Wednesday, December 29, 2004

வாழ்த்துக்கள்



எல்லோருக்கும் எனது னி கிறிஸ்துமஸ்(கொஞ்சம் லேட்டான) மற்றும் புத்தாண்டு(Advance) வாழ்த்துக்கள்.

Wednesday, December 22, 2004

காமன் ஸென்ஸா? அப்படின்னா?!?!

போன வாரம் கேட்ட கேள்விகள் அறிவியலோட சம்பந்தப்பட்டதுன்னுதான் நினைச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா ரோஸா வசந்த் இதுக்கெல்லாம் காமன் ஸென்ஸ் வேணும் அப்படின்னுட்டார். அதுலேருந்து எனக்கு காமன் ஸென்ஸ்னா என்னன்னு ஒரே குழப்பமா போச்சு. அடுத்த பின்னூட்டதிலேயே, முதல் கேள்வி மட்டும் அறிவியல், இரண்டாவது கேள்வி காமன் ஸென்ஸ்னு போட்டு கூடகொஞ்சம் குழப்பிட்டார். நான் இதை ஒரு அறிவியல் புத்தகத்தில்தான் படித்தேன். அதனால் இவை அறிவியல் கேள்விகள் என்று நினைத்து விட்டேன்.

இரண்டுக்குமே ஆர்க்கிமீடிஸ் விதிதான் ஆதாரம். அப்படியிருக்கும்போது முதல் கேள்வி மட்டும் அறிவியலாகவும், இரண்டாவது காமன் ஸென்ஸாகவும் எப்படியிருக்கும் என்று எனக்குப் புரியவில்லை. அவர் விடை அளித்திருந்தாலாவது, அவருடைய Point of View எனக்குப் புரிந்திருக்கும்.

முதல் கேள்விக்கான விடை : இரண்டு வாளிகளின் எடையும் சமமாகத்தான் இருக்கும். மரத்துண்டு சிறிதளவு நீரை இடம் பெயர்த்துவிடுவதால், முதல் வாளியைவிட இரண்டாவது வாளியில் நீர் குறைவாயிருக்கும் என்பது உண்மையே. ஆனால் மேற்சொன்ன விதிப்படி, மிதக்கும் பொருள் ஒவ்வொன்றும், தான் மூழ்கியிருக்கும் பகுதியினால் இப்பொருள் முழுவதன் எடைக்குச் சமமான அளவு திரவத்தை இடம் பெயரச் செய்கிறது. எனவேதான், தராசின் தட்டுகள் சமநிலையில் இருக்கின்றன.

இரண்டாவது கேள்விக்கான விடை : ஒரு டன் மரம்தான் அதிக கனமுள்ளது. இங்கேயும் மேற்சொன்ன ஆர்க்கிமிடிஸ் விதிதான் Apply ஆகிறது. ஆர்க்கிமிடிஸ் விதி வாயுக்களுக்கும்(Gases) பொருந்தும் என்பதால், காற்றில் ஒவ்வொரு பொருளும் தனது எடையில் ஒரு பங்கை இழக்கிறது. இந்த எடையிழப்பு அந்தப் பொருளினால் இடம் பெயர்க்கப்பட்ட காற்றின் எடைக்குச் சமம். மரமும், இரும்பும்கூடத் தத்தம் எடையில் ஒரு பங்கை இழக்கின்றன. அப்படி பார்க்கும்போது ஒரு டன் இரும்பால் இடம் பெயர்க்கப்பட்ட காற்றின் எடையை விட, ஒரு டன் மரத்தினால் இடம்பெயர்க்கப்பட்ட காற்றின் எடை அதிகமாகவே இருக்கும். அதை ஒரு டன்னோடு கூட்டி வருவதுதான் ஒரு டன் மரத்தின் உண்மை எடை. அதனால் ஒரு டன் மரமே அதிக கனமுள்ளது.

ஒருவேளை ஆர்க்கிமிடிஸ் விதி, எடை போன்ற பௌதிக சமாசாரங்கள் அறிவியல் இல்லை என்று ரோஸாவசந்த் நினைக்கிறாரோ? அப்புறம் இந்த காமன் ஸென்ஸ்னா என்னன்னு எனக்கு சத்தியமா மறந்து போச்சு. யாராவது அதைப் பத்தி சொல்லுங்களேன்.

Friday, December 17, 2004

புதிரில்லை, அறிவியல்

வாரா வாரம் புதிரா கொடுத்து போரடிச்சுப் போச்சு. மாறுதலுக்காக இந்த வாரம் இரண்டு அறிவியல் கேள்விகள். அறிவியல்னதும் யாரும் பயப்பட வேண்டாம். அடிப்படையான அறிவியல்தான்(எனக்கு தெரிந்த அளவுக்குத்தானே நான் கேட்க முடியும்!!).

1. தராசின் ஒரு தட்டின் மீது விளிம்பு வரை நீர் நிரம்பிய வாளி ஒன்றை வைக்கவும். மற்றொரு தட்டின் மீதும் விளிம்புவரை நீர் நிரம்பியதும், ஆனால் அதனுள் மிதக்கும் ஒரு மரத்துண்டுடன் கூடியதுமான வாளியை வைக்கவும். இவை இரண்டில் எது அதிக கனமுள்ளதாயிருக்கும்?

2. எது அதிக கனமானது - ஒரு டன் இரும்பா? ஒரு டன் மரமா?

மேலேயுள்ள கேள்விகளுக்கு, விளக்கத்துடன் கூடியதான விடைகள் வேண்டும். தொடர்ந்து அறிவியல் கேள்விகள் கேட்கலாமா, வேண்டாமான்னும் ஒரு வரி சொல்லிப்போட்டிங்கன்னா நல்லாருக்கும்.

Tuesday, December 14, 2004

சும்மா ஜாலிக்கு



Saturday, December 11, 2004

பிளக்கர் கமென்ட்

வழக்கம் போல் டைனோ! ஆனா தமிழில்!!

இதோ அவருடைய பதில்.

யோசிப்பவரே... உங்களுக்காக தமிழில்.இது வெறும் ஆப்டிகல் இல்லூஷன்... தமிழில் தெரியவில்லை... காட்சி(ப்)பிழை? ('ப்'பனுமா கூடாதா?) ஆங்கிலத்துல யோசிச்சு தமிழுல தட்டச்சுனா இப்படித்தேன்... அதுக்குதான் இந்த புதிருக்கெல்லால் அங்ரேசிலேயே பதில் போடறது! நீங்க நிஜமாகவே இப்படி ஒரு சதுரம் செய்து அதை வெட்டி-ஒட்டிப் பாருங்க... மேலே இருக்கும் 'மஞ்ச-சிவப்பு' முக்கோணத்துக்கும்... கிழேயுள்ள 'நீல-பச்சை' முக்கோணமும் ஒன்றாக இணையாது. ஒரு சிறிய இடைவெளி கிடைக்கும். அந்த இடைவெளியின் பரப்பளவு ஒரு சிறிய சதுரத்திற்கு சமமானதாக இருக்கும்.-டைனோபி.கு.ஈ-தமிழ் பால சுப்ரா இதை முன்னாலயே பதிச்சிருக்கார்!

பால சுப்ரா பதிச்சதை நான் பார்க்கவில்லை டைனோ. இருந்தாலும் இது வலைப் பதிவுகளுக்குள் மறுபதிப்பானதற்க்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

பாலாஜியும் சரியான பதிலையே அளித்துள்ளார். அவருக்கும் நமது பாராட்டுக்கள்.

அப்புறம், பெருவாரியான(பெருவாரியான அப்படின்னா ஒரே ஒருத்தர்) வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க பிளாக்கர் கமென்டையும் சேர்த்துள்ளேன்.(இனியாவது கமென்ட் அடிங்கப்பா!).

Tuesday, December 07, 2004

எப்படிங்க இது?


கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்களேன்.

Saturday, December 04, 2004

டைனோவின் கெட்டப்பழக்கம்

நம்ம டைனோவுக்கு ஒரு கெட்டப்பழக்கங்க. எப்பவுமே சரியா விடை சொல்லிடறார். ஆனா அதை ஆங்கிலத்தில்தான் பின்னூட்டமிடறார். சரி அவர் வலைமேயும் கணினியில் தமிழ் தட்டச்சு வசதி இல்லயோ அப்படின்னு நினைச்சேன். ஆனா மத்த வலப்பதிவுகளில் தமிழில் பின்னூட்டமிடறார். நம்ம வலைத்துணுக்கில் மட்டும் ஆங்கிலம்! ஏன் இந்த ஓரவஞ்சனை டைனோ? வேற ஒன்னும் இல்லை, பதிலை நான் ஒரு தடவை தமிழில் அடிக்க வேன்டியிருக்குது பாருங்க. நான் அதை தமிழில் மொழிபெயர்த்து சொல்லலைன்னா, பாதி பேருக்கு வேற ஆங்கிலம் புரியாது பாருங்க(டேய்! இதெல்லாம் உனக்கே ஒவராத் தெரியல?).

சரி! சரி! பதிலைப் பார்ப்போம்.

மொத்தம் 24 பேருந்துகளை பார்ப்பீர்கள். ஏன்னா, நீங்க கிளம்பறதுக்கு முன்னால(அதாவது சாயங்காலம் 6 மணிக்கு முன்னால) சென்னையிலிருந்து கிளம்பின 12 பேருந்துகளும் அப்ப வழியில வந்துகிட்டுதான் இருக்கும். அதனால அந்த 12ஐயும் சேர்த்து மொத்தம் 24 பேருந்துகள்.