இது கொஞ்சம் பிரபலமான புதிர். அதனால் சரியான விடை வந்து விடும் என்று எதிர்பார்த்தேன். மாசிலாவும், வவ்வாலும் வித விதமான பதில்கள் சொன்னாலும், எதுவும் சரியில்லை. அதனால், நானே விடையை சொல்லி விடுகிறேன்.
இந்தப் புதிரில், குற்றவாளி ஏன் தீர்ப்பை கேட்டதும் சந்தோஷப்பட்டான் என்பது புரிந்துவிட்டால், அடுத்த கேள்விக்கும் விடையளித்து விடலாம். தீர்ப்பைக் கேட்டதும் அவன் பின்வருமாறுதான் சிந்தித்திருப்பான். அதாவது, "முதல் ஆறு நாளும், என்னைத் தூக்கில் போடவில்லையென்றால், கண்டிப்பாக ஏழாவது நாளில் தூக்கில் ஏற்றப்படுவோம் என்று நான் எதிர்பார்ப்பேன். அதனால் தீர்ப்பின் படி என்னை ஏழாவது நாளில் தூக்கில் போடவே முடியாது. இப்பொழுது ஆறாவது நாள்! முந்தைய ஐந்து நாட்களிலும் என்னை தூக்கில் போடவில்லை. எழாவது நாளும் தூக்கில் போட முடியாது என்பது ஏற்கனவே எனக்குத் தெரியும். அதனால், ஆறாவது நாளில் என்னை தூக்கில் போடுவார்கள் என்று கண்டிப்பாக எதிர்பார்ப்பேன். அதனால் ஆறாவது நாளும் என்னை தூக்கில் ஏற்ற முடியாது. இதேபோலவேதான், ஐந்தாவது, நான்காவது, மூன்றாவது, இரண்டாவது நாட்களும் கண்டிப்பாக தூக்கில் போட முடியாது. இப்படி இரண்டிலிருந்து, ஏழாவது நாள் வரை எந்த நாளிலுமே என்னை தூகில் போட முடியாததால், கண்டிப்பாக முதல் நாளில்தான் தூக்கில் போடுவார்கள் என்று எதிர்பார்ப்பேன். இப்பொழுது, அந்த நாளிலும் என்னைத் தூக்கில் போட முடியாது."
இப்படி தனக்கான தீர்ப்பை எந்த நாளிலும் நிறைவேற்ற முடியாது என்று அவன் சிந்தித்ததால், அவன் சந்தோஷப்பட்டான்.
ஆக, இப்பொழுது அவன் வாரத்தில் எந்த நாளிலும் தன்னை தூக்கில் போட முடியாது என்று எதிர்பார்க்கிறான். அதனால், அடுத்த வாரத்தின் எந்த நாளில் தூக்கு மேடையில் ஏற்றப்பட்டாலும், அவன் மிகவும் ஆச்சர்யப்பட்டிருப்பான்.
பி.கு: இந்த விடையோடு கொஞ்சம் முரண்படுகிறவர்களும் உண்டு. ஏனென்றால் இதன் அடிப்படையே முரண்பாட்டு கொள்கையில் அமைந்ததுதான். இந்த சிந்தனைப் போக்கை மேலும் மேலும் விரிவுபடுத்தி கொண்டே போகலாம். அப்பொழுது உங்களுக்கு கிடைப்பது முடிவில்லாத முரண்பாடுகள்தானன்றி, எந்த முடிவும் கிடைக்காது.
Friday, August 31, 2007
எதிர்பாராத தூக்கு - விடை
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
நல்ல புதிர்...
//வவ்வால் said...
இதுக்கு இதான் விளக்கமாக இருக்கும் ,
அவன் மகிழ காரணம் எந்த நாள் வந்து கேட்டாலும் இன்று எதிர்பார்த்தேன் என்று சொல்லி தப்பித்துக்கொள்ளலாம் என திட்டம் போட்டு இருப்பான்.
இன்று தூக்கு என்று எதிர்பார்த்தேன் என அவன் சொல்கிறான் அன்றே தூக்கில் இட்டால் அது அவன் எதிர்பாராத நாள் தானே, எனவே வாரத்தில் ஏதோ ஒரு நாளில் அவனை தூக்கில் போட்டு விட்டார்கள்!//
யோசிப்பவரே,
வரிக்கு வரி நீங்கள் புதிரை படித்த புத்தகத்தில் உள்ளது போல சொல்ல வேண்டுமா, நான் உங்கள் பதிவில் சொன்னது நீங்கள் சொன்னதன் சாரம்சத்தைக்கொண்டுள்ளது. இதைத்தான் நீங்கள் நீட்டி வளைத்து சொல்லியுள்ளீர்கள்.
நீங்க எப்படி யோசிப்பிங்கனு இப்போ தெரிஞ்சு போச்சு :-))
வவ்வால்,
நீங்கள் அவன் எப்படி சிந்திப்பான் என்று சொல்லவில்லை. 'இன்று எதிர்பார்த்தேன்' என்று அவன் சொன்னால், அன்று கண்டிப்பாக அவனைத் தூக்கில் போட முடியாது. உங்களது Reasoningகும், விடையின் Reasoningகும் ஒன்றல்ல என்பது எனது கருத்து.
வாரத்தில் எந்த நாளில் வேண்டுமானாலும், அவனைத் தூக்கில் போடலாம் என்று நீங்கள் சொன்னதை உண்மையிலேயே மறந்து விட்டேன். அதற்காக மன்னிக்கவும். அது சரியான விடைதான்.
அப்புறம்,
//புதிரை படித்த புத்தகத்தில் உள்ளது போல சொல்ல // எதில் படித்தேன் என்பது நினைவில்லை. புதிரை நினைவிலிருந்துதான் எழுதினேன்.
//நீங்க எப்படி யோசிப்பிங்கனு இப்போ தெரிஞ்சு போச்சு //
எப்படி யோசிக்கிறேன்? எனக்கும் கொஞ்சம் சொல்லிவிடுங்களேன். அப்பொழுதாவது எனக்கு புரிகிறதா பார்க்கிறேன். ;-))
பி.கு.: மேலேயுள்ள ஸ்மைலியை கவனிக்காம உட்டுடாதீங்க!!!;-)
Post a Comment