Sunday, June 25, 2006

6 + 5 + 4 + 3 + 2 + புதிர்

நாலு விளையாட்டில் கீதா கூப்பிட்டபொழுது எப்படியோ நழுவி தப்பித்து விட்டேன். ஆனால் இந்த முறை பொன்ஸ் மடலெல்லாம் போட்டு பிடிச்சு இழுத்துட்டாங்க. அதனால நானும் ஆத்துக்குள்ள விழுந்துட்டேன்.


1) மறக்க முடியாத ஆறு ஞாபகங்கள்
================================


அ. யூ.கே.ஜி. படிக்கும்போது மிஸ்ஸிடம் அடிவாங்கி அழுதது. அன்னைக்கு முடிவு பண்ணேன். இனிமே யார் அடிச்சாலும் அழக்கூடாதுன்னு. அப்படியே மெய்ன்டெய்ன் பண்றேன்.(நீ ரொம்ப நல்லவன்டா!!!)

ஆ. ஐந்தாம் வகுப்பு படிக்கும்பொழுது பிடித்த பெண் அருகிலேயே உட்கார்ந்திருந்தும், விவரம் ஏதும் தெரியாததால், ஒன்றும் செய்யாமல் இருந்துவிட்டேன்.

இ. ஏழாம் வகுப்பு படிக்கும் பொழுது, வாழ்க்கையில் முதல் முறையாக பரிட்சையில் ஃபெயிலானது(காலாண்டுன்னு நினக்கிறேன்). அதுக்கப்புறம் அப்படியே பழகி போச்சு.

ஈ. கல்லூரியில் முதல் முறையாக மேடையேறி பாடினேன்!?! பாடினேன் என்றால், உல்டா பாட்டு.அதற்காக எனக்கு ஒன்றும் நல்ல குரல் வளம் என்றெல்லம் நினைக்காதீர்கள். உண்மையில் நடந்தது என்னவென்றால், அந்த நிகழ்ச்சிகளை நான் தான் ஆர்கனைஸ் செய்தேன். அந்த பாட்டை பாட வேண்டியவன் கடைசி நேரத்தில் கூட்டத்தை பார்த்து பயந்து விட்டான். கடைசியில் வேறு வழியில்லாமல் நிலைமையை சமாளிக்க பாடினேன்!?!? ஆனால் அதுக்கப்புறம் நிறைய தடவை மேடையெறியாச்சு.

உ. முதுகலை முடிக்கும்பொழுது, பிராஜக்டுக்காக முதல் முறையாக எழுத்தாளர் சுஜாதாவை, அம்பலம் அலுவலகத்தில் சந்தித்தேன். அறிமுகபடுத்தியதும் ஒரு 'வெரிகுட்', அதற்கப்புறம் ஒரு அரை மணிநேரத்துக்கப்புறம், அவருடைய கதை ஒன்றின் பெயரை நான் ஞாபகப்படுத்தியதும் ஒரு 'குட்'.

ஊ. இந்த வருட ஆரம்பத்தில் புத்தக கண்காட்சியில், எனது எழுத்துக்களை முதல் முறையாக அச்சில் பார்த்தேன். மரத்தடி-திண்ணை இணைந்து போன வருடம் நடத்திய அறிவியல் புனைக்கதை போட்டியில் எனது கதை பிரசுரத்திற்கு (பரிசு கிடைக்கவில்லை) தேர்ந்தெடுக்கப்பட்டு 'எதிர்காலம் என்ற ஒன்று' புத்தகதில் இடம்பெற்றது.

2. பி(ப)டித்த ஐந்து புத்தகங்கள்
==========================

i) Around the World in 80 Days - Jules Verne - முதன் முதலாக ஆங்கிலத்திலேயே வாசித்த கதை. கல்லூரி நூலகத்தில் எடுத்து படித்தேன்.

ii) பொன்னியின் செல்வன் - கல்கி - இந்த புத்தகத்தை பள்ளி விடுமுறை நாட்களில் எனது வீட்டில் படித்து பார்க்க சொல்லியிருக்கிறார்கள்(பலமுறை). அப்பொழுதெல்லாம், 'இதையெல்லாம் மனுஷன் படிப்பானா' என்று சொல்லி விடுவேன். ஒரு கல்லூரி விடுமுறை நாளில் உருப்படியாக ஒரு புத்தகமும் எனது வீட்டு நூலகத்தில் கிடைக்காததால் வேறு வழியில்லாமல் எடுத்து படிக்க ஆரம்பித்தேன்.அதுவும் இரண்டாம் பாகத்தில்தான் ஆரம்பித்தேன். ஆனால் ஆரம்பித்த பிறகு புத்தகத்தை கீழே வைக்க முடியவில்லை. கடைசியாகத்தான் முதல் பாகத்தை படித்தேன்

iii) விளையாட்டு கணிதம் - யா. பெரல்மான் - சின்ன வயதிலேயே படித்த, பிடித்த புத்தகம். இந்த புத்தகம்தான் நான் புதிர்களை விரும்பி படிக்க காரணமாயிருந்தது. கணிததிலும் ஈடுபாடு அதிகரித்தது.

iv) பொழுது போக்கு பௌதிகம் - யா. பெரல்மான் - எனக்கு சயின்ஸ் சொல்லி கொடுத்த புத்தகம். சயின்ஸ் ஃபிக் ஷன்களை எனக்கு அறிமுகப்படுத்தியதும் இந்த புத்தகம்தான்.

v) அர்த்தமுள்ள இந்துமதம் - கண்ணதாசன் - ஒரு சில பாகங்கள் போரடித்தாலும், மொத்தத்தில் ஒரு நல்ல நூல். ஆன்ம தேடலின் ஆரம்பத்திலிருப்பவர்களுக்கு சிறிதாவது உதவ கூடிய நூல்.

