Monday, January 31, 2005

விரலில் ஈரம் படாமல்

இன்றைக்கு உங்களுக்கு ஒரு அறிவியல் வித்தை சொல்லித் தரப்போகிறேன். அதை நீங்கள், உங்கள் குழந்தைகளுக்கு(கல்யாணமாகாதவர்கள், வீட்டில் உள்ள, அல்லது பக்கத்து வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு) செய்து காட்டி ஆச்சர்யப்படுத்தலாம்.

ஒரு சமையலறைத் தட்டை எடுத்து, அதில் ஒரு ரூபாய்(அவரவர் வசதிக்கேற்ப) நாணயத்தை வையுங்கள். நாணயத்தை மூடும் வரைத் தட்டை தண்ணீரால் நிரப்புங்கள். இப்பொழுது குழந்தையிடம் விரலில் ஈரம் படாமல் அந்த நாணயத்தை எடுத்தால் அந்த நாணயத்தை அவர்களுக்கே பரிசளிப்பதாகக் கூறுங்கள். எப்படியும் குழந்தைகளால் அது முடியாது(சில அறிவாளி குழந்தைகள் அப்படி செய்து விட்டால் அதற்கு நான் பொறுப்பால்ல! நாணயத்தை நாணயமாக குழந்தையிடம் கொடுத்து விடுவது நல்லது!!).

இப்பொழுது நீங்கள் அதே காரியத்தை எப்படி செய்யப் போகிறீர்கள். ஒரு பழைய காகிதத்தையும், ஒரு டம்ளரையும்("டம்ளர்" தமிழ் வார்த்தை என்ன?) எடுத்துக் கொள்ளுங்கள். காகிதத்தைக் கொளுத்தி டம்ளரினுள் போட்டு அதை உடனே தட்டின் மீது கவுத்தி வையுங்கள்(தீயை உபயோகிப்பதால் குழந்தைகளை சற்று எட்ட நின்றே கவனிக்க சொல்லுங்கள்). அப்படி கவுத்தும்போது நாணயத்தையும் சேர்த்து மூடி விடாதீர்கள். காகிதம் எரிந்து அணைந்தவுடன் தட்டிலிருக்கும் தண்ணீர் டம்ளருக்குள் போய்விடும். இப்பொழுது நாணயத்தை சுலபமாக விரலில் ஈரம் படாமல் எடுக்கலாம்.

வித்தை காட்டி முடித்து விட்டீர்களா? சரி இப்பொ ஒரு சின்னக் கேள்வி. காகிதம் எரிந்து முடித்ததும் தண்ணீர் ஏன் டம்ளருக்குள் போனது? இது ஒரு கேள்வியா? நாலாம் வகுப்பு பள்ளி புத்தகத்திலேயே இருக்கிறதே என்கிறீர்களா? நம் வலைத்துணுக்கில் வருகிறதென்றால் விஷயம் இல்லாமல் கேட்க மாட்டேன் என்பதை நினைவில் இருத்தி கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இதற்கு ஒரு தவறான விளக்கம் நம்மிடையே உலவி வருவதாலேயே இந்த கேள்வியை கேட்டிருக்கிறேன்.


பி.கு.(ரோசாவசந்துக்கு):

இந்த வித்தை(அல்லது பரிசோதனை) பூமியில், தரைமட்டத்தில் நடத்தப்படுவதுதான்!!!


2 comments:

Show/Hide Comments

Post a Comment