சார்பியல் தத்துவம் - சுட்டிகள்
முன்னுரை 1.சார்பு 2.வெளி 3.ஓய்வு நிலை 4.இயக்கம்
--------------------------------------------------
ஓய்வு நிலையே சார்பானது எனும்போது, அதற்கு நேர்மாறான இயக்க நிலையும் சார்பாகவே இருக்கும் என்பதை புரிந்து கொள்வது கடினமல்ல.
இதையும் நமது பழைய உதாரணத்தை கொண்டே விளக்கலாம். ஏழு மணி வண்டியில் நீங்கள் செல்கிறீர்கள். ஏழரை மணி வண்டியில் உங்கள் நண்பர் வருகிறார். விழுப்புரம் அருகே இரு வண்டிகளும் இணையாக வரும்பொழுது, உங்கள் இருவர் ஜன்னல்களும் நேருக்கு நேராக இருக்கிறது. இப்பொழுது உங்கள் நண்பர் உங்கள் கையிலிருக்கும் எதோ ஒரு பொருளை கேட்கிறார். அதை நீங்கள் உங்கள் ஜன்னல் வழியாக அவர் ஜன்னலை நோக்கி நேர் கோட்டில் எறிகிறீர்கள். காற்று தடையை புறக்கணித்துவிட்டால் உங்கள் பொருள் உங்கள் நண்பர் கைக்கு எளிதாக கிடைத்து விடும், இரண்டு பேருந்துகளும் நின்று கொண்டிருக்கும்பொழுது எவ்வளவு எளிதாக கிடைக்குமோ, அவ்வளவு எளிதாக.
சரி. இப்பொழுது பொருள் சென்ற பாதை எப்படிபட்டது? நேர்கோட்டு பாதையா(linear path)? பரவளைய பாதையா(Parabolic path)? பரவளைய பாதை என்றுதான் முக்கால்வாசிபேர் சொல்வீர்கள். ஆனால் இப்பொழுது உங்களுக்கு சார்பியல் பற்றி கொஞ்சம் தெரியுமாதலால் பதில் சொல்லுமுன் கொஞ்சம் யோசியுங்கள்.
உண்மையில் பொருள் சென்ற பாதை சார்பானது. பேருந்துகள் செல்லும் சாலையை பொறுத்து பொருள் சென்றது பரவளைய பாதைதான்(Parabolic path). ஆனால் இரண்டு பேருந்துகளையும் பொறுத்தவரை அது சென்ற பாதை நேர்கோடானதே(linear). நேர்கோட்டு பாதையில் இயங்கும் ஒரு பொருளுக்கு பொருந்தும் எல்லா விஞ்ஞான விதிகளும்(இங்கே இது முக்கியம், எல்லா விஞ்ஞான விதிகளும்), இரண்டு பேருந்துகளையும் சார்ந்து நமது பொருளுக்கும் பொருந்தும்.
ஆக இயக்கமும் சார்பானதாகி விட்டது. சார்பியல் தத்துவத்துக்கு ரொம்பவும் கண்ணாமூச்சி காட்டிய கதாநாயகன் ஒன்று உண்டு. அது ஒளி.
- மீண்டும் பார்(அறு)ப்போம்
No comments:
Post a Comment