Thursday, September 28, 2006

உண்மையில் வெற்றியா?

முதலில் தேன்கூடு நிர்வாகிகளிடமும், வாசகர்களிடமும், முக்கியமாக தேன்கூடு செப்டம்பர் மாத போட்டியில் எனக்கு அடுத்ததாக வந்த அனைவரிடமும், என்னை பெரிய மனது பண்ணி மன்னிக்குமாறு வேண்டி கொள்கிறேன். எதற்கு இந்த மன்னிப்பு என்று கேட்கிறீர்களா? தேன்கூடு போட்டியில் எனது கதைக்கு மூன்றாவது இடம் கிடைத்திருக்கிறது. ஆனால் இது நேர்மையான முறையில் பெறப்பட்ட வெற்றியல்ல!!! கிட்டத்தட்ட பாதிக்கு மேல் நானும் எனது நண்பர்களும் கள்ள வோட்டு போட்டிருக்கிறோம். இதை ஒத்து கொள்வதில் எனக்கு எந்தவிதமான பயமுமில்லை. ஏன் இப்படி செய்தேன்? எழுத்து திறமையுள்ளவர்களை சிறந்த முறையில் ஊக்கப்படுத்துவதற்காக தேன்கூடு குழுவினர் இந்த மாதாந்திர போட்டியை நடத்துகின்றனர். பாராட்ட வேண்டிய விஷயம்தான். ஆனால் சிறந்த படைப்பை தேர்ந்தெடுக்கும் முறையில் உள்ள குறைகளை அவர்களுக்கு சுட்டிகாட்டவே இப்படி செய்தேன். போட்டிக்கு படைப்பை அனுப்பி விட்டு, தேர்ந்தெடுக்கும் முறையிலுள்ள இந்த குறையினால், வெற்றி பெற முடியாதவர்களின் நிலையை கொஞ்சம் எண்ணி பாருங்கள்.

எனக்கு கிடைத்த வோட்டுகளின் மொத்தக் கணக்கு(இந்த கணக்கு எப்படியென்று தெரியவில்லை?) 31. இதில் கள்ளவோட்டுக்கள் மொத்தம் 15. மீதியுள்ளது 16 வோட்டுக்கள், அதாவது 9.09%. நியாயமாக பார்த்தால் எனது கதை முதல் பத்துக்குள்ளேயே வந்திருக்க கூடாது. முதல் பத்திற்குள் வந்தால்தானே நடுவர் குழுவுக்கு அனுப்புவதற்கு!!!

கள்ள வோட்டு எப்படி போடப்பட்டது? வோட்டு போட ஒரு மின்னஞ்ஜல் முகவரியிருந்தாலே போதுமானது! என்னிடமே மூன்று முகவரிகள் இருக்கின்றன! எனது நண்பர்களிடம் கடன் வாங்கியது மீதி 13. இதில் அந்த பதிமூன்று வோட்டுகளையும் போட்டவர்கள் எனது இந்த கதையை இன்னும் படிக்கவேயில்லை. நான் கேட்டு கொண்டதற்காக வோட்டு மட்டும் போட்டார்கள்.

என்னை கேட்டால், சிறந்த படைப்புகளை, இந்த மாதிரி வோட்டு போட்டு தேர்ந்தெடுப்பது என்பதே சரியான முறையில்லை. ஏனென்றால், ஒவ்வொரு வாசகர்க்கும் ஒவ்வொருவிதமான டேஸ்ட் இருக்கும். ஒருவருக்கு மிகவும் பிடிப்பது மற்றவருக்கு பிடிக்காது. மேலும் கதை, கவிதை, கட்டுரை என்ற பேதங்கள் இல்லாமல், எல்லாமே ஒரே கூரையின் கீழ் போட்டியில் கலந்து கொள்கின்றன. இது மிக மிக தவறான அணுகுமுறையாக எனக்கு படுகிறது.

இவ்வளவையும் சொல்லிவிட்டு, இந்த மூன்றாம் பரிசை வாங்கி கொள்வதா? மீண்டும் மன்னிக்கவும். மறுதலிக்கிறேன்.

25 comments:

Show/Hide Comments

Post a Comment