும். ஏனென்றால் அதற்குப் பிறகு இருப்பது ஒரே ஒரு கட்டம்(t) மட்டுமே. இங்கே xக்கு முன்பு இருப்பது மூன்றே கட்டங்கள்தான்(p,q,r). இவற்றை கருப்பாக்கலாம்.

அடுத்து கொஞ்சம் columnகளை கவனிப்போம். முதலில் முதல் column(a,f,k,p,u). இந்த வரிசையில் மூன்றாவதும், நான்காவதும் கருப்பு என்பது உறுதி
செய்யப்பட்டுவிட்டது. இந்த வரிசைக்கு clue
3 மட்டும்தான். தொடர்ச்சியாக மூன்று கட்டம் எனும்பொழுது fkpஆக இருக்கலாம், அல்லது kpuஆக இருக்கலாம். எப்படியிருந்தாலும் a கருப்பு கிடை
யாது என்பது உறுதி. அதில் x போட்டுவிடலாம்.
அடுத்த column போகலாம்(b,g,l,q,v). இந்த இரண்டாவது columnத்தின் குறிப்பு 2 மட்டுமே. இதில் மூன்றாவது கட்டம்(l) வெள்ளை என்பதும், அதற்கடுத்த q கருப்பு என்பதும் முடிவாகிவிட்டது. அதனால் lக்கு மேலேயுல்ல gயும் bயும் நிச்சயம் கருப்பாக இருக்க முடியாது. மேலும் மீதியுள்ள v கருப்பாகத்தான் இருக்க வேண்டும் என்பதும் தெளிவாகிறது. ஸோ, b,g இரண்டிலும் x போட்டுவிட்டு vஐ கருப்பாக்கலாம்.

அடுத்து மூன்றாவது column(c,h,m,r,w). இங்கும் முதல் column போன்ற scenarioதான். அதனால் அதேபோல் c கருப்பு கிடையாது என்று முடிவு செய்து x போடுங்கள்.

இப்பொழுது கடைசி columnஐ பாருங்கள்(e,j,o,t,y).o கருப்பு என்றும் t வெள்ளை என்பதும் உறுதியாகத் தெரிகிறது. இந்த வரிசைக்கான குறிப்பு 3 மட்டும்தான். அப்படியென்றால் தொடர் கருப்புக் கட்டங்கள் tக்கு மேலேயேதான் இருக்க முடியும். e,j இரண்டையும் கருப்பாக்கிவிட்டு, yஇல் x மார்க் செய்து விடவும்.

அடுத்து rowக்களை கவனிக்கலாம். முதல் row(a,b,c,d,e). இதன் குறிப்பு எண் 1. இந்த வரிசையில் ஏற்கெனவே e கருப்படித்தாயிற்று. அதனால் மீதியிருக்கும் dயில் x போட்டு விடலாம்.

இதே போல் இரண்டாவது row (f,g,h,i,j). இதுவும் முந்தய rowஐ போன்றதே. fலும் hலும் x போட்டு விடலாம்.

இப்பொழுது கடைசியாக கடைசி row(u,v,w,x,y). இதன் குறிப்பு எண் 4. இப்பொழுது
இந்த வரிசையில் மீதியிருக்கும் கட்டங்களும் நான்கே கட்டங்கள்தான். y ஏற்கனவே வெள்ளை கட்டம் என்பது முடிவாகிவிட்டது. அதனால் அதை மட்டும் விட்டு விட்டு மற்ற நான்கு கட்டங்களையும் கருப்பாக்கிவிடலாம்.

இந்த எளிய நோநோகிராம் புதிரை இப்பொழுது முழுதும் அவிழ்த்தாகிவிட்டது.

5x5 கட்டங்கள் அறிமுகத்துக்கு எளிமையாக இருப்பதற்காக எடுத்துக் கொண்டேன். கீழே சில பெரிய கட்டங்களும் கொடுத்திருக்கிறேன். அவற்றைத் தீர்க்க முடிகிறதா பாருங்கள்.


10x10


15x15


20x20


25x25

Thursday, May 13, 2010

கவிதை உறவு போட்டியில் பரிசு

நண்பர்களே,


கவிதை உறவு இலக்கிய இதழ் நடத்திய போட்டியில், சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான பிரிவில், எனது புத்தகம் ”௨௲௧௧ - ஒரே ஒரு காலயந்திரத்தில்” மூன்றாவது பரிசு வென்றிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

போட்டியில் வென்ற மற்ற நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்!!!

Friday, March 05, 2010

போரடிக்குது போரடிக்குது போரடிக்குது போரடிக்குது

பயங்கரமா போரடிக்குது! எவ்வளவு நேரம்தான் சாமியார் பத்தின பதிவுகள் படிக்கிறது?! ’I am bored'னு கூகிள்லே தேடினப்ப கிடைச்ச சில அருமையான(?!?) பொழுதுபோக்குகள்.

