Tuesday, January 19, 2010

ஜெர்ரி எலியும் பாலாடைக் கட்டிகளும் விடை

பாலாடைக் கட்டிகள் ரூபிக் க்யூப் வடிவில் அடுக்கப்பட்டிருக்கின்றன என்று ஏற்கனவே நமக்குத் தெரியும். ஒரு ரூபிக் க்யூபில் மொத்தம் 8 கனசதுரங்கள், மூன்று முகங்கள்(வெளியே தெரியும் பக்கங்கள்) கொண்டவை; வசதிக்காக இவற்றை 3மு என்று அழைப்போம். அதே போல் 12 கனசதுரங்கள், இரண்டு முகங்கள் கொண்டவை(2மு). 6 கனசதுரங்கள் ஒரு முகம்(1மு) கொண்டவை. நடுவில் இருக்கும் கனசதுரத்தின் எந்த முகமும் வெளியே தெரியாது. அதனால் அதை 0மு என்று அழைக்கலாம்.

இப்பொழுது ரூபிக் க்யூபில் கனசதுரங்கள் அடுக்கப்பட்டுள்ள விதத்தை கவனித்தால் ஒன்று புலனாகும். ரூபிக் க்யூபில் ’ஒற்றைப்படை எண்’ முகம் கொண்ட கனசதுரங்களுக்கு அடுத்த கனசதுரமாக எப்பொழுதுமே ஒரு ‘இரட்டைப்படை எண்’ முகம் கொண்ட கனசதுரமே இருப்பதைக் காணலாம். அது போலவே, ‘இரட்டைப்படை எண்’ முகம் கொண்ட கனசதுரங்களுக்கு அடுத்த கனசதுரமாக எப்பொழுதுமே ’ஒற்றைப்படை எண்’ முகம் கொண்ட கனசதுரமே இருக்கிறது.

அதாவது ஒரு 3மு கனசதுரத்திற்கு அடுத்து 2மு அல்லது 0மு. அதுபோல 2மு கனசதுரத்திற்கு அடுத்து 3மு அல்லது 1மு.

நமது புதிரில் ஜெர்ரி எலி ஒரு மூலையில் இருக்கும் கனசதுரத்தில் ஆரம்பிக்கிறது, அதாவது 3மு. அடுத்து பக்கத்தில் இருக்கும் ஒரு இரட்டைப்படை கனசதுரம், அப்புறம் ஒற்றைப்படை கனசதுரம் என்று சாப்பிட்டவாறே சென்று கொண்டிருக்கிறது. அப்படியானால் 26வது கனசதுரம் ஒரு இரட்டைப்படை கனசதுரமாகவே இருக்க முடியும். இப்பொழுது கடைசி, 27வது கனசதுரமான , நமது நடு கனசதுரமும் ஒரு ’இரட்டைப்படை எண்’ கனசதுரம். ’இரட்டைப்படை எண்’ கனசதுரத்திற்கு அருகில் இன்னொரு ‘இரட்டைப்படை எண்’ கனசதுரம் வர முடியாது.

ஆக, நமது ஜெர்ரி எலியால், ஒரு மூலையில் இருக்கும் கனசதுரத்தை சாப்பிட ஆரம்பித்து, அடுத்தடுத்து பக்கத்தில் இருக்கும் கனசதுரங்களை சாப்பிட்டுக் கொண்டே போய், கடைசியாக நடு சதுரத்தில் முடிக்கவே முடியாது!!!

2 comments:

Show/Hide Comments

Post a Comment