Tuesday, October 07, 2008

குறுக்கெழுத்துப் புதிர் - போT - விடைகள்

இந்த மாதம் குறுக்கெழுத்துப் புதிருக்கு, ஓரளவு நல்ல வரவேற்பு கிடைத்தது. நன்றி.

பெனாத்தல் சுரேஷ், ஸ்ரீதர் நாராயணன், அமர், இலவசக்கொத்தனார், அரசு, சுரேஷ் S.P., வடகரை வேலன் ஆகிய ஏழு பேரும் புதிரை முழுமையாக முடித்தவர்கள். மற்றவர்களும் பெரும்பாலான விடைகளை சொல்லிவிட்டனர். ஒன்றிரண்டுதான் பாக்கி. ஏற்கெனவே சொல்லியிருந்தபடி, ஐந்துக்கு மேற்பட்டவர்கள் விடை சொல்லிவிட்டதால், நான் மரியாதையாக இந்த கு.எ. போட்டியை நிறுத்திக் கொள்கிறேன்(யோசிக்க முடியலைப்பா!!) .

போட்டியில் பங்கெடுத்துக் கொண்டவர்களின் மதிப்பெண் விவரங்களை இங்கே பார்க்கலாம்.

இப்பொழுது புதிருக்கான விடைகளைப் பார்க்கலாம்.

இடமிருந்து வலம் :

2) "விழியருகில்" + "இதயத்துடிப்பின்" ஓசை மாறினால் = தெளிவாகத் தெரியும்.(4).
விடை : கண்ணாடி.

3) "மாமா"வை ஒருமுறை + ஆகாரமில்லாமல் ஆ"றுதல்" செய்தால் = மாற்றம் வரும்.(4)
விடை : மாறுதல்

6) "ணிவின்" ஸ்வரத்தை மாற்றி, முட்டையை உடைத்தால் = இரக்கம் பிறக்கும்.(3)
விடை : கனிவு

11) "வ"கையின் கையுடைத்து + உ"ள்ளு"டையில் அடைந்திருப்பது + மறுபாதி வடி"வம்"ஆனால் = தமிழ்மறை.(5)
விடை : வள்ளுவம்

17) "பல்லி"யின் இடுப்பை வெட்டி ஒலியை மாற்றினால் நிந்தனை ஏற்படும்.(2) விடை : பழி

மேலிருந்து கீழ் :

1) சுழிகள் நிறைந்த "கன்னி" + விஷ"யம்"தில் நஞ்சை அகற்றினால் = கௌரவம்.(5)
விடை : கண்ணியம்

3) "மடி" மீது கால் வைத்து ஏறிப் போ.(2)
விடை : மாடி

4) "த"ற்கொ"லை"யின் அடிமுடியை ஆராய்ந்தால் = சிரம் தனியே வந்துவிடும்.(2)
விடை : தலை

8) ஞானத்தின்->அறிவு + ஒரு கரை வ"ரை" அடைய = இது வழிகாட்டும்.(4)
விடை : அறிவுரை

16) "மீசை"யை திருப்பி விட்டுத்->சைமீ, திரித்து ->சமீ+ கோ"பம்"தில் அரசனை விரட்டியதால் = அண்மையில் கிடைத்தது.(4)
விடை : சமீபம்

19) "உயர்ந்தோர் தரச்சொல்லி" ->கொடு + அழு"க்கு"இன் சோகம் அகற்றி = துன்புறுத்தும் உறுப்பு.(4)
விடை : கொடுக்கு. இந்தக் கேள்வி பலரை கஷ்டப்படுத்தியது. "ஈ, தா என்பது ஒப்போர் கூற்றே! கொடு என்பது உயர்ந்தோர் கூற்றே" - தொல்காப்பியம்.


வலமிருந்து இடம் :

5) "வ"தக்க ஆரம்பித்து + கா"லை"யில் பறவையை விரட்டினால் = மீனைப் பிடிக்கலாம்.(2)
விடை : வலை

9) க"ரக"த்தின் இடையில் + சில "சி"ல + சம"யம்" முடிந்தால் = மறைக்கப்படும்.(5)
விடை : ரகசியம்

13) "சா"லையின் ஒரு ஓரத்தில் + குரங்கு->மந்தி வந்தால் = மணக்கும்.(4)
விடை : சாமந்தி

14) அங்கு"சம்"இன் முனையில் + அ"ங்க"தனின் இடையை, சொருகினால் = வெட்டிக் கூட்டம்.(4)
விடை : சங்கம்

18) ஆ"ட்டு"த் தலைக்கு பதில், "மீ"ன் தலையை வைத்து = வீணையை வாசி.(3)
விடை : மீட்டு

கீழிருந்து மேல் :

7) "கவ"லையின் காலை உடைத்து + கா"தல்"இன் தலையை வெட்டி, உள்ளே நுழைத்தால் = செய்தி தரும்.(4)
விடை : தகவல்

10) "அவ"ள் மருவி + "மனைவி"->தாரம் என்பது = தெய்வப்பிறவி.(5)
விடை : அவதாரம்

12) உட்காராததால் -> அமரா + மலைமகள்->பார்"வதி", கண்மண் தெரியாமல் = நதியாக ஓடுகிறாள்.(5)
விடை : அமராவதி

14) பதியின் சரி பாதி இவள்.(2)
விடை : சதி. இது க்ரிப்டிக் இல்லாத நேரடிக் குறிப்பாக அமைந்து விட்டது.

15) "மிச்சம் விழுந்ததை"-> "கழி"வு, கழித்து எடுத்தால் = அடிப்பான்.(2)
விடை : கழி

பின் குறிப்பு : சொதப்பல்கள் இருந்தால் தெரிவிக்கவும். முடிந்தவரை சப்பைக் கட்டு கட்டுகிறேன்!!

3 comments:

Show/Hide Comments

Post a Comment