Monday, September 27, 2004

குல்லா போடுங்க

விகடனில் மதனின் சமீபத்திய கார்டூனையும், அதற்கு இட்லிவடையில் வெளியான Commentகளையும் படித்ததும் எனக்கு இந்த புதிர் ஞாபகத்துக்கு வந்து விட்டது(கண்டமேனிக்கு ஞாபகத்துக்கு வருது).

மூன்று பேர் (வசதிக்காக டைனோ, ரமணி, பரி என்று அழைப்போமே!?!) வரிசையாக நிற்கின்றனர். முதலில் பரி, அவருக்கு பின்னே டைனோ, அவருக்குப் பின்னே ரமணி என்ற வரிசையில் நிற்கின்றனர். ரமணியால் பரி, டைனோ இருவர் தலையையும் பார்க்க முடியும்(அதிர்ஷ்டசாலி!). டைனோவால் பரி தலையை மட்டுமே பார்க்க முடியும். பரி யார் தலையையும் பார்க்க முடியாது(ஐயோ பாவம்!!). இப்பொழுது யோசிப்பவர்(அட! நாந்தாங்க) அவர்கள் முன்னால் வந்து ஐந்து தொப்பிகளைக் காட்டுகிறார். அவற்றில் மூன்று சிகப்பு நிறத்தொப்பிகள், இரண்டு பச்சை நிறத்தொப்பிகள்(கலர் காட்டுறார்). தொப்பிகளை காட்டிவிட்டு மூவர் கண்களையும் யோசிப்பவர் துணியால் கட்டிவிட்டார்(இதுக்குபேர்தான் கண்கட்டு வித்தையோ?). கட்டியபின் மூவர் தலையிலும் ஆளுக்கு ஒரு தொப்பியாக வைத்துவிட்டு, மீதி இரண்டு தொப்பிகளை ஒளித்து வைத்து விடுகிறார்(இதாம்பா இந்த ஆள்ட்ட பிடிக்க மாட்டேங்குது!?). பின்னர், மூவர் கண் கட்டுகளையும் அவிழ்த்துவிட்டு, முதலில் ரமணியிடம் கேட்கிறார்,
"உங்கள் தலையில் எந்த நிறத் தொப்பி உள்ளது?"
ரமணி சிறிது யோசித்துவிட்டு, "தெரியாது" என்கிறார்.

பிறகு டைனோவிடமும் அதே கேள்வியைக் கேட்டார்.
டைனோவும் சிறிது யோசித்துவிட்டு, "தெரியாது" என்கிறார்.

பிறகு பரியிடம் அதே கேள்வியைக் கேட்க,
அவர் சிறிது யோசித்துவிட்டு, "என் தலையில் ____ நிறத் தொப்பி இருக்கிறது." என்கிறார். அதைக்கேட்ட யோசிப்பவர், "அட! சரியா சொல்லிட்டீங்களே!! சபாஷ்." என்கிறார்.

அப்படின்னா பரி தலையில் எந்த நிறத் தொப்பி இருந்தது? அதை அவர் எப்படி கண்டுபிடித்தார்(இது முக்கியம்)? யோசிச்சு சொல்லுங்க.

No comments:

Post a Comment