Thursday, February 03, 2005

தவறான விளக்கம்

போன துணுக்கில் நாம் பார்த்த பரிசோதனைக்கு ஒரு தவறான விளக்கம் நம்மிடையே உலவுவதாகக் கூறியிருந்தேன். அந்த தவறான விளக்கம் என்னவென்று முதலில் பார்ப்போம்.

டம்ளருக்குள் இருக்கும் ஆக்ஸிஜன் எரிந்து போவதால், எரிந்து போன ஆக்ஸிஜனின் இடத்தை இட்டு நிரப்ப தண்ணீர் உள்ளே போவதாக பல புத்தகங்களில் இந்த பரிசோதனைக்கு விளக்கம் அளிக்கபடுகின்றன. இது தவறாகும். ஆக்ஸிஜன் எரிந்து எங்கும் போகவில்லை. உள்ளேயேதான் கார்பன் டை ஆக்ஸைடாக மாறியிருக்கிறது. ஆகையால் இது தவறான விளக்கம்.

சரியான விளக்கம் : டம்ளருக்குள் எரியும் காகிதத்தை போட்டதும், டம்ளருக்குள் இருக்கும் காற்று சூடாகிறது. காற்று சூடாகும்போது, அதன் அடர்த்தி(Density) குறைகிறது. அடர்த்தி குறையும் போது அதன் கொள்ளளவும்(Volume) அதிகமாக இருக்கும்(அல்லது காற்று விரிவடையும் என்று சொல்லலாம்). தீ அணைந்தபின் உள்ளிருக்கும் காற்று குளிரடைகிறது. அப்பொழுது அதன் அடர்த்தி அதிகமாகிறது. அதாவது உள்ளிருக்கும் காற்று சுருங்குகிறது. இதனால் டம்ளருக்குள் காற்றழுத்தம்(Pressure) குறைகிறது. இது டம்ளருக்கு வெளியே இருக்கும் காற்றழுத்தத்தைவிட குறைவாயிருப்பதால், வெளியே இருக்கும் காற்றழுத்தம்(Atmosphere Pressure) தண்ணீரை டம்ளருக்குள் தள்ளுகிறது. இதனாலேயே தண்ணீர் டம்ளருக்குள் போகிறது.

இன்னமும் ஆக்ஸிஜன் எரிந்து போவதாலேயே தண்ணீர் உள்ளே போகிறதென்று நம்புபவர்கள், கீழ்கண்டவாறு அதே பரிசோதனையை செய்யவும். டம்ளருக்குள் எரியும் காகிதத்தைப் போடாமல், டம்ளரை சிறிது நேரம் கொதிக்கும் வெண்ணீரில் போட்டு பின்னர் கவுத்தவும்(உடனே). இப்பொழுதும் தண்ணீர் உள்ளேறுவதைக் காண்பீர்கள். இங்கே எதுவும் எரியவில்லை(ஆக்ஸிஜன் உட்பட). அதனால் ஆக்ஸிஜன் விளக்கம் தவறென்பது இதன் மூலம் தெளிவாகிறது.

பத்ரி பாதி கிணறு தாண்டியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். எரிந்து முடித்ததும் காற்றின் Volume குறைவாக இருக்கும் என்பதை சொன்னவர், அது ஏன் குறைவாக இருக்கிறது என்று சொல்லவில்லை. இவருக்கு அரை மதிப்பெண்.

காஸிலிங்கம் எரிவுக்கு முன்னிருக்கும் வாயுக்கள், எரிவுக்கு பின்னிருக்கும் வாயுக்கள் என்று பட்டியலிட்டு, இவற்றில் பிந்தயது, முந்தயதை விட குறைவாயிருக்கும் என்று கூறுகிறார். மேலும் அவை ஏன் அப்படியிருக்க வேண்டும் என்ரு கூறவில்லை. அவர் கூறியுள்ள பட்டியலில் முந்தயதற்கும், பிந்தயதற்கும், நிறை(mass) ஒன்றாகத்தான் இருக்கும். ஆனால் அடர்த்தி (அதுவும் வெப்ப மாறுதல்களினால்) வேறுபடும். அதனால் அவருக்கும் அரை மதிப்பெண்தான்.

உங்கள் மூளையை ரொம்ப பிராண்டி விட்டேன் என்று நினைக்கிறேன். கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.

3 comments:

Show/Hide Comments

Post a Comment