1) பென்குயினைப்(Penguin) பற்றி ஒரு இரண்டு நிமிடம் தொடர்ந்தார்ப் போல் நினைக்காமல் இருக்க முயலவும். பதிவர்கள் நித்யானந்தம் பற்றி நினைக்காமல் இருக்க முயலலாம்!!

2)ஒரு வார்த்தையை திரும்பத் திரும்ப உரக்கச் சொல்லவும். ஒரு நிலையில் அந்த வார்த்தைக்கான பொருள் அர்த்தமில்லாமல் போவதை உணரலாம். உதா : இந்தப் பதிவின் தலைப்பு.

3) இமைகளை அழுத்தமாக மூடி மூடி திறவுங்கள்(கதவை அல்ல). பிறகு கண்களை இறுக்கமாக மூடிக் கொள்ளுங்கள். உள்ளுக்கு பலவிதமான ஒளிப் புள்ளிகள் விளையாடுவது தெரியும்.

4) அலுவலகத்தில் நிறைய பேர் உங்களைப் போலவே இருந்தால் இப்படி செய்யலாம்.

5) அலுவலக போர்டிலோ போட்டோஷாப்பிலோ இப்படியெல்லாம் கிறுக்கலாம்.

போனஸ் :


பின்குறிப்பு : இது ஒரு சீரியஸ் பதிவு!!

Wednesday, February 17, 2010

777777............7777777


தலைப்பை பார்த்தீங்கள்ள? இது ஏழில் ஆரம்பிச்சு, ஏழாலேயே தொடர்ந்து ஏழிலேயே முடியிற ஒரு நம்பர். கவனமா பாக்கனும்! இது ஒரு முடிவிலி(infinite number) கிடையாது. ...7777 ன்னு எப்பவாது முடிஞ்சுடும். ஆனா மொத்தம் எத்தன ஏழுன்னு தெரியாது. இப்போதைக்கு இந்த பில்டப் போதும். இப்ப இந்த நம்பர 199 ஆல வகுத்தா பூஜ்யம் வருது. அதாவது தமிழ்ல சொல்லனும்னா திஸ் நம்பர் இஸ் டிவிஸிபிள் பை ஒன் நைன்டி நைன். அப்படி 199ஆல இந்த நம்பர வகுத்தா, வர்ர விடையோட கடைசி நாலு இலக்கம்(l ast four digits of quotient) என்னன்னு ஒங்களால கண்டுபிடிக்க முடியுமா?

பிகு:- இந்தக் கணக்கு அவ்வளவு கஷ்டம் கிடையாது. கம்ப்யூட்டர் யூஸ் பண்ணாமலேயே கண்டுபிடிக்கலாம்!!

Wednesday, February 10, 2010

கணேஷ் வசந்த் விடை

கணேஷுடைய இனிஷியல் கொலையுதிர் காலம் கதையில் வருகிறது. விடை கீழே படத்தில்...

Saturday, February 06, 2010

ஆன்லைனில் எனது விஞ்ஞான சிறுகதைகள் நூல்

டிஸ்கி : இதுவும் ஒரு சுய விளம்பரப் பதிவு!!!

எனது விஞ்ஞான சிறுகதைகள் தொகுப்பு “௨௲௧௧ - ஒரே ஒரு காலயந்திரத்தில்” வெளியாகியிருப்பது உங்களனைவருக்கும் தெரியும். இந்தப் புத்தகம் எங்கே கிடைக்கும்? எங்கே கிடைக்கும்? என்று பல கோடி(?!?) பேர் கேட்கிறார்கள். அதற்காகவே இந்தப் பதிவு.

தபால் மூலம் வாங்க, ’TRISAKTHI PUBLICATIONS’ என்ற பெயருக்கு புத்தக விலை ரூ.70+தபால் செலவு ரூ.25க்கு Demand Draft எடுத்து, புத்தகப் பெயரையும் குறிப்பிட்டு,

Chief Editor
Trisakthi Publications
Giriguja Enclave
56/21, First Avenue, Shastri Nagar
Adyar
Chennai 600 020
என்ற முகவரிக்கு அனுப்பவும்.

நேரடியாக வாங்க, மேற்கண்ட முகவரிக்கு வருகை தந்தால், திரிசக்தி பதிப்பகத்தாரின் அனைத்துப் புத்தகங்களும் கிடைக்கும்(என்னுடையதும் இதில் அடங்கும்!).

ஆன்லைனில் கூட வாங்கலாம். ஆன்லைனில் புத்தகத்தை இங்கு வாங்குங்கள் ->
http://ezeebookshop.com/eshop/product_info.php?cPath=14_17&products_id=85

பி.கு.:- இந்தப் பதிவு எனது எல்லா வலைப்பூக்களிலும் வெளியாகும். அதனால் திரட்டிகளில் மறுபடி மறுபடி இந்தத் தலைப்பை காண நேர்ந்தால், அது உங்கள் தலைவிதி!!!;-)

Friday, February 05, 2010

சுஜாதாவின் கணேஷ் வசந்த்....ஒரு விடை... ஒரு கேள்வி...

போன பதிவில் வசந்தின் இனிஷியல்(Initial) என்னவென்று கேட்டிருந்தேன். கெக்கேபிக்குணி மட்டும் சரியான விடை அளித்திருந்தார். அதற்கு அவர் அளித்திருந்த விளக்கம் எனக்குப் பிடித்திருந்தது.

விடை ’நிர்வாண நகரம்’ நாவலில் இருக்கிறது. ஆதாரத்திற்கு கீழே படம் கொடுத்திருக்கிறேன். படிக்க முடியவில்லையென்றால், படத்தின் மீது க்ளிக் செய்து பெரிதாக்கி படிக்கவும்.இதற்கு கெக்கே பிக்குணி சொன்ன விளக்கம் :- என்னோட பர்சனல் தியரி வந்து, வசந்த் திரு. ரங்கராஜனுடைய படைப்புன்றதால:-)

சரி, இப்ப இந்தப் பிரச்சனை தீர்ந்தது. அடுத்த பஞ்சாயத்தை ஆரம்பிக்கலாமா? வசந்தோட இனிஷியல் தெரிஞ்சு போச்சு. வசத்துக்கு பாஸ்(Pass இல்லை, Boss), கணேஷோட இனிஷியல் என்னன்னு தெரியுமா?

Clue : இதற்கான விடை ‘நிர்வாண நகர’த்தில் இல்லை!!!;-))

Friday, January 29, 2010

சுஜாதாவின் கணேஷ் வசந்த் ரசிகர்களுக்கு...

கணேஷ் வசந்தைத் தெரியாத சுஜாதா ரசிகர்கள் இருக்க(வே) முடியாது. இதில் வசந்தைப் பற்றி ஒரு இண்ட்ரஸ்டிங்கான விஷயம் கண்ணில் பட்டது. அதை ஒரு ஜாலியான புதிர்க் கேள்வியாக கேட்கலாம் என்றுத் தோன்றியதால் இந்தப் பதிவு.

கேள்வி ரொம்ப சிம்பிள். உங்களுக்கு வசந்தைப் பற்றி நன்றாகத் தெரியுமா? அப்படியானால் வசந்தின் இனிஷியல்(Initial) என்ன?

விடை சுஜாதாவின் கதைகளிலேயே ஒளிந்திருக்கிறது. எத்தனை பேர் சரியான விடை சொல்கிறீர்கள் என்று பார்க்கலாம்!!!

Thursday, January 28, 2010

எனது விஞ்ஞான சிறுகதைகள் நூல் வெளியீடு

டிஸ்கி : இது ஒரு சுய விளம்பரப் பதிவு!!!

இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால், வருகின்ற பெப்ரவரி மாதம் 3ம் தேதி, எனது விஞ்ஞான சிறுகதைகள் தொகுப்பு “௨௲௧௧ - ஒரே ஒரு காலயந்திரத்தில்” வெளியாகிறது. திரிசக்தி பதிப்பகத்தார், இத்துடன் மேலும் ஒன்பது நூல்களை அன்று வெளியிடுகிறார்கள். விழாவிற்கு அனைவரும் வந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறேன்.

இடம் : ரோட்டரி புத்தகத் திருவிழா, தமிழ் அரசி திருமண மண்டபம், மணிமண்டபம் அருகில், தஞ்சாவூர்.
நாள் : 03-02-2010.
நேரம் : மாலை 6.30 மணி.

பி.கு.:- இந்தப் புக்கை கண்டிப்பா வாங்கிப் படிங்கன்னு நான் சொல்லலை. வாங்கிப் படிச்சீங்கன்னா நல்லாருக்கும்னுதான் சொல்றேன்!!!:-)

Tuesday, January 19, 2010

ஜெர்ரி எலியும் பாலாடைக் கட்டிகளும் விடை

பாலாடைக் கட்டிகள் ரூபிக் க்யூப் வடிவில் அடுக்கப்பட்டிருக்கின்றன என்று ஏற்கனவே நமக்குத் தெரியும். ஒரு ரூபிக் க்யூபில் மொத்தம் 8 கனசதுரங்கள், மூன்று முகங்கள்(வெளியே தெரியும் பக்கங்கள்) கொண்டவை; வசதிக்காக இவற்றை 3மு என்று அழைப்போம். அதே போல் 12 கனசதுரங்கள், இரண்டு முகங்கள் கொண்டவை(2மு). 6 கனசதுரங்கள் ஒரு முகம்(1மு) கொண்டவை. நடுவில் இருக்கும் கனசதுரத்தின் எந்த முகமும் வெளியே தெரியாது. அதனால் அதை 0மு என்று அழைக்கலாம்.

இப்பொழுது ரூபிக் க்யூபில் கனசதுரங்கள் அடுக்கப்பட்டுள்ள விதத்தை கவனித்தால் ஒன்று புலனாகும். ரூபிக் க்யூபில் ’ஒற்றைப்படை எண்’ முகம் கொண்ட கனசதுரங்களுக்கு அடுத்த கனசதுரமாக எப்பொழுதுமே ஒரு ‘இரட்டைப்படை எண்’ முகம் கொண்ட கனசதுரமே இருப்பதைக் காணலாம். அது போலவே, ‘இரட்டைப்படை எண்’ முகம் கொண்ட கனசதுரங்களுக்கு அடுத்த கனசதுரமாக எப்பொழுதுமே ’ஒற்றைப்படை எண்’ முகம் கொண்ட கனசதுரமே இருக்கிறது.

அதாவது ஒரு 3மு கனசதுரத்திற்கு அடுத்து 2மு அல்லது 0மு. அதுபோல 2மு கனசதுரத்திற்கு அடுத்து 3மு அல்லது 1மு.

நமது புதிரில் ஜெர்ரி எலி ஒரு மூலையில் இருக்கும் கனசதுரத்தில் ஆரம்பிக்கிறது, அதாவது 3மு. அடுத்து பக்கத்தில் இருக்கும் ஒரு இரட்டைப்படை கனசதுரம், அப்புறம் ஒற்றைப்படை கனசதுரம் என்று சாப்பிட்டவாறே சென்று கொண்டிருக்கிறது. அப்படியானால் 26வது கனசதுரம் ஒரு இரட்டைப்படை கனசதுரமாகவே இருக்க முடியும். இப்பொழுது கடைசி, 27வது கனசதுரமான , நமது நடு கனசதுரமும் ஒரு ’இரட்டைப்படை எண்’ கனசதுரம். ’இரட்டைப்படை எண்’ கனசதுரத்திற்கு அருகில் இன்னொரு ‘இரட்டைப்படை எண்’ கனசதுரம் வர முடியாது.

ஆக, நமது ஜெர்ரி எலியால், ஒரு மூலையில் இருக்கும் கனசதுரத்தை சாப்பிட ஆரம்பித்து, அடுத்தடுத்து பக்கத்தில் இருக்கும் கனசதுரங்களை சாப்பிட்டுக் கொண்டே போய், கடைசியாக நடு சதுரத்தில் முடிக்கவே முடியாது!!!

Wednesday, January 06, 2010

ஜெர்ரி எலியும் பாலாடைக் கட்டிகளும்

அன்றைக்கு ஜெர்ரிக்கு நல்ல அதிர்ஷ்டம். ஒரு பெரிய பாலாடைக் கட்டி அதன் வளைக்கு அருகில் கேட்பாரற்றுக் கிடந்தது. ஒரு ’ரூபிக் க்யூப்’ வடிவில் கனசதுரமாக, 27 சின்னச் சின்ன கனசதுரங்களாக வெட்டப்பட்டுக் கிடந்தது. ஜெர்ரி அதன் மேல் ஏறி, அதை ஒரு முறை சுற்றி வந்தது. பின் அந்த ரூபிக் க்யூப் வடிவ பாலாடைக் கட்டியின் ஒரு மூலைக்கு வந்து, அந்த மூலையில் இருந்த சின்ன கனசதுரத்தை சாப்பிடத் தொடங்கியது. அதை சாப்பிட்டு முடித்ததும், அதற்கு பக்கத்தில் இருந்த அடுத்த கனசதுரத்தை சாப்பிட்டது. இப்படியே பக்கத்து பக்கத்து கனசதுரங்களை சாப்பிட்டுக் கொண்டே சென்றால், ஜெர்ரி எலியால் கடைசியாக ’நடு’ கனசதுரத்தை சாப்பிட முடியுமா? அதாவது ரூபிக் க்யூபின் ஒரு மூலையில் ஆரம்பித்து, பக்கத்து பக்கத்து கனசதுரங்களைத் தின்று கடைசியாக நடுவில் முடிக்க முடியுமா? முடியும் என்றால் எப்படி முடியும்? முடியாது என்றால் ஏன் முடியாது?