3. ரசித்த நான்கு படங்கள்
======================


1) கர்ணன் - சின்ன வயதில் திரும்ப திரும்ப பார்த்த படம். சம்பாதித்து வாங்கிய முதல் ஸி.டி. இந்த படத்து வசனங்கள்போல் வேறு எந்தப் பட வசனத்தையும் நான் ரசித்ததில்லை.

2) மிஸ்ஸியம்மா - கிளாஸிக்கான காமெடி படம். சாவித்திரி இதில் கொள்ளை அழகு.

3) தளபதி - சிறு வயதில் பார்த்தபொழுது ஒன்றுமே புரியவில்லை. வித்தியாசமான ரஜினி, "ஏன்?...தேவா!" போன்ற வசங்கள் பின்னாட்களில் புரிந்த பொழுது மிகவும் ரசித்தேன்.

4) அனுபவி ராஜா அனுபவி - முன்பு டிடி1ல் ஞாயிற்றுகிழமை படம் போடுவார்களே; அப்பொழுது இதை எங்கள் வீட்டு வி.சி.ஆரில் பதிந்து வைத்தோம். கிட்டத்தட்ட பள்ளி படிப்பு முடியும் வரை அடிக்கடி பார்த்திருக்கிறேன். எத்தனை முறை பார்த்தாலும் சிரிப்பு வருவது தவிர்க்க முடியாதது!

4. வியக்கும் மூன்று நபர்கள்
========================


ஒ) ஏ.ஆர்.ரஹ்மான் - என்ன வென்றே தெரியவில்லை? நான் இவரின் பயங்கர ரசிகன். ரொம்ப பிடித்தவரை பற்றி அதிகமாக ஒன்றும் சொல்லமுடியாதல்லவா! பிடிச்சிருக்கு! அவ்வளவுதான்.

இ) சுஜாதா - முதலில் இவரின் கதைகளை படித்த பொழுது இவர் எழுபது வயது தாத்தா என்பது சத்தியமாக தெரியாது. ரொம்ப ஓவராக எழுதுகிறாரே, மிஞ்சி மிஞ்சி போனால் ஒரு 30, 35 வயதிருக்கும் என்றுதான் வெகு நாட்களாக நினைத்திருந்தேன். இவரின் அறிவியல் கதைகள்தான் என்னை இவரின் ரசிகனாக்கியது.

மூ) மூன்றாவது நபர்...... வேறு யார்! நானேதான்!!! ஆனாலும் இந்த ஆளுக்குள் எவ்வளவு அறிவு, எவ்வளவு குசும்பு, எவ்வளவு அழகு(சரி! சரி! கண்ட்ரோல்!!!)

5. ரொம்ப யோசித்த இரண்டு புதிர்கள்
================================


ஒ) வயசு என்ன : இந்த புதிரை முதலில் படித்தவுடன், விடை காண முயன்றபொழுது எப்படி முன்னேறுவது என்றே புரியவில்லை. சிறிது நேரம் யோசித்து விட்டு அப்படியே விட்டு விட்டேன். கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு பிறகு ஒரு லீட் கிடைத்தது. அதைப் பிடித்து கொண்டு வொர்க் அவுட் செய்ய ஐந்து நிமிடத்தில் விடை வந்துவிட்டது. இதை இட்லி வடைக்கு அனுப்பி அவரது வலை பதிவில் முன்பு பதிந்திருக்கிறேன்(வலைத்துணுக்கு ஆரம்பிக்காத பொழுது!).

டூ) வட்ட மேஜை கொள்ளையர்கள் : யோசிங்க வலைத்துணுக்கின் ஆரம்பத்தில் இந்த புதிரை பதிந்திருக்கிறேன். இந்த புதிர் பத்தாம் வகுப்பு என்று ஞாபகம், எனது அண்ணன் எனக்கு போட்டார். பத்து நிமிடத்தில் விடை கண்டுபிடித்தேன்.

6. எனது சங்கிலி!?!?
=================


சங்கிலியில் இணைக்க எனக்கு பிடித்த சில வலைப் பதிவாளர்களை கேட்டுப் பார்த்தேன். ஆனால் அவர்களில் யாராலும் இதற்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. அதனால் எனது சங்கிலி (புதிர்) கீழே இருக்கிறது. அதற்கு சரியான விடையளிக்கும் வலைப்பதிவாளர்களை, இந்த விளையாட்டுக்கு சங்கிலியாக அழைக்கிறேன். யாருமே விளையாட்டுக்கு கூப்பிடாத வலைப் பதிவாளர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு!! நழுவ விடாதீர்கள்!!!!;)

மூன்று கண்ணிகள் கொண்ட சங்கிலிகளாக மொத்தம் ஐந்து சங்கிலிகள், ஒரு கொல்லனிடம் வேலைக்கு வருகிறது. இந்த ஐந்து சங்கிலிகளையும் கொல்லன் ஒரே நீள சங்கிலியாக்க வேண்டும்(15 கண்ணிகள் கொண்ட சங்கிலியாக). அப்படியானால் அந்த கொல்லன் குறைந்தபட்சமாக மொத்தம் எத்தனை கண்ணிகளை வெட்டி இணைக்க வேண்டும்?

16 comments:

Show/Hide Comments

Post a Comment