Thursday, May 29, 2008

சிறைச்சாலை



ஒரு ஊரில் ஒரு விநோதமான சிறைச்சாலை இருந்தது. அந்த சிறைசாலைக்கு ஒரே நேரத்தில், நூறு கைதிகள் கொண்டு வரப்பட்டார்கள். அவர்கள் அனைவரின் முதுகிலும் ஒரு சிறிய வட்ட முத்திரையை பச்சை குத்தினார்கள், சிலருக்கு கருப்பு வண்ணத்திலும், சிலருக்கு சிவப்பு வண்ணத்திலும். தனது முதுகில் எந்த வண்ணத்தில் முத்திரை குத்தப்பட்டுள்ளது என்பது கைதிக்குத் தெரியாது. ஆனால், மொத்தம் நூறு பேர் என்பதும், பச்சை குத்தப்படும் வண்ணங்கள் கருப்பு, சிவப்பு என்பதும், எல்லா கைதிகளுக்கும் சொல்லப்பட்டது.

கைதிகள் அனைவருமே நன்கு படித்த அறிவாளிகள்(ஏதோ ஊழல் குற்றமாம்!!). ஒவ்வொரு கைதியும் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டனர். ஒவ்வொரு அறையிலும், ஒரு சுவற்றில் ஒரு வீடியோ கேமராவும், எதிர் சுவற்றில் ஒரு டிஸ்பிளே ஸ்கிரீனும் இருந்தது. மாதத்தின் கடைசி தினத்தன்று, அரை மணி நேரம், அந்த வீடியோ கேமராவும், டிஸ்பிளே ஸ்கிரீனும் வேலை செய்யும். அந்த நேரத்தில் எல்லா கைதிகளும் தங்கள் முதுகை கேமராவுக்கு காட்டியபடி இருக்க வேண்டும். அந்த நேரத்தில், தப்பித் தவறிக் கூட திரும்பிப் பார்க்கவோ, அல்லது ஏதாவது சைகை செய்யவோ கூடாது. மீறினால் மரணதண்டனை நிச்சயம். அதே நேரத்தில், டிஸ்பிளே ஸ்கிரீனில் தெரியும் மற்ற கைதிகளின் முதுகை கவனித்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கைதியின் அறையிலிருக்கும் ஸ்கிரீனில், அந்த கைதியின் அறையைத் தவிர, மற்ற கைதிகளின் அறைகள் மட்டுமே தெரியும்.

இந்த வீடியோ படம் காட்டுதல் முடிந்ததும், யாருக்காவது தனது முதுகில் குத்தப்பட்டிருக்கும் வண்ணம் எதுவென்று தெரிந்தால், வார்டனிடம் சொல்லலாம். கைதி கூறுவது சரியாக இருந்தால் அந்தக் கைதி அப்பொழுதே விடுவிக்கப்படுவான். தவறாக இருந்தால் மரண தண்டனை. அதனால், யாரும் வெறும் யூகங்களை முயல மாட்டார்கள். அப்படி சரியாக சொல்லி விடுதலையாகிவிட்ட கைதியின் காலி அறையே, அடுத்த மாததிலிருந்து வீடியோவில் தெரியும். அப்படி காலி அறை தெரிந்தால் அந்தக் கைதி விடுதலையாகிவிட்டான் என்பது நிச்சயம்.

எல்லா கைதிகளுக்குமே சீக்கிரம் விடுதலையாகும் எண்ணம் இருக்கிறது; அதே நேரத்தில் சேதமில்லாமலும்!

இந்தச் சூழ்நிலையில், எல்லா கைதிகளும் விடுதலையாவதற்கு, குறைந்தபட்சமாக எத்தனை மாதங்கள் ஆகும்? அதிக பட்சமாக எத்தனை மாதங்கள் ஆகும்?