Tuesday, March 20, 2007

கிறுக்கு பிடிச்சாச்சு!!!

இந்த தடவை சிவகுமார் மாட்டி விட்டு விட்டார். முதலில் மறுத்து விடலாம் என்றுதான் யோசித்தேன். பிறகு, சரி பரவாயில்லை எழுதுவோம் என்று முடிவெடுத்ததால், எனது கிறுக்குத்தனங்களையெல்லாம் படிக்க வேண்டிய கட்டாயத்துக்கு நீங்கள் ஆளாகிப் போனீர்கள்!!!

முதலாவது மறதி - செல்ஃபோன் முதல், டிக்-ஷனரியளவு பெரிய புத்தகம்வரை கூட, இடது கையில் அதை வைத்து கொண்டே, வலது கையால் வீடு முழுக்கத் தேடுவேன். சமீபத்திய அவஸ்தை, அறையிலிருந்து கிளம்பும்பொழுது(இந்த ஞாயிற்றுக்கிழமைதான்!) சமையலறையில் குழாயை அடைக்காமலே சென்று விட்டதால், இரவு வீடு திரும்பியபொழுது வீடு தெப்பக்க் குளமாக மாறியிருக்க, இரவு உறக்கம் போனது. இதெல்லாம் சகஜம்தானேங்கறீங்களா? இது இந்த மாதத்தில் இரண்டாவது முறை. இதற்கென்ன சொல்கிறீர்கள்?!?!.

கொள்(ல்)கை உறுதி - சில விஷயங்களில் தோல்விக்கு இதுதான் காரணம் என்று வெளிப்படையாக தெரிந்தால்கூட, அதுதான் சரியான அல்லது நல்ல வழிமுறை என்று எனக்குள் தோன்றிவிட்டால், கொஞ்சம் கூட வழிமுறையை மாற்றிக் கொள்ளாமல், அதே வழியைதான் திரும்ப திரும்ப கையாள்வேன்.

சோம்பேறித்தனம் - கொஞ்ச நஞ்சமல்ல. இது நிறையவேயிருக்கிறது. சில சமயம், மதிய சாப்பாட்டுக்கு போவதற்கு சோம்பல்பட்டு, சாப்பிடாமலேயே கூட இருந்து விடுவேன். பதிவுகள் கூட இதே காரணத்தினால்தான், சிறு சிறு பதிவுகளாக போடுகிறேன்.

தனிமை - "Cast Away" படம் பார்த்தபொழுது, அடடா!! நாம் இந்த மாதிரி ஒரு தீவில் மாட்டி கொண்டிருந்தால் எவ்வளவோ நன்றாயிருக்குமே, என்று நினைக்குமளவிற்கு தனிமை விரும்பி. பல சமயம் கொடுமையாயிருந்தால் கூட, அந்த இனிமையை ரசிக்க விரும்புகிறேன்!!!

Imitation(சரியான தமிழ் வார்த்தை கிடைக்கவில்லை!!) - கொஞ்சம் பெரிய மனிதர்கள் ஏதாவது செய்தால், நம்மால் அது முடியுமா முடியாதா என்பதை பற்றி கொஞ்சம் கூட யோசிக்காமல் அது போல் செய்து பார்ப்பது. சிறந்த உதாரணம் சுஜாதா கதை எழுதிறார் என்பதற்காக நானும் கதை எழுதுவது!!!

அப்புறம், எனக்கு யார் யாருடைய கிறுக்குத்தனங்களை பற்றியெல்லாம், தெரிந்து கொள்ள வேண்டுமென்று ஆசையென்றால்,

1. இலவச கொத்தனார்
2. இட்லிவடை
3. சிபி
4. PKP
5. பொன்ஸ்

இதில் யார் யாரெல்லாம் கண்டிப்பாக எழுதுவார்கள் என்று தெரியவில்லை. பார்க்கலாம்!!!!

14 comments:

Show/Hide Comments

Post a Comment