Tuesday, March 21, 2006

சார்பியல் தத்துவம் - ஒளி

சார்பியல் தத்துவம் - சுட்டிகள்

முன்னுரை 1.சார்பு 2.வெளி 3.ஓய்வு நிலை 4.இயக்கம் 5.ஒளி
--------------------------------------------------
நமக்கு தெரிந்தவற்றுள் அதிகபட்ச வேகமுடையது ஒளிதான் என்பது நமக்கெல்லாம் தெரியும்(டாங்கியான்களை எல்லாம் இப்பொழுது கணக்கிலெடுக்காதீர்கள்! அவை கற்பனையானது). ஒளியின் வேகம் வினாடிக்கு 3 லட்சம் கிலோமீட்டர்கள். இந்த வேகத்தை நம்மால் கற்பனை செய்தே பார்க்க முடியவில்லை. அப்படிபட்ட வேகத்தில் செல்லும் ஒளியின் வேகம் மாறாதது என்றும் நமக்கு தெரியும்.

இங்கே மாறாதது என்பதற்கு சிறு விளக்கம் தேவை. ஒரு ஒளி கற்றையின் முன் ஒரு கண்ணாடி த்டுப்பை வைப்போம். வெற்றிடத்தைவிட கண்ணாடியினுள் ஒளியின் வேகம் கொஞ்சம் குறைவு. அதனால் சிறிது மெதுவாக செல்லும். ஆனால் கண்ணாடி தடுப்பை கடந்ததும் மீண்டும் தனது 3,00,000 கி.மீ வேகத்தையடைந்துவிடும். அதாவது ஒளியின் வேகம் ஒரே ஊடகத்துக்குள் மாறாததாயிருக்கும். அதை கூட்டவோ, குறைக்கவோ முடியாது.

இப்பொழுது ஒரு சின்ன புதிர். பயங்கரமான வேகத்தில் நேர்கோட்டில்(பூமியை சாராத நேர்கோடு) செல்லும் ஒரு ரயிலை கற்பனை செய்து கொள்ளுங்கள். அதன் வேகம் 2,40,000 கி.மீ/வினாடி. அதாவது ஒளியின் வேகத்தில் பத்தில் எட்டு பங்கு. இந்த ரயிலின் கடைசி பெட்டியில் ஒரு மின்விளக்கு இருக்கிறது. நீங்கள் முதல் பெட்டியில் இருக்கிறீர்கள். இப்பொழுது மின்விளக்கை போடுகிறோம். இப்பொழுது ஒளி உங்களை ரயிலை சார்ந்து, எவ்வளவு வேகத்தில் வந்தடையும்?

ஒளியின் வேகம் மாறாதது. அதனால் 3,00,000-2,40,000= 60,000கி.மீ வேகத்தில் ரயிலை சார்ந்து வந்திருக்க வேண்டும். அதாவது ரயிலின் முதல் பெட்டியை ஒளி விரட்டி சென்று பிடிக்க வேண்டும். இதே போல் ரயில் வண்டியின் முதல் பெட்டியில் விளக்கு இருந்து, நீங்கள் கடைசி பெட்டியிலிருந்தால் நிலைமை என்ன? அப்பொழுது ஒளி ரயில் பெட்டியை சார்ந்து 3,00,000+2,40,000=5,40,000 கி.மீ வேகத்தில் உங்களை வந்தடைய வேண்டும். அதாவது ரயிலும் ஒளியும் ஒன்றை நோக்கி ஒன்று ஓடி வர வேண்டும்.

நமது ரயில் வண்டியில் இப்பொழுது மின்விளக்குக்கு பதிலாய், துப்பாக்கியால் சுடுகிறோம் என்று வைத்து கொள்ளுங்கள். சார்பியல் தத்துவப்படி ரயில் வண்டியை சார்ந்து, குண்டு முதல் பெட்டியிலிருந்து கடைசிக்கு சுட்டாலும், கடைசி பெட்டியிலிருந்து முதலுக்கு சுட்டாலும் ஒரே வேகத்தில்தான் செல்லும். அதாவது எல்லா திசைகளிலும் ஒரே வேகத்தில்தான் செல்லும். இது நமக்கு தெரியும்.

ஆனால் ஒளி மட்டும் ரயிலை சார்ந்து வேறு வேறு திசைகளில் வேறு வேறு வேகங்களில் செல்கிறது. இது சார்பியல் கோட்பாட்டை உடைப்பதாக இருக்கிறதல்லவா?

உண்மையில் ஒளி சார்பியல் தத்துவத்துக்குள் அடங்காததா? விடை அடுத்த பகுதியில்.


- மீண்டும் பார்(அறு)ப்போம்.

5 comments:

Show/Hide Comments

Post a Comment