Tuesday, October 18, 2005

அட நாமளா இப்படி!?!

காலங்காத்தாலேயே (அதாவது 7.00 மணிக்கு) நல்ல தூக்கத்துல ஃபோன். வீட்டிலிருந்து. என்னன்னு பார்த்தா தினமலரில் நம்ம பிளாக்க பத்தி செய்தி வந்திருக்கு. அட பரவாயில்லையே! நம்ம இந்த அளவுக்கு வளர்ந்துட்டோமா! தினமலருக்கும், அதற்கு செய்தி சேகரித்து கொடுத்த புண்ணியவானுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

கடந்த சில மாதங்களாக எந்த புதிய பதிவும் பதியாமலிருந்ததற்கு, நேரமின்மை முக்கிய காரணமாயிருந்தாலும், அக்கறையின்மையும் ஒரு காரணம். இந்த இரண்டாவது காரணத்தை கொஞ்சம் நீக்க (இனிமேலாவது) முயற்சி செய்கிறேன்.

இன்றைக்கும் ஒரு எடை புதிர்தான். உங்கள் முன் மொத்தம் பன்னிரண்டு பந்துகள் இருக்கின்றன. எல்லாமே பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருக்கின்றன. இதில் ஒரே ஒரு பந்து மட்டும் எடையில் மற்றவற்றை விட கொஞ்சம் அதிகமாகவோ, கம்மியாகவோ இருக்கிறது. உங்களிடம் ஒரு தராசு இருக்கிறது. இந்த பந்தை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். ஒரே ஒரு நிபந்தனை, மொத்தம் மூன்று முறைதான் எடை போடலாம். அந்த பந்தை கண்டுபிடிச்சிட்டீங்கன்னா, உலக XI அணிக்கு ஆறுதல் பரிசா அனுப்பிடுங்க!

Saturday, July 02, 2005

பத்து பெட்டி தங்ககட்டி

இன்னைக்கு ஆபீஸ்ல ரொம்ப வெட்டியா இருந்தேனா! சரி, நாம சுமார் பத்து மாசத்துக்கு முன்னால வலைத்துணுக்குன்னு ஓன்னு ஆ'ரம்பிச்சோமே', அதுல எத்தன துணுக்கு எழுதியிருக்கோமுன்னு கணக்கெடுக்கலாமேன்னு, உக்காந்து துணுக்குகளை(துக்கடாக்களையும் சேர்த்துதான்) எண்ண ஆரம்பிச்சேன்.இதுவரை மொத்தம் 103 துணுக்குகள் பதிவாயிருக்கு(இது 104). சரி அத விடுங்க. நாம பத்து பெட்டி கணக்குக்கு வருவோம்.

ஒரு ராஜாகிட்ட நிறைய தங்கம் இருந்தது(வேற யார்கிட்ட இருக்க முடியும்?!?). பத்து பொற்கொல்லர்களை அழைத்து, அந்த தங்கத்தையெல்லாம் ஒரே அளவுள்ள தங்க கட்டிகளாக செய்து தர சொன்னார். ஒரே ஒரு பொற்கொல்லர் மட்டும் கொஞ்சம் தங்கத்தை லவட்டி விட்டு மீதியிருந்ததை சொல்லப்பட்ட அளவைவிட ஒரு சவரன் குறைவான தங்ககட்டிகளாக செய்து விட்டார். எல்லா பொற்கொல்லர்களும் தாங்கள் செய்த கட்டிகளை ஒரு பெட்டியில் அடுக்கி ராஜா முன் கொண்டு சென்றனர். இதற்குள் ராஜாவுக்கு பத்து பேரில் யாரோ ஒருவர் ஒரு சவரன் குறைவான தங்ககட்டிகள் செய்திருக்கிறார் என்ற செய்தி ஒற்றர் மூலம் கிடைத்துவிட்டது. இப்பொழுது ராஜாவின் முன் பத்து பெட்டிகளும் இருந்தன. யார் குற்றவாளி என்பதை ராஜா ஒரே ஒரு தடவை மட்டும் சில தங்ககட்டிகளை எடைபோட்டு கண்டு பிடித்துவிட்டார். எப்படி கண்டுபிடித்தார்?(ஆஆ...வ